1. இந்திய ஒருமைப்பாடு
பல்வேறு இன, மத, மொழி, பழக்க வழக்கங்களைக் கொண்டிருக்கும் மக்களின் தொகுப்பாக விளங்குவது நம் தேசம். நம் இனவுணர்வும், மொழிப் பற்றும் சிறிதும் சிதைந்துவிடாமல் பாதுகாத்துப் பராமரிக்கப்பட வேண்டும். தமிழ் இனத்தின் நலனுக்கும், தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், ஊறு விளைவிக்கும் எந்தப் போக்கையும் நாம் எள்ளளவும் அனுமதிக்கலாகாது.
அதே நேரத்தில் எதன் பொருட்டும், எவர் பொருட்டும் இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு எதிரான எந்த தடவடிக்கையிலும் நாம் என்றும் ஈடுபடக் கூடாது.
”பாரத நாடு பழம்பெரும் நாடு; நாம் அதன் மக்கள்” என்ற உணர்வை இடையறாது வளர்த்தெடுப்பது நம் இயக்கத்தின் முதல் நோக்கம் ஆகும்.
2. ஜனநாயகக் கோட்பாடுகள்
ஆட்சி முறைகளிலேயே தீமை குறைந்தது ஜனநாயக ஆட்சி முறை ஒன்றுதான். மகாத்மா காந்தியும், ஜவகர்லால் நேருவும், நாட்டு விடுதலை வேள்வியில் ஈடுபட்ட மிகப் பெரிய தலைவர்களும், சுதந்திர இந்தியாவில் ஜனநாயக ஆட்சி முறையே ஆரங்கேற வேண்டும் என்று ஆசைப்பட்டனர். இன்று 18 வயது நிறைந்த ஒவ்வொரு தனி நபரும் வாக்களிக்கும் உரிமையைப் பெற்றிருக்கிறார்கள். தாங்கள் விரும்பும் ஆட்சியைத் தேர்வு செயும் உரிமை வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. ஜனநாயகத்தின் ஆதார உரிமைகளான பேச்சுரிமை, எழுத்துரிமை, கூட்டம் கூடும் உரிமை, ஆட்சியதிகாரத்திற்கு அஞ்சாமல் தவறுகளைத் தட்டிக் கேட்கும் உரிமை, தவறான அரசியல்வாதிகள், அதிகாரிகள் நடத்தைகளை விமர்சிக்கும் உரிமை, மக்கள் நலனுக்கு எதிரான சட்டங்களையும், திட்டங்களையும் எதிர்த்து அறவழிகளில் போராடும் உரிமை போன்றவற்றில் ஏதேனும் ஒன்று மறுக்கப்பட்டால் மக்களைத் திரட்டி நம் காந்திய மக்கள் இயக்கம் முனைப்பாகப் போராடும்.
3. சமய நல்லிணக்கம்
”ஒன்று பரம்பொருள், நாம் அதன் மக்கள்” என்பதுதான் நம் இயக்கத்தின் இலட்சியம். மனித குலத்திற்கு அமைதியையும், நல்வழியையும் கொண்டு சேர்ப்பதே அனைத்து மதங்களின் ஒரே நோக்கமாக இருக்கிறது. சமய நல்லிணக்கம் பராமரிகப்பட்டால்தான் இந்திய ஒருமைப்பாடு நிலைக்கும். மத வேற்றுமைகளால் எந்த இடத்திலும் மனித ரத்தம் சிறிதும் சிந்தப்படக்கூடாது. மத நல்லிணக்கத்தை மக்கள் மனங்களில் விதைக்கும் நடவடிக்கைகளில் இயக்கம் ஈடுபடும்.
4. சாதி பேதமற்ற சமத்துவம்
சாதிகளற்ற சமுதாயத்தை உருவாக்க மக்கள் மனங்களில் மாற்றங்களை ஏற்படுத்துவது நம் இயக்கத்தின் நோக்கமாக இருப்பினும், இந்த மாற்றங்கள் உடனே நிகழ்வதற்கான வாய்ப்பில்லை. சாதிய அமைப்புக்கு ஆதரவான சட்டங்களும், சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு நடவடிக்கைகளும், கல்விக் கூடங்களில் சேர்வதிலிருந்து, பணியிடங்களில் நியமனம் பெறுவது வரை அரசே சாதிக்குத் தரும் முக்கியத்துவமும் நீடிக்கும்வரை சாதிகளற்ற சமுதாயத்தைச் சமைப்பது சாத்தியமில்லை.
ஆனால், சாதி அடிப்படையில் உயர்வு தாழ்வு கற்பிக்கும் மனோபாவத்திலிருந்து மக்களை விடுவிக்க முடியும். காலங்காலமாக ஒடுக்கப்பட்ட மக்கள் சமூகத்தில் சம வாய்ப்புப் பெறவும், இரட்டைக் குவளை போன்ற தீண்டாமை அடையாளங்கள் அகற்றப்படவும், உயர் கல்வியில் தலித் மக்களுக்கு முன்னுரிமை வழங்கவும் நம் இயக்கம் சகல தளங்களிலும் அறவழியில் முனைப்பாகப் போராடும்.
5. தற்காப்புப் பொருளாதாரம்
புதிய பொருளாதாரக் கொள்கையை இந்திய அரசு 1991 – இல் பின்பற்றத் தொடங்கியது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது என்பது உண்மை. ஆனால், அதன் உடன் நிகழ்வாக ஏழ்மை குறைந்திருக்க வேண்டும். உலகப் பணக்காரர்கள் பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்திருக்கும் நம் நாடு மனிதவள மேம்பாட்டில் 177 நாடுகளுக்கான தர நிர்ணயப் பட்டியலில் 128 – வது இடத்தில் இருக்கிறது. வறுமைமிக்க போட்ஸ்வாளா போன்ற ஆப்பிரிக்க நாடுகளை விட இந்தியா பின்தங்கிய நிலையில் இருப்பது எவ்வளவு பெரிய அவலம்! புதிய பொருளாதாரம் சில ஆயிரம் செல்வந்தர்களையும், பல கோடி ஏழைகளையும் உருவாக்கியிருப்பதுதான் உண்மை. பன்னாட்டு நிறுவனங்களின் சுரண்டல் சந்தையாக நம் நாடு மாறிவிட்டது. சீனாவின் உற்பத்திப் பொருள்கள் அமெரிக்க, ஐரோப்பிய, ஆப்பிரிக்க நாடுகள் அனைத்தையும் வளைத்து அவற்றைச் சீனாவின் சந்தையாக்கிவிட்டன. புதிய பொருளாதாரத்தைப் பயன்படுத்தி தன் உற்பத்திப் பொருட்களை உலகம் முழுவதும் கடை பரப்பிவிட்டது சீனா. ஆனால், நாமோ பன்னாட்டுப் பொருள்கள் இறக்குமதியாகி, நம் நுகர்வைத் தாண்டி, நம் செல்வத்தைச் சுரண்டி முதலாளித்துவ நாடுகள் கொழுத்துச் செழிப்பதற்கு விரிந்த சந்தையாக இழிந்து நிற்கிறோம். காந்தியப் பரவல் முறைப் பொருளாதாரமே இந்த மண்ணுக்கு உகந்தது. உற்பத்தி, நுகர்வு, பங்கீடு போன்ற அனைத்துத் துறைகளிலும் உண்மையான பரவல் முறை அமைவதற்கான வழிகளில் அரசின் செயல்முறைகள் வடிவம் பெற நம் இயக்கம் பாடுபடும். காந்தியப் பரவல் முறைப் பொருளாதாரம் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் உருவாக்குவது இந்த இயக்கத்தின் இன்றியமையாத பணியாக இருக்கும்.
6. ஆண் – பெண் சமத்துவம்
மதங்களுக்கிடையே சமத்துவம், சாதிகளுக்கிடையே சமத்துவம் என்று பேசும் மனிதகுலத்தில் இன்றுவரை ஆண் – பெண் சமத்துவம் முழுமையாக வந்து சேரவில்லை. கல்வியும், வேலை வாய்ப்பும், பொருளாதாரத்தில் தற்சார்பும் பெண்களுக்கு வாய்க்கும்போதுதான் இருபாலார் இடையே சமத்துவம் வந்து சேரும். கிராமப்புறப் பெண்களிடம் கல்வி குறித்த விழிப்புணர்வை உருவாக்கவும், ஆணின் துணையின்றிப் பெண்ணே சுயமாகப் பொருளீட்டும் பணிகளில் ஈடுபடவும், ஒரே வேலைக்கு ஒரே ஊதியம் என்ற நிலையை உருவாக்கவும், பாலியல் வன்முறைகளிலிருந்து பெண்களைப் பாதுகாக்கவும் இந்த இயக்கம் முழு மூச்சுடன் செயற்படும்.
7. கிராமக் குடியரசு
அரசியல் அதிகாரத்தைப் பரவலாக்குவதன் மூலமே பரவல் முறைப் பொருளாதாரத்தைச் செயல்படுத்த முடியும். ஒவ்வொரு ஊருக்கும் அதன் தேவைகளுக்கேற்ப படைக்கவும், பகிர்ந்தளிக்கவும் அதிகாரம் அமைய வேண்டும். மக்களுக்கு வேண்டியவற்றை கிராம சபை தீர்மானிக்க வேண்டும். கிராம சபையின் முடிவுகளைப் பஞ்சாயத்து செயற்படுத்த வேண்டும். தனிமனித வளர்ச்சிக்கும், சமூக மேம்பாட்டிற்கும் இந்த அமைப்பு முறையே வழி வகுக்கும். உள்ளாட்சி அமைப்புகள் உரிய அதிகாரங்கலோடும். நிதி வசதியோடும் இயங்குவதற்கு 1992 – இல் 73 மற்றும் 74 -வது அரசியல் சட்டத் திருத்தம் உருவாக்கப்பட்ட பின்பும் உள்ளாட்சி அமைப்புகளாக அவை செயல்படுவதற்கான அதிகாரமும், நிதி வசதியும் அரசிடமிருந்து பெறும் சூழல் முழுமையாகக் கிடைக்கவில்லை. காந்தியக் கனவின்படி சுயேச்சையாக இயங்கும் கிராமக் குடியரசுகள் அமைந்தால் நகரங்களை நோக்கி எந்தவொரு கிராம மக்களும் செல்ல வேண்டிய அவசியமே இல்லை. அரசமைப்புச் சட்டம் வழங்கியிருக்கும் அதிகாரங்கள், நிதி ஒதுக்கீடு மாநில அரசிடமிருந்து பரிபூரணமாக உள்ளாட்சி அமைப்புகளிடம் வந்து சேர நம் இயக்கம் போராடும்.
8. சிறுதொழில் பாதுகாப்பு
கனரகப் பெருந்தொழில்களுக்கு முதலீடளித்து நேருபிரான் தொடங்கி வைத்த தொழில் வளர்ச்சி சிறுதொழில், கிராமக் குடிசைத் தொழில்களைச் சீர்குலைத்து விட்டது. மொரார்ஜி தேசாய் தலைமையில் 1977 – இல் அமைந்த மத்திய அரசு சிறுதொழில்களுக்கும், குடிசைத் தொழில்களுக்கும் பாதுகாப்பு வேலியிட்டுப் பராமரித்தது. ஆனால், புதிய பொருளாதாரக் கொள்கை அந்தப் பாதுகாப்பு வேலியைத் தகர்த்துத் தரைமட்டமாக்கிவிட்டது. ஆறு லட்சத்திற்கும் மேற்பட்ட கிராமங்களைக் கொண்ட நம் நாட்டில் வேலையின்மைக்கு முற்றுப்புள்ளி வைக்கப் பெருமளவில் சிறு தொழில்களையும், கிராமக் குடிசைத் தொழில்களையும் நம் அரசுகள் வளர்த்தெடுக்க வேண்டும். மக்கள் தேவையை மையமாகக் கொண்ட உற்பத்தி முறையே (Production for Mass) நமக்கு உகந்தது.
9. வேளாண்மை வளர்ச்சி
”இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பு விவசாயம்” என்ற பெருமை இன்று பறிபோய்விட்டது. விளைநிலங்களின் பரப்பு குறைந்துவிட்டது. உணவுப் பொருள் உற்பத்தியும் குறைந்துவிட்டது. வேளாண்துறை வளர்ச்சி விகிதம் 2% என்ற நிலைக்கு தாழ்ந்துவிட்டது. சிறப்புப் பொருளாதார மண்டலப் போர்வையில் பல்லாயிரம் ஏக்கர் விளைநிலம் உள்நாட்டு, பன்னாட்டுப் பெருவணிக நிறுவனங்களிடம் கொள்ளை போய்விட்டது. விவசாயக் கூலிகள் வேலை தேடி நகரங்களில் குவிவதால் நகர்ப்புறங்கள் அடிப்படை வசதிகள் ஏதுமற்ற சேரிகளாகச் சீரழிந்து கிடக்கின்றன. ஒரு லட்சத்து 50 ஆயிரம் ஏழை விவசாயிகள் 1997 முதல் 2005 வரை மகாராஷ்டிரம், ஆந்திரம், கர்நாடகம், மத்தியப் பிரதேசம், கேரளம் ஆகிய 5 மாநிலங்களில் தற்கொலை செய்து கொண்டனர். விவசாயத்தில் அரசு முதலீடு குறைந்து வருகிறது. வங்கிக் கடன் அரிதாகிவிட்டது. உணவுப் பொருள் உற்பத்தி நாளுக்கு நாள் குறைந்து வருவதால் விலைவாசி விஷம்போல் ஏறுகிறது. இந்தப் போக்கைத் தடுக்க, வேளாண் வளர்ச்சியைப் பெருக்க விவசாயம் சார்ந்த பேரறிவு படைத்த வல்லுனர்களின் கருத்துக்களைத் திரட்டி, அரசைச் செயற்படுத்த நிர்ப்பந்திக்கும் சூழலை உருவாக்க வேண்டும்.
10. பசுமைச் சூழல் பராமரிப்பு
உலகம் வெப்பமயமாதல் குறித்த பிரக்ஞை இப்போதுதான் கண்விழித்திருக்கிறது. இயற்கையின் சமநிலையை மனித இனத்தின் பேராசைச் செயல்கள் கடுமையாகக் கெடுத்ததன் விளைவை நாம் அனுபவிக்கத் தொடங்கியிருக்கிறோம். அது நாட்டின் இயற்கை வளம் சீராகப் பாதுகாக்கப்பட, அதன் மொத்த நிலப்பரப்பில் 30% காடுகள் இருக்க வேண்டும். தமிழகத்தில் 15% காடுகள் கூடப் பராமரிக்கப்படவில்லை. சமூக விரோதிகளால் காடுகள் அழிக்கப்படுகின்றன. பசுமைச் சூழல் பராமரிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை மக்களிடையே உணர்த்துவதோடு, நம் இயக்கம் நேரிடையாக மரம் வளர்ப்பு போன்ற பணிகளில் முனைப்பாக ஈடுபடும். நீர்நிலைகளின் தூய்மையைப் பராமரிப்பதில் முழுமையாகத் தன்னை அர்ப்பணிக்கும்.
11. தாய் மொழி வழிக் கல்வி
இந்தியாவில் பல்கலைக் கழகத்தில் படிப்பதைவிட, தொடக்கப் பள்ளிகளில் படிப்பதற்கு அதிகம் செலவாகிறது. தங்கள் ஆண்டு வருமானத்தில் 28% குழந்தைகள் தொடக்கக் கல்விக்குப் பெற்றோர்கள் செலவழிக்க வேண்டியுள்ளது. ‘தொடக்கக் கல்வியில் தனியார் துறை ஈடுபாடு அதிகரித்தால் ஏழைகளுக்குக் கல்வி எட்டாக் கனியாகிவிடும்’ என்று யுனெஸ்கோ எச்சரித்துள்ளது. கல்வியைப் பெறுவது மக்களின் அடிப்படை உரிமை. சுதந்திரம் கிடைத்து 63 ஆண்டுகளுக்குப் பின்புதான் 14 வயது வரை இலவச, கட்டாயக் கல்வியை நடைமுறைப்படுத்த மத்திய அரசு முன்வந்திருக்கிறது. தொடக்கக் கல்வி முதல் உயர்கல்வி வரை அரசால் இலவசமாக வழங்கப்பட வேண்டும். எல்லா நிலைகளிலும் பயிற்று மொழி தாய் மொழியாகவே இருக்க வேண்டும். தாய் மொழி வழிக் கல்வியே கற்பவரின் சிந்தனையையும், படைப்பாற்றலையும் மேம்படுத்தும் என்பது உலகம் முழுவதும் உள்ள கல்வியாளர்களின் கருத்து. ஆங்கிலம் ஒரு பாடமொழியாகப் பயிற்றுவிக்கப்பட வேண்டும். சமச்சீர் கல்வி, அருகாமைப் பள்ளிகள் நடைமுறைக்கு வரும்போதுதான் கல்வி வளர்ச்சி முழுமை பெறும். சமச்சீர் கல்வியில் அரசின் அணுகுமுறை அதன் நோக்கத்தை நிறைவேற்றுவதாக இல்லை. அனைவருக்கும் சமச்சீர் கல்வி, அரசுக் கல்விக் கூடங்களில் தரமான கல்வி, மருத்துவம், பொறியியல் உட்பட அனைவருக்கும் சமச்சீர் கல்வி, உயர்கல்வி வரை அனைவருக்கும் இலவசக் கல்வி என்ற லட்சியம் நிறைவேற இடையறாது குரல் கொடுப்பதும், அதற்காக மக்களைத் திரட்டுவதும் இந்த இயக்கத்தின் தலையாய நோக்கமாக இருக்கும்.
12. சுற்றுப்புறச் சுகாதாரம்
சுற்றுப்புற சுகாதாரத்தின் மேன்மை குறித்து இன்றளவும் நம் மக்களுக்குப் போதிய விழிப்புணர்வு இல்லை. அரசின் துணையின்றியே நம் சுற்றுப்புறத்தை நாம் சிறப்பாகப் பேண முடியும். மகாத்மா காந்தி சுற்றுப்புறச் சுகாதாரத்திற்கு முன்னுரிமை வழங்கியதோடு நின்றுவிடாமல், தாமே முன்மாதிரியாகச் செயல்பட்டு நமக்கு வழிகாட்டினார். ஆயிரம் வார்த்தைகளைவிட ஒரு செயல் மேலானது. காந்திய மக்கள் இயக்கத்தின் உறுப்பினர்கள் அனைவரும் தமிழகம் முழுவதும் சுற்றுப்புறத்தைத் தூய்மைப்படுத்தும் பணியில் தாங்களே தொடர்ந்து ஈடுபட்டு மக்களை நெறிப்படுத்துவர்.
13. மது விலக்கு
காந்திய நெறிகளில் உயிர்த் தலமாக விளங்கும் வாழ்க்கைக் கோட்பாடுகளில் ஒன்று மதுவிலக்கு. மாநில அரசின் தவறான போக்கினால் தமிழகம் சாராயச் சமுதாயமாக சரிந்துவிட்டது. மாநில அரசுக்கு மதுவிற்பனை மூலம் ஆயத்திர்வை, விற்பனை வரி இனங்களில் ஆண்டுக்கு 12 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் வருகிறது. பல்வேறு இலவசத் திட்டங்களுக்கு இந்த வருவாயே பயன்படுத்தப்படுகிறது. மக்களைக் குடிபோதையில் ஆழ்த்தி, அவர்களுடைய வருவாயைத் தவறான வழியில் சுரண்டி வறுமைப் பள்ளத்தில் தள்ளிவிடும் கொடுமையில் ஈடுபடுவது ஒரு நல்லரசின் நல்லடையாளம் இல்லை. குதிரைப் பந்தயம், லாட்டரி சீட்டு என்னும் இரண்டு தீமைகளைத் தடை செய்த தமிழக அரசு மூன்றாவது பெரிய தீமையாகிய மதுக்கடைகளுக்குத் தடை விதிக்க வேண்டும். பூரண மதுவிலக்கு நம் தமிழகத்தில் நடைமுறைக்கு வர அறவழியில் இந்த இயக்கம் களம் காணும்.
14. ஊழலற்ற ஆட்சி முறை
யார் ஆட்சி நாற்காலியில் அமர்ந்தாலும் ஊழல் பெருக்கெடுக்கிறது. தவறான வழியில் பொருள் குவித்து வாழ்க்கைச் சுகங்களை அனுபவிக்கும் ஆசை இன்று வெறியாக வளர்ந்துவிட்டது. பொது வாழ்க்கை புனிதமானது. மக்கள் பணி இறைப்பணியைவிட உன்னதமானது. ஆட்சியின் மேல் மட்டத்திலிருந்து கீழ்மட்டம் வரை ஊழல் ஊடுருவிவிட்டது. ஊழல் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் தண்டனைக்குள்ளாக்கப்பட வேண்டும். ஊழல் செய்பவர்களுக்குப் பொதுவாழ்வில் இறுதி வரை இடமில்லை என்ற நிலை உருவாக்கப்பட வேண்டும்.
15. நேர்மை நிறைந்த தேர்தல்
ஜனநாயக உடலில் உலவும் உயிர்க்காற்று தேர்தல். மக்கள் தங்கள் விதியைத் தாங்களாகவே எழுதிக் கொள்ளும் வாய்ப்பை வாக்குச் சீட்டு வழங்குகிறது. பணத்திற்காகவும், மலிவான வாக்குறுதிகளுக்காகவும் மனம் மயங்கி மக்கள் வாக்களிக்கும் நிலை வளர்ந்தால் தன்னலம் மிக்க தவறான மனிதர்களே அதிகார நாற்காலியில் வந்து அமரும் அவலம் நேரும். கள்ளவாக்குப் போடுதல், பணத்தையும் பொருள்களையும் கொடுத்து வாக்குப் பெறுதல், மதுவை வெள்ளமாய் ஓடவிட்டு மக்களை மயக்கி வாக்குகளை அள்ளிக் குவித்தல், சாதி – மத உணர்வுக்கு இடமளித்து வாக்கு வழங்குதல் என்ற தவறான போக்குகளால் ஜனநாயகம் சிதைந்துவிடும். ஒவ்வொரு கிராமத்திலும் வாக்குச் சீட்டின் வலிமையுணர்த்தி, தேர்தல் முறைகேடுகளுக்கு எதிரான விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும்.
16. சாத்வீக சட்ட மறுப்பு
மக்கள் நலனுக்கு எதிரான சட்டங்களை எதிர்த்து அறவழியில் போராட நம் அண்ணல் காந்தி நமக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறார். போர்க்குணத்தை மக்கள் இழந்துவிட்டால் சட்டத்தின் பேரால் காட்டாட்சியே தலை விரித்தாடும். சட்டத்தைக் காட்டி அதிகார வர்க்கம் நம்மை அடிமைப்படுத்த முயலும். சமூக நலனுக்கு எதிரான தீமைகள் எந்த வடிவத்தில் வந்தாலும், எவ்வளவு சக்தி மிக்கதாக இருந்தாலும் தார்மீக ஆவேசத்துடன் வன்முறை கலவாத அறவழிப் போராட்டங்களில் மக்களை ஈடுபடுத்தும் வேள்வியில் நம் இயக்கம் முனைப்பாக ஈடுபடும்.
17. எளிய வாழ்க்கை முறை
தேவைகளுக்கேற்ப ஆசைகள் அமைய வேண்டும். ஆசைகளுக்கேற்ப தேவைகளை அதிகரிக்கலாகாது. இன்று நம் மீது படையெடுத்திருக்கும் மேலை நாடுகளின் வணிகக் கலாச்சாரம் எளிமையில் நிறைவு காணும் நம் பாரம்பரியப் பண்பாட்டின் ஆணிவேரையே அறுத்துவிட்டது. நுகர்வு மனித மனங்களில் இன்று வெறியாக வளர்ந்துவிட்டது. சுகபோகங்களில் மிதக்க விரும்பும் மனம் எந்தப் பாவத்தையும் செய்யவும் தயங்காது. தனி மனித வாழ்க்கை முறையும், பொது வாழ்க்கை நெறிகளும் பாழ்பட்டுப் போனதற்கு வரைமுறையற்ற நுகர்வு வெறியே அடிப்படைக் காரணமாகும். ஏழ்மை என்பது எதுவும் இல்லாதிருப்பது. எளிமை என்பது தேவைகளையும், ஆசைகளையும் அளவோடு அனுபவிப்பது. காந்தியம் ஏழ்மையைப் போக்கி எளிமையை மக்களிடம் கொண்டு சேர்க்க முயல்வது. ஆடம்பர ஆரவாரங்களின் பிடியிலிருந்து மக்களை விடுவித்து எளிய வாழ்வின் பெருமையை நிலைநிறுத்த இந்த இயக்கத்தில் உள்ளவர்கள் முன்மாதிரியாக வாழ்ந்துகாட்ட வேண்டும்.
18. அனைவருக்கும் வேலை வாய்ப்பு
இலவசமாக எவரிடத்தும் எதையும் பெறாமல், சுயமாக உழைத்துத் தன்னுடைய தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதில்தான் வாழ்க்கையின் கம்பீரம் கூடும். அரசிடம் யாசகம் கேட்க வேண்டிய அவசியமில்லை. வேலை வாய்ப்பைப் பெருகச் செய்வதுதான் அரசின் நோக்கமாக அமைய வேண்டும். வேலையின்மை வறுமையை வளர்க்கும். வறுமை வன்முறைக்கு வழிக் கதவைத் திறக்கும். வன்முறை சட்டம் – ஒழுங்கைச் சிதைக்கும். சமூகம் அமைதியையும் வளர்ச்சியையும் இழக்கும். காந்தியப் பாதையில் சிறு தொழில் – குடிசைத் தொழில் பல்கிப் பெருகினால் வேலையின்மை மறையும். கார், டி.வி, பிரிட்ஜ் என்ற நுகர்வுப் பொருள்களைப் பன்னாட்டு நிறுவனங்கள் உற்பத்தி செய்ய அரசு வசதிகள் செய்து கொடுப்பதால் சிலருக்கு வேலைகிடைக்கும். சிலரது வீட்டில் வளம் பெருகும். பெருமுதலீட்டில் ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பை வழங்கும் நிறுவனங்களுக்கு ரத்தினக் கம்பளம் விரிப்பதைவிட, மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்யும் சிறு தொழில்களில் குறைந்த முதலீட்டில் அதிக மக்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தரும் பாதையில் அரசின் தொழில் கொள்கை அமைவதற்கு நம் இயக்கம் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்ளும்.
19. நதிநீர் இணைப்பு
தமிழகத்தில் நீர் வளம் குறைவு. கர்நாடகத்தையும், கேரளத்தையும், ஆந்திரப் பிரதேசத்தையும் ஆண்டுதோறும் நம்பியிருக்க வேண்டிய நிலை நமக்கு. மழைக்காலத்தில் வெள்ளம் பெருக்கெடுத்துக் கடலில் வீணாய் கலப்பதைக் கைகட்டி வேடிக்கை பார்க்கும் நம் அரசு. இருக்கும் சில நதிகளின் தூய்மையைக் கெடுக்கும் பணியில் ஈடுபடும் மனோபாவம் நம் வணிக நிறுவனங்களுக்கு. நம் வாழ்வாதாரமாகிய தண்ணீரைச் சேமிக்கவும், நீர்நிலைகளின் தூய்மையைப் பாதுகாக்கவும் போர்க்கால அடிப்படையில் இதுவரை நடந்திருக்கும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, ஆழப்படுத்தும் பணி ஒழுங்காக நடந்தால் பாதிப் பிரச்சினை தீர்ந்துவிடும். தேசிய நதிகளின் இணைப்புக்காக நாம் காத்திருக்க இயலாது. முதலில் தமிழகத்தின் நீர்நிலைகள் இணைக்கப்பட வேண்டும். ஒரு துளி நீரும் வீணாகதபடி திட்டமிடல் வேண்டும்.
20. அரசியல் சட்டத் திருத்தம்
நம் அரசமைப்புச் சட்டம் அதிகாரக் குவிப்புக்கு ஆதரவானது. கிராம சுயாட்சி வரை அதிகாரம் பரவலாக்கப்பட வேண்டும். அதிகாரப் பரவலை முறைப்படுத்தும் வகையில் அரசமைப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டும். மத்திய அரசிடம் மாநிலங்களும், மநில அரசுகளிடம் உள்ளாட்சி அமைப்புகளும் பிச்சைப் பாத்திரம் ஏந்தி நிற்கும் நிலைக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும். அரசமைப்புச் சட்டம் முழுமையாக மறுபரிசீலனைக்கு நாட்டு நலன் சார்ந்த சட்டவியல் அறிஞர்களின் பார்வைக்குட்படுத்தப்பட்டு இன்றியமையாத திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.