தேர்தல் அரசியலை அடித்தளமாகக் கொண்டு, ஆட்சியைக் கைப்பற்றி அதிகாரத்தைச் சுவைக்க வேண்டும் என்பதற்காகவே இன்று பல அரசியல் கட்சிகள் அன்றாடம் புதிது புதிதாய் அரங்கேறுகின்றன. இந்த நிலையில் காந்திய மக்கள் இயக்கம் தமிழகத்திற்கு ஏன் தேவைப்படுகிறது என்று அனைவரும் அறிந்துகொள்வது அவசியமாகிறது.
பகுத்தறிவுப் பகலவன் பெரியாரைப் போன்று தேர்தல் குறித்த சிந்தனையின்றிச் சமூக நலனுக்காக அர்ப்பணிப்பு உணர்வுடன் செயலாற்றும் ஓர் இயக்கத்தை யாரும் உருவாக்க விரும்பாத நிலையில், அந்த வெற்றிடத்தை நிரப்பவே காந்திய மக்கள் இயக்கம் தொடங்கப்பட்டது. பணம், பதவி, அதிகாரம், புகழ் ஆகிய போதைகளுக்கு ஆட்படாமல் மக்கள் நலனை மட்டும் நினைவில் நிறுத்திச் செயற்படுவதற்கு முன்வரும் மனிதர்களின் சங்கமமாகச் சமூக வீதிகளில் வலம் வரவேண்டும் என்ற மேலான இலட்சியப் பதாகையை உயர்த்திப் பிடித்தபடி இந்த இயக்கம் வளரத் தொடங்கியது. கடந்த ஆறு ஆண்டுகளில் மெள்ள மெள்ள மக்கள் மனங்களில் இடம் பிடித்து, இன்று சென்னை முதல் குமரிவரை மூன்று லட்சம் ஆதரவாளர்களை இது அடைந்திருக்கிறது.
இனம், மொழி, பண்பாடு ஆகியவற்றைப் பற்றிப் பல இயக்கங்கள் பேசுகின்றன. ஆனால், அவை அனைத்தும் தேசிய நலனைப் புறம் தள்ளுகின்றன. வாய்ப்பு நேர்ந்தால் தமிழகம் தனியாகப் பிரிந்துவிட வேண்டும் என்ற பிரிவினை உணர்வு அவற்றின் மறைமுக நோக்கமாக இருப்பதை மறுக்க முடியாது. தேசியக் கட்சிகள் என்ற அடையாளங்களுடன் தமிழகத்தில் இயங்கும் காங்கிரஸ், பா.ஜ.க., இடதுசாரிகள் அனைத்துக்கும் தமிழினம், தமிழ்மொழி, தமிழ்ப் பண்பாடு குறித்து உண்மையான ஈடுபாடு அறவே இல்லை. திராவிட கட்சிகளிடம் ‘இந்தியா என் நாடு, இந்திய மக்கள் அனைவரும் என் இதயம் நிறைந்த உறவுகள்’ என்ற தேசியப் பார்வைக்கு இடமில்லை. தமிழ்த் தேசியர்களுக்கு இந்திய ஒருமைப்பாட்டில் எள்ளளவும் நம்பிக்கையில்லை. இந்தச் சூழலில்தான் ‘வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்! வாழிய பாரத மணித் திருநாடு!’ என்ற பாரதியின் பார்வையுடன் மக்களை வழி நடத்த காந்திய மக்கள் இயக்கத்தின் தேவை தவிர்க்க முடியாததாக உணரப்பட்டது.
தேசிய நலனுக்காக மாநில உரிமைகளைப் புறக்கணிக்கலாம், மாநில நன்மைக்காகத் தேசிய உணர்வைத் துறந்துவிடாமல், இரண்டையும் போற்றிப் பராமரிக்கும் நோக்கில் மலர்ந்ததுதான் காந்திய மக்கள் இயக்கம். மொழி நம் முகம்; இனம் நம் முகவரி; இந்தியா நம் இருப்பிடம் என்பதுதான் இந்த இயக்கத்தின் தெளிவான சிந்தனை. சாதிகளற்ற சமுதாயம் உடனடிச் சாத்தியம் இல்லையெனினும், சாதிகளுக்கிடையே சமத்துவம் உருவாவதில் எந்தச் சிக்கலும் இல்லை. சாதி வெறியைத் தூண்டி, மதவெறியை வளர்த்தெடுத்து அரசியல் ஆதாயம் அடையத் துடிக்கும் கட்சிகளுக்கு மக்கள் ஆதரவு இல்லையெனில், காலநடையில் அவையனைத்தும் கண்மூடிவிடும். சாதி, மதம் இரண்டையும் எதன் பொருட்டும், எவர்பொருட்டும் காந்திய மக்கள் இயக்கம் அரவணைத்து அரசியல் ஆதாயம் அடைவதற்கு எந்நாளும் முன்வராது.
தேர்தல் களம் என்பது தவறான வழியில் சேர்த்துக் குவித்த கறுப்புப் பணத்தின் மூலம் அறத்துக்குப் புறம்பான வழியில் ஆட்சியைக் கைப்பற்றத் துடிக்கும் கட்சிகளின் வேட்டைக்காடாக விளங்கும் நிலையில், காந்திய மக்கள் இயக்கம் சமூகப் பணியாற்றும் ஓர் சேவை நிறுவனமாகவே செயற்பட விரும்புகிறது. ஆனால், தமிழ் நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிதறிக் கிடக்கும் காந்திய அமைப்புகள் காதி விற்பனைக் கூடங்களாகவும், மதுவிலக்குப் பிரச்சார மன்றங்களாகவும், சர்வோதயம் பற்றியப் பேருரைகள் நிகழ்த்தும் நிலையங்களாகவும் செயற்படுவதோடு நிறைவடைந்துவிடுகின்றன என்ற உண்மையை, அரசின் தவறுகளைத் தட்டிக் கேட்கவும், தீமைகளைத் துணிவுடன் எதிர்த்துக் களம் காணவும் முன்வராத கோழைத்தனத்தைக் கூர்மையாக அவதானித்த காந்திய மக்கள் இயக்கம், சர்வோதய சங்கங்களில் ஒன்றாகச் செயற்படுவதால் எந்தச் சமூகநன்மையும் ஏற்படப்போவதில்லை என்ற புரிதல் இந்த இயக்கத் தொண்டர்களிடம் வந்து சேர்ந்ததன் விளைவாக இதை ஓர் அரசியல் இயக்கமாக மாற்றுவது என்ற சிந்தனை மலர்ந்தது.
‘மாற்றமின்மை என்பதை நான் முட்டாள்தனமாகக் கட்டிப்பிடித்துக் கொண்டிருக்க விரும்பவில்லை’ என்றார் மகாத்மா. ‘நான் உண்மையின் சார்பாளன். நான் என்ன நினைக்கிறேனோ, அதையே கூறுவேன். நான் முன்னர் என்ன சொன்னேன் என்பதுபற்றி எனக்குக் கவலையில்லை. நான் மாற்றமே இல்லாதவன் என்று சொல்லிக்கொள்ள விரும்பவில்லை. எது உண்மை என்று எனக்குப் படுகிறதோ, அதன் வழியில் நடப்பேன். தினசரி அனுபவமே எனது கருத்துகளை உருவாக்குகிறது’ என்றுரைத்த காந்தியின் பெயரால் நடக்கும் இயக்கம் காலத்தின் தேவைக்கேற்ப அரசியல் இயக்கமாக மாறவேண்டியதாயிற்று. நியாயமான முடிவெடுக்க அறிவார்ந்த ஆராய்ச்சி அவசியமில்லை.
நாம் எதை அடைய விரும்புகிறோம் என்பதைத் தெளிவாக முடிவு செய்ய வேண்டும். அதை அடைவது எப்படி என்பதைவிட அது முக்கியமானது. மது வெள்ளத்தில் மூழ்கிக்கிடக்கும் சமூகத்தையும், ஊழலில் ஊறித் திளைக்கும் நிர்வாகத்தையும் மாற்றியமைப்பதுதான் காந்திய மக்கள் இயக்கத்தின் முக்கிய இலக்கு. சாதி, மதம் சார்ந்த வெறியை வளர்த்தெடுக்கும் மனிதர்களிடமிருந்து பொதுவாழ்வை விடுவிப்பது இதனுடைய இரண்டாவது இலக்கு. வெறுப்பும் வன்முறையும் சுயதோல்விக்கே ஓர் இயக்கத்தை இட்டுச் செல்லும் என்பதால் அன்பு சார்ந்த அறவழிப் போராட்டமே காந்திய மக்கள் இயக்கத்தின் கருவி. ஒவ்வோர் அடியாக ஆழ்ந்த பொறுப்புணர்வுடன் இந்த இயக்கம் தன் பயணத்தைத் தொடர்கிறது. நாம் நிகழ்காலத்தில் தெளிவாகக் கவனம் செலுத்தினால், எதிர்காலம் தன்னை ஒழுங்காக கவனித்துக் கொள்ளும்.
இன்று நம்மைச் சுற்றியிருக்கும் ஏராளமான அரசியல் அமைப்புகள் தன்னலம் சார்ந்தவை; மொழி, இனம், சாதி, மதம் என்று சமூக ஒற்றுமையைச் சீரழிப்பவை; ஊழல் குட்டையில் ஊறித் திளைப்பவை; பணம்தான் இவற்றின் வழிபடு கடவுள். அதிகார ஆசையே இவற்றின் அந்தரங்கப் பிரார்த்தனை. நாம் விரும்புகிறாற்போல் சரியானது இல்லையென்றால், சரியான வேறொன்றை நாம்தான் உருவாக்க வேண்டும். தீயதைப் புறக்கணிக்கும் துணிவு இருந்தால், நல்லதை நாம் நிச்சயம் அடைந்தே தீர்வோம். இந்த மேலான நம்பிக்கையும், உண்மை சார்ந்த உறுதியும்தான் காந்திய மக்கள் இயக்கம் கண்விழித்ததற்கான காரணங்கள். ‘உலகம் மாறும் வரை நான் காத்திருக்கமாட்டேன். என் முதலடியே போதும். அதுவே மாற்றத்தின் தொடக்கம்’ என்றார் அண்ணல். ‘தொடங்கி, உடனே தொடங்கு, உன்னில் தொடங்கு’ என்பதுதான் எங்கள் வேதகீதம்.
இழிந்த அரசியல் சக்திகளிடமிருந்து விரைவில் விடுதலை வாய்க்க வேண்டும் என்பதுதான் காந்திய மக்கள் இயக்கத்தின் தேர்தல் வேள்வி. ‘யார் எக்கேடு கெட்டால் நமக்கென்ன? நாம் பாதுகாப்பாக இருப்பதுதான் நமக்கு முக்கியம்’ என்று பலர் நினைக்கலாம். ‘விடுதலைக்கு மாற்றாக பாதுகாப்பைப் பெற நினைப்பவர்கள் இரண்டையும் இழப்பார்கள்’ என்று பெஞ்சமின் ஃபிராங்க்ளின் வழங்கிய வாசகம் அவர்களுடைய செவிகளில் சென்று சேரட்டும்.
– தமிழருவி மணியன்