பெரியோர்களே! தாய்மார்களே! இளைஞர்களே! மாணவர்களே! இளைய சகோதரிகளே!
இந்தியாவில் இரண்டு இந்தியா இருப்பதாக நீங்கள் உணர்கிறீர்களா?
“ஆள்பவர் இந்தியா” வளமாகவும், “ஆளப்படுபவர் இந்தியா” வறுமையிலும் வாழ்வதை நீங்கள் அறிவீர்களா? உலகிலேயே மிக அதிகமாக உணவின்றிப் பசியோடு போராடுபவர்களும், போதிய கல்வியின்றி அறியாமை இருட்டில் அழுந்திக்கிடப்பவர்களும், பள்ளிக்குச் செல்ல வழியின்றிக் குழந்தைத் தொழிலாளர்களாய் வறுமையில் வாடுபவர்களும் நம் இந்தியாவில்தான் இருக்கின்றனர் என்ற உண்மை உங்களுக்குத் தெரியுமா? நம் விதியெழுதும் அரசியல் உலகம் சாக்கடையைவிட மோசமாக நாறிக்கிடப்பதை நினைவில் நிறுத்துகிறீர்களா? கட்சிப் பிரமுகர்களின் களங்கம் நிறைந்த வாழ்க்கை நடைமுறை உங்கள் கண்களில் படுகிறதா? பொதுவாழ்வின் மேலான பண்புகள் அனைத்தும் பறிபோய்விட்டதைப் பார்த்து வருந்துகிறீர்களா? இந்த வினாக்களுக்கெல்லாம் `ஆம்’ என்பதுதான் உங்கள் விடையென்றால் இவற்றிற்குத் தீர்வுகாண நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?
`சமுதாயத் தீமைகளைச் சகித்துக் கொண்டு இனியும் மௌனப் பார்வையாளர்களாய் இருக்கமாட்டோம்! ஊழல் நாற்றம் பல்கிப் பெருகினாலும் ஏனென்று கேளாமல் மூக்கைப் பிடித்தபடி வீட்டில் முடங்கி விடமாட்டோம்! ஆட்சி பீடத்தில் அமர்ந்திருப்பவர்கள் செய்யும் தவறுகளை ஆண்மையோடு சுட்டிக்காட்டுவோம் ! ஊழல் அரசியல்வாதிகள் தேர்தல் களத்தில் தோல்வியைத் தழுவ மக்களிடம் விழிப்புணர்வை வளர்த்தெடுப்போம்! தனி வாழ்வில் தூய்மை, பொதுவாழ்வில் நேர்மை நிறைந்த மனிதர்களை அரசியல் களத்தில் அறிமுகப்படுத்துவோம்! அரசியல்வாதிகளும், அதிகாரவர்க்கமும் இனியும் பொதுச்சொத்தைச் சுரண்டிக்கொடுக்க அனுமதிக்க மாட்டோம்! உழைப்பில் வந்த பணத்தை மதுக்கடைகளில் கொட்டிவிட்டு, மனைவி-மக்களைக் கண்ணீர்க் கடலில் மூழ்கச் செய்யும் மனிதர்களின் மனம் திருந்தச் செய்வோம்! டாஸ்மாக் கடைகளின் வருவாயில் இலவசங்களை வாரி வழங்கும் ஆட்சி முறைக்கு முற்றுப் புள்ளி வைப்போம்! என்று சபதம் ஏற்றவர்களா நீங்கள்?
`நான் ஈட்டும் செல்வத்தில் சிறிதளவாவது சமூக நலனுக்குச் சமர்ப்பணம் செய்வேன்! நான் கற்ற கல்வியால் பெற்றிருக்கும் அறிவை அடுத்தவர்தம் அறியாமை அகற்றப் பயன்படுத்துவேன்! என் உடல் வலிமையால் சகமனிதர்களின் துயர் துடைக்க உழைப்பேன்! சிதறிக்கிடக்கும் நல்லவர்களை ஓரணியில் சேர்ந்து நிற்கச் செய்வேன்! சுற்றுப்புறத்தைச் சுத்தமாக்குவேன்! அனாதைகளை அரவணைப்பேன்! அரசு நலத் திட்டங்கள் அனைத்தும் உரியவர்க்கு ஒழுங்காய் சேரும் வழிவகை காண்பேன்! மக்களுக்குத் தீங்கு தரும் செயல்களைச் செய்பவர் யாராயினும் காந்திய வழியில், சாத்விக நெறியில் எதிர்த்து நின்று, நன்மையைத் தேடித் தருவேன்! ஊழலற்ற, சமத்துவம் சார்ந்த புதிய சமுதாயத்தை நான் வாழும் மண்ணில் உருவாக்க என்னால் இயன்றளவு தூய்மையான அர்ப்பணிப்புடன் பணியாற்றுவேன்! தனக்கென வாழாமல் பிறர்க்கென வாழ்வதுதான் உயர்ந்த வாழ்க்கை என்ற உண்மையை அறிவேன்! என்ற உறுதியோடு நிற்பவரா நீங்கள்?
உங்களுக்காக உருவெடுத்திருப்பதுதான் காந்திய மக்கள் இயக்கம்!
ஒருவர் ஒருவராய் உறுப்பினராகுங்கள்! பல்லாயிரம், லட்சம் என்று உறுப்பினர் எண்ணிக்கையைப் பெருக்குங்கள்!
`நான் மற்றவர்களைப் போன்ற மனிதனில்லை’ என்றான் மாவீரன் நெப்போலியன்!
மற்றவற்றைப் போன்ற இயக்கமில்லை நம் `காந்திய மக்கள் இயக்கம்’! பணம், பதவி, பெருமை, புகழ் என்று அலைபவர்க்கு இடையே மக்கள் பணி, பொது நல நாட்டம், சமூக சேவை தன்னலத் தியாகம் என்று புதிய தொண்டர்களின் திருக்கூட்டம் காணப் புறப்படுவோம்!