அக்னிபத் திட்டம், இந்திய இராணுவத்தின் முப்படைகளிலும், 4 ஆண்டு காலத்திற்கு குறுகிய கால வீரராக இளைஞர்கள், இளம்பெண்களை சேர்க்கும் திட்டம் ஆகும். 17.5 வயது முதல் 21 வயதிலான ஆண், பெண் இருபாலரும் இத்திட்டத்தில் இணையலாம். 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் அவர்கள் தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம் ஆகும். உடற்தகுதியை பொறுத்தவரை இராணுவத்தில் சேருவதற்கு இப்போது நிர்ணயிக்கப்பட்டு இருக்கும் உடற்தகுதிகளே அக்னிபத் திட்டத்தில் சேருபவர்களுக்கும் பொருந்தும்.
அக்னிபத் திட்டத்தின் கீழ் தேர்வாகும் வீரர்களுக்கு முதலாம் ஆண்டில் மாதம் ரூ.30 ஆயிரம் சம்பளமும், கடைசி, அதாவது 4-வது ஆண்டில் மாதம் ரூ.40 ஆயிரம் சம்பளமும் வழங்கப்படும். ஆனால் இந்த சம்பளம் முழுமையாக வழங்கப்படாது. இந்த சம்பளத்தில் 30% பிடித்தம் செய்யப்பட்டு, சேவா நிதியாக மத்திய அரசின் பங்களிப்புடன் (அதே 30% அளவிலான தொகை) பணி நிறைவின் போது ஒவ்வொரு வீரருக்கும் தலா ரூ. 11.7 லட்சம் வரிப்பிடித்தமின்றி வழங்கப்படும்.
மொத்தம் 45 ஆயிரம் பேர் இந்தத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேர்க்கப்படவுள்ளனர். பணிக்காலம் முடிவடைந்ததும் தேர்வு செய்யப்பட்டவர்களில் 25 சதவீதம் பேர் நிரந்தர இராணுவப் பணிக்கு சேர்த்துக் கொள்ளப்படுவர். மீதமுள்ள 75 சதவீதம் பேர் இராணுவத்தில் இருந்து வெளியேற்றப்படுவார்கள். பணிக்காலத்தில் வீர மரணம் அடையும் அக்னிபத் வீரர்களின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடியும், அவர்கள் பணிபுரிந்திருக்க வேண்டிய காலத்துக்கான ஊதியமும் வழங்கப்படும்.
பணியின் போது அக்னிபத் வீரர்கள் உடல் ஊனமுற்றால் அவர்களுக்கு வட்டியுடன் கூடிய முழு சேவை நிதியும், அவர்கள் பணிபுரிந்திருக்க வேண்டிய காலத்துக்கான ஊதியமும் வழங்கப்படும். இதுதவிர, ஊனத்தின் தீவிரத்தை பொறுத்து அவருக்கு ரூ.46 லட்சம் வரை வழங்கப்படும். இத்திட்டத்தில் இருந்து 4 ஆண்டுகள் நிறைவு செய்து வெளியேறும் அக்னி வீரர்களுக்கு மத்திய பாதுகாப்புத்துறை, உள்துறையில் 10 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இரு துணை ராணுவப் படைகளில் சேரும் அக்னிபத் வீரர்களுக்கு வயது வரம்பு சலுகையும் அளிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் இருந்து 4 ஆண்டுகள் நிறைவு செய்து வெளியேறும் திறமை மிக்க அக்னி வீரர்களுக்கு விமான போக்குவரத்துத் துறையிலும் பணி முன்னுரிமை வழங்கப்படும் என விமான போக்குவரத்து அமைச்சகம் உறுதி அளித்துள்ளது.
இத்திட்டம் வெளித்தோற்றத்துக்கு சிறப்பானதாகவே தெரிகிறது. இதில் நான்காண்டுகளுக்கப் பிறகு வேலைவாய்ப்பு என்பதுதான் விவாதப் பொருளாக உள்ளது. எனவே, ஒவ்வொரு ஆண்டும் இத்திட்டத்தின் மூலம் இராணுவத்திலிருந்து வருபவர்களை ஒவ்வொரு மாநிலமும், தங்கள் மாநிலம் சார்ந்த பாதுகாப்புப் பணியில் (காவல்துறை உள்ளிட்ட துறைகளில்) நியமிக்கலாம். இராணுவத்தில் அடிப்படைப் பயிற்சிகளைப் பெற்று வரும் இவர்களை, ஏன் மாநில அரசுகள் பயன்படுத்தக் கூடாது? நான்கு ஆண்டுகள், இராணுவத்தில் பணியில் இருக்கும் போது, இவர்கள் கல்வித் தகுதியை மேம்படுத்திக் கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தித் தரலாம். இத்திட்டம் தேச பாதுகாப்புக் குறித்தானது. எனவே மாநில அரசுகளையும் இணைத்துக் கொண்டு இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தினால் ஆற்றல்மிக்க இராணுவம் உருவாகும் என்பது காந்திய மக்கள் இயக்கத்தின் கருத்தாகும்.
பா குமரய்யா,
மாநில பொதுச் செயலாளர்,
காந்திய மக்கள் இயக்கம்.
தொடர்புக்கு: 98410 20258