காந்திய மக்கள் இயக்கம் – நெறிமுறைக் கோட்பாடுகள் – ” மதுவற்ற மாநிலம் – ஊழலற்ற நிர்வாகம்”
1. அகத்திலும், புறத்திலும் நெறி சார்ந்தவரே, அரசுப் பதவிகளுக்கு கட்சியின் வேட்பாளராகப் பரிந்துரைக்கப்படுவர்.
2. ஆட்சி பதவிகளில் போட்டியிட ஒருவருக்கு இரு முறைக்கு மேல் வாய்ப்பு இல்லை.
3. கட்சியிலோ அல்லது ஆட்சியிலோ, ஒருவருக்கு ஒரே நேரத்தில் ஒரு பதவி மட்டுமே.
4. குடும்ப அரசியல் – வாரிசு அரசியல், இரண்டுக்கும் இம்மியளவும் இடமில்லை.
5. வெற்றி பெற்ற உறுப்பினர்கள், தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதிகளில் பதவிக் காலம் முழுவதும் கட்டாயமாக வசித்தல்; அங்கிருந்து மக்கள் நலப் பணிகளில், தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொள்ளுதல்.
6. அரசுப் பதவிகளின் மூலம் உறுப்பினர்களுக்குக் கிட்டும் ஊதியத்தைக் கட்சியிடம் ஒப்படைத்தல்; அவர்களின் அடிப்படை வாழ்வாதாரச் செலவுகளைக் கட்சி ஏற்றுக் கொள்ளுதல்.
7. அரசுப் பதவியில் இருக்கும் கட்சி உறுப்பினர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள், ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டால் தாமாகவே பதவி விலகுவர்; தவறும் பட்சத்தில் மக்களை ஒன்று திரட்டி, பதவி விலகும் வரை கட்சியே போராட்டத்தில் ஈடுபடும்.
8. வேட்பாளர்களின் தேர்தல் பணிக்கான அடிப்படைச் செலவுகளை அரசே ஏற்றுக்கொள்ளுதல்; இந்நிலை நடைமுறைக்கு வரும்வரை சுவரொட்டிகள், துண்டறிக்கைகள், வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தல் போன்ற வழிகளில் மிக மிகக் குறைந்த செலவில், கட்சி வேட்பாளர்கள் தேர்தல் பணியாற்றுவர்.
9. 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் கள ஆய்வு செய்து தொகுதிப் பிரச்சினைகளைத் தொகுத்து தனித் தனியான தேர்தல் அறிக்கை தயார் செய்தல்.
10. சட்ட ரீதியான இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வரும் முன்னரே, கட்சிப் பதவிகளிலும், ஆட்சிப் பதவிகளுக்குப் போட்டியிடும் வாய்ப்புகளிலும், மகளிருக்கு மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீடு.
11. தமிழகத்தில், பூரண மது விலக்கை நடைமுறைக்குக் கொண்டு வருதல்; 2016 இல் காந்திய மக்கள் கட்சி பங்கேற்கும் கூட்டணி அரசின் முதல் கொள்கை முடிவாக இதுவே இருக்க வழி வகுத்தல்.
12. இலவசப் பொருட்களுக்கு மக்களைக் கையேந்த வைக்கும் நிலையினை மாற்றி, தன்மானத்துடன் வாழ்ந்திட, உழைத்திட மக்களை நெறிப்படுதுதல்; அவற்றிற்குரிய திட்டங்களைத் தீட்டுதல்.
13. விளைநிலங்கள் வீட்டு மனைகளாக மாறும் அவலத்தினை நீக்கி, வேளாண் தொழிலை இலாபகரமாக மாற்றுவதற்கான வழிவகைகளைக் கண்டறிந்து உழவர் உயர்ந்திட களம் அமைத்தல்.
14. நகர்ப்புற வசதிகளைக் கிராமங்களில் உருவாக்குதல்; இதன் மூலம் கிராம மக்கள் இடம் பெயர்தலையும், நகரங்கள் அடிப்படை வசதியற்ற குடிசைகளின் கூட்டமைப்பாக மாறுவதையும் தடுத்தல்.
15. குறைந்த முதலீட்டில், பலருக்கும் வேலை வாய்ப்பைத் தருகின்ற நம் மண்ணுக்குகந்த கிராமப் பொருளாதாரம் சார்ந்த தொழில்களை வளர்த்தெடுத்தல்.
16. அரசு ஊழியர்கள், அதிகாரிகள், ஆட்சியாளர்கள் ஆகியோரின் வாரிசுகள் அரசுப் பள்ளிகளிலும், அரசுக் கல்லூரிகளிலும் மட்டுமே கல்வி பெறுதல்.
17. அரசு ஊழியர்கள், அதிகாரிகள், ஆட்சியாளர்கள் ஆகியோர் அரசுப் பொது மருத்துவ மனைகளில் மட்டுமே சிகிச்சை பெறுதல். (கோட்பாடுகள் 16 & 17 – தரமான கல்வியும், மருத்துவமும் சகலருக்கும் கிடைத்திட இதுவே வழி)
18. மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழிற்கல்விக்கான தகுதி மதிப்பெண் கணக்கிடுதலில், தாய் மொழிப் பாடத்தில் பெற்ற மதிப்பெண்களை உள்ளடக்குதல்.