அனைத்துத் தளங்களிலும் ஜெயலலிதா இனி என்ன செய்ய வேண்டும், எங்கு இருந்து தொடங்க வேண்டும்? கருத்துக்களைப் பகிர்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்… – ஆனந்த விகடன்
கே.சந்துரு, சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி
——————————————————————————————-
”18 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்திய சட்டப் போராட்டத்தில் ஜெயலலிதா வெற்றி பெற்றுவிட்டார். ஆனாலும் கர்நாடகா நீதிமன்றத்தின் தீர்ப்பு இறுதியானது அல்ல. கர்நாடகா அரசோ அல்லது அன்பழகனோ உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம். ஆனால், அங்கு இந்த வழக்கை விசாரித்து முடிப்பதற்கு காலக்கெடு எதுவும் இல்லை. எனவே, இன்னும் ஓர் ஆண்டு தமிழ்நாடு அரசைத் தலைமையேற்று நடத்துவதற்கும், 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்கும் ஜெயலலிதாவுக்கு எந்தத் தடையும் இல்லை.
2016-ம் ஆண்டு தேர்தலில் வாக்குகள் கோரி மக்களைச் சந்திக்க வேண்டும் என்றால், ஜெயலலிதா தன் நடைமுறையை மாற்றிக்கொள்ள வேண்டும். முதலில் அவர் கவனம் செலுத்தவேண்டியது டாஸ்மாக். கட்டுப்பாடற்ற மது விற்பனையும் அதன் மூலம் வரும் வருவாயை நம்பி இருப்பதும், அரசின் ஆகப் பெரிய பலவீனம். ஜெயலலிதா பதவியேற்றதும் உடனடியாக பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். அப்படிச் செய்தால், மக்கள் எல்லாவற்றையும் மறந்து அவரை மன்னிக்கத் தயாராக இருப்பார்கள்.
மணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை, தாது மணல் கொள்ளை… என தமிழ்நாட்டின் இயற்கை வளங்கள் பேரழிவைச் சந்தித்துவருகின்றன. இவற்றைத் தடுத்து நிறுத்தக்கோரி மக்கள் போராட்டங்களும் நடைபெற்றுவருகின்றன. அவற்றைக் கவனத்தில்கொண்டு அனைத்துவிதமான இயற்கை வளச் சுரண்டல்களையும் தடுத்து நிறுத்தும் நடவடிக்கைகளை உடனடியாக முடுக்கிவிட வேண்டும். இயற்கை வளங்களைப் பங்கிட்டுக்கொள்வது தொடர்பாக அண்டை மாநிலங்களோடு நடத்தும் சட்டப் பிரச்னை மட்டும் அல்லாமல், தமிழ்நாட்டிலும் அத்தகைய கொள்கை முறையைக் கடைப்பிடிப்பது அவசியம். ஊழலை ஒழிக்க அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்ய வேண்டும். அதற்கு முதல்கட்டமாக தமிழ்நாட்டில் ‘லோக் ஆயுக்தா’ அமைப்பை உருவாக்குவதும், பொது ஊழியர்கள் சேவைச் சட்டத்தைக் கொண்டுவருவதும் இன்றியமையாதது. தவிர, அதானிகளையும் அம்பானிகளையும் ஆதரிக்கும் பா.ஜ.க அரசின் பொருளாதாரக் கொள்கைகளை எதிர்ப்பதுடன், மதத்தின் அடிப்படையில் மக்களைப் பிளவுபடுத்தும் செயல்களுக்கு ஆதரவு அளிக்காமல், தமிழ்நாட்டின் மத நல்லிணக்கத்தை உறுதிப்படுத்த வேண்டும்.
சட்டப்பேரவையைக் கலைத்து, தேர்தலுக்கு வழிசெய்து, பெரும் பொருளாதார செலவீனத்தை உண்டாக்காமல், கட்சியிலும் அரசாங்கத்திலும் களையெடுப்பு செய்து மக்களிடம் மதிப்பு உள்ளவர்களையும், சட்டத்தை மதிப்பவர்களையும் வைத்து அரசை நடத்த வேண்டும். கட்-அவுட் கலாசாரத்துக்கும், தனிநபர் துதிபாடல்களுக்கும் முடிவுகட்ட வேண்டும்!”
தமிழருவி மணியன்,
தலைவர், காந்திய மக்கள் இயக்கம்.
————————————————————————
”இந்தத் தீர்ப்பின் மூலம் அரசியல் மறுஜென்மம் எடுத்திருக்கிறார் ஜெயலலிதா. குறைந்த தண்டனையாவது ஜெயலலிதா பெறுவார் எனப் பரவலான எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், அவர் பரிபூரண விடுதலை அடைந்திருக்கிறார். ‘சட்டம் ஏமாந்துபோனாலும் போகும்; ஆனால் தர்மம் எப்போதும் பழிதீர்த்தே தீரும்’ என்பது கவிஞர் கண்ணதாசனின் பாடல் வரிகள். ஜெயலலிதா தன் கடந்த காலத்தில் சேர்ந்துவிட்ட கசப்பான அனுபவங்களில் இருந்து, இனியாவது நல்ல பாடங்களைக் கற்றாக வேண்டும்.
தமிழ்நாட்டின் பாரம்பர்யப் பண்பாட்டு விழுமியங்கள் அனைத்தையும் படுகுழியில் தள்ளிவிட்ட டாஸ்மாக் கடைகளை மூடி, பூரண மதுவிலக்கை ஜெயலலிதா கொண்டுவர வேண்டும். தவிர வாக்குவங்கியை விரிவுபடுத்த வேண்டும் என்பதற்காக, கற்பனைக்கு எட்டாத இலவசத் திட்டங்களை அறிவித்து, 50 ஆயிரம் கோடிக்கு மேல் அந்தத் திட்டங்களுக்கு மட்டுமே ஒதுக்கீடு செய்வதால், வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதி ஒதுக்க முடியவில்லை. அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் மருத்துவம் என்ற இரண்டு சேவைகளை மட்டுமே முழுமையாக, இலவசமாக வழங்க வேண்டும். மக்கள் தலை மீது சுமத்தப்பட்டிருக்கும் இரண்டு லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான கடனை அடைக்க, எஞ்சியிருக்கும் ஒரு வருட கால ஆட்சியில் ஜெயலலிதா முயற்சிக்க வேண்டும்.
மாநிலத்தின் முதலமைச்சர் என்றால் வானத்தில் இருந்து கீழிறங்கி வந்திருக்கும் ஒரு தேவதை என்ற நினைப்பை முதலில் விட்டொழித்து, சாதாரண மக்களும் ஏழை எளியோரும் எளிதாகச் சந்திக்க முடிகிற நபர் என்ற நிலையை அவர் அடைவதுதான் அவரின் அரசியல் எதிர்காலத்துக்கு நல்லது. ஆடம்பரமான அரசியலும், ஆரவாரமான விளம்பரங்களும், அகம்பாவம் நிறைந்த அணுகுமுறையும், கூடா நட்பும் அவரிடம் இருந்து விடைபெற்றால், தமிழ்நாட்டின் அரசியலில் தன் இறுதி நாள் வரை அவர் ஒரு தவிர்க்க முடியாத சக்தியாகவே இருப்பார்.”
பேராசிரியர் அ.மார்க்ஸ்:
————————————————–
”2004-ம் ஆண்டுக்கு முன்பு ஜெயலலிதா முதலமைச்சராக இருந்ததற்கும், இந்த முறை முதலமைச்சராக இருந்ததற்கும் பல வித்தியாசங்கள் இருக்கின்றன. இந்த முறை மிகப் பெரிய அளவுக்கு மக்கள் வெறுப்பையோ, அதிருப்தியையோ ஜெயலலிதா சம்பாதிக்கவில்லை. தமிழ்நாட்டு மக்கள் மட்டும் அல்லாமல், ஈழ மக்களுக்காகவும் செயல்படக்கூடியவர் என்ற பிம்பத்தை சில தீர்மானங்கள் மூலம் உருவாக்கியிருந்தார். இடையில் வந்த தீர்ப்பால் சுமார் ஏழரை மாதங்கள் அவர் பதவியில் இல்லை. இந்த இடைவெளியை அவர் மறுபடியும் வேகமாகச் செயல்படுவதன் மூலம்தான் சரி செய்ய வேண்டும். இப்போதைய உடனடிப் பிரச்னைகள் எனப் பார்த்தால், மத்திய அரசு, தமிழ்நாட்டுக்கு வழங்கவேண்டிய நிதிகளை முறையாக வழங்கவில்லை. குறிப்பாக, தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடங்களை ஏழை-எளிய மாணவர்களுக்கு ஒதுக்கும் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, அந்த இடங்களுக்கு உரிய கட்டணத்தை, மத்திய அரசு தனியார் பள்ளிகளுக்கு வழங்க வேண்டும். இந்த நிதியை வழங்க வேண்டும் எனக் கேட்டு, முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியும் மத்திய அரசு பதில் எதுவும் சொல்லவில்லை.
இரண்டாவது, மத்திய அரசு கொண்டுவரும் எல்லா மக்கள் விரோதச் சட்டங்களின் பாதிப்பையும் நேரடியாகச் சந்திப்பவை மாநில அரசுகள்தான். ஆனால் நிலம் கையகப்படுத்துதல் சட்டம், ரியல் எஸ்டேட் சட்டம் போன்றவற்றில் அ.தி.மு.க அரசு, மத்திய அரசுக்கு ஆதரவு நிலைபாட்டை எடுப்பது விநோதம். அந்த ஆதரவுக்கும் தற்போதைய தீர்ப்புக்கும் தொடர்பு இருப்பதைப்போல எழும் தோற்றத்தைப் பொய்யாக்க விரும்பினால், இதுபோன்ற மக்கள் விரோத மசோதாக்களை ஜெயலலிதாவும் அவரது கட்சியினரும் கடுமையாக விமர்சிக்க வேண்டும்; எதிர்க்க வேண்டும். அதைப்போலவே தமிழகத்தில் மாவோயிஸ்ட் ஆபத்து உருவாகிவிட்டதைப் போன்ற மாயை திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது. ‘தமிழ்நாட்டில் நக்ஸல் ஆபத்தை ஒழித்துவிட்டோம்’ என முன்பு ஒருமுறை ஜெயலலிதா சொன்னதற்கு இணங்க, மத்திய அரசால் விதைக்கப்படும் இந்த அச்சத்தைப் போக்கி, நக்ஸல் ஆபத்து இல்லை என்பதை உறுதிப்படுத்தவேண்டும். ‘சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம்’ என்ற சட்டம் கணக்கு இல்லாமல் பயன்படுத்தப்பட்டு ஏராளமான முஸ்லீம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களைக் குறித்து விரிவான ஆய்வுசெய்து, தவறு இழைக்காத அப்பாவிகளை உடனடியாக விடுதலை செய்ய முன்வர வேண்டும்.”
பேராசிரியை சரஸ்வதி:
—————————————————-
”ஈழத் தமிழர்களின் துயர் நீங்க, வரவேற்கத்தக்க பல தீர்மானங்களைக் கொண்டுவந்தவர் ஜெயலலிதா. ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை, இலங்கை அரசு மீது பொருளாதாரத் தடை, பேரறிவாளன் உள்பட மூவர் தூக்கை ரத்துசெய்யக் கோரி தீர்மானம் என அடுத்தடுத்து ஈழத் தமிழர், தமிழ்நாட்டுத் தமிழர் நலனில் அக்கறையோடு பல தீர்மானங்களைக் கொண்டுவந்தார். தூக்குத் தண்டனை, ஆயுள் தண்டனையாகக் குறைந்துவிட்ட நிலையில் ஆயுள் கைதிகளை விடுவிக்கும் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஜெயலலிதா முதலமைச்சர் ஆனதும் பேரறிவாளன் உள்பட மூவரையும் விடுதலை செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு அகதி முகாம்களில் வாழும் ஈழ மக்கள் கல்வி பெற, முன்பு அவர்களுக்கு இடஒதுக்கீடு இருந்தது. பின்னர் அது கைவிடப்பட்டது. அந்த
இடஒதுக்கீட்டை மறுபடியும் கொண்டுவர உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அகதி முகாம்களில் வசிக்கும் பெண்களின் பாதுகாப்பு மிக மோசமான நிலையில் உள்ளது. தொடர் பாலியல் சீண்டல்களுக்கு உள்ளாகிறார்கள். தமிழ்நாடு முழுக்க உள்ள அகதி முகாம்களின் பாதுகாப்பை உறுதிசெய்து, அகதிப் பெண்களின் சமூகப் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்த வேண்டும். ஜெயலலிதா கொண்டுவந்த திட்டங்களில் ‘அம்மா உணவகம்’ அடித்தட்டு மக்களிடையே ஆதரவு பெற்ற திட்டம். நீதிமன்றத்தால் அவர் தண்டனைக்கு உள்ளாகியிருந்த காலத்தில் அம்மா உணவகங்கள் முறையாகச் செயல்படவில்லை. அவற்றை மறுபடியும் முழு வேகத்தில் இயக்க வேண்டும். தமிழ்நாட்டு ரேஷன் கடைகளில் அரிசியைத் தவிர சர்க்கரை, எண்ணெய் உள்பட வேறு எந்தப் பொருட்களும் கிடைப்பது இல்லை. கோடிக்கணக்கான ஏழை மக்கள் இன்னும் நம்பியிருப்பது ரேஷன் பொருட்களைத்தான். அவை தங்கு தடையின்றி கிடைக்க உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.”
ச.தமிழ்ச்செல்வன்
—————————————-
, தலைவர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம்.
—————————————————————————————————-
”லஞ்சமும் ஊழலும் மூன்று மடங்கு தலைவிரித்து ஆடுகிறது. சாதாரண பஞ்சாயத்து அலுவலகம் தொடங்கி பொதுப்பணித் துறை வரை கமிஷன் வெட்டினால்தான் காரியம் நடக்கும் என்ற நிலை நிலவுகிறது. இந்த ஊழலை ஒழிக்கவோ, குறைக்கவோ மாட்டார்களா என்ற எதிர்பார்ப்புதான் எளிய மக்களிடம் இருக்கிறது. வழக்கில் இருந்து விடுதலையாகி இருக்கும் ஜெயலலிதா, மறுபடியும் முதலமைச்சராகப் பதவியேற்றால், லஞ்சமும் ஊழலும் இல்லாத நிர்வாகத்தைக் கொடுக்க முயற்சிக்க வேண்டும். அமைச்சர்களின் நெருக்கடியால் தற்கொலை செய்துகொண்ட நேர்மையான அதிகாரிகள் விஷயத்தில், அரசு தன் நிலையைத் தெளிவுபடுத்த வேண்டும். பொதுப்பணித் துறை ஒப்பந்ததாரர் சங்கத்தினர் கொடுத்துள்ள ஊழல் புகார் பட்டியல் தொடர்பாக விசாரணை நடத்தி அரசு நிர்வாகத்தை நேர்வழியில் செலுத்த வேண்டும். அரசின் திட்டங்கள் நேரடியாக மக்களைச் சென்றடையும் வகையில் இடைத்தரகர்களை ஒழிக்க வேண்டும். வெளிப்படையான அரசு நிர்வாகத்துக்கு வழிவகை செய்ய வேண்டும். இவற்றை எல்லாம் ஜெயலலிதா செய்வார் என நம்பவில்லை. ஆனால், இவைதான் என் எளிய எதிர்பார்ப்புகள்.”
அருள்மொழி, வழக்குரைஞர்.
——————————————————
”ஜெயலலிதாவின் அரசியல் செயல்பாடுகள் மீது எனக்கு விமர்சனங்கள் இருந்தாலும் ஒரு பெண்ணாக, ஆண்களின் ஆதிக்கம் நிறைந்த அரசியலில் அவர் எதிர்த்து நின்று செயல்படுவது பாராட்டுக்குரிய ஒன்று. அதனால்தான் அவருடைய ஆட்சியில் எவ்வளவோ குறைகள் இருந்தாலும் பொதுவாக பெண்களுக்கு அவர் மீது ஒரு மதிப்பும் ஈர்ப்பும் இருக்கின்றன. ஆனால் அதற்கு ஏற்ப அவருடைய செயல்பாடுகள் சிறப்பாக அமைந்தால்தான், அந்த மரியாதைக்கு அர்த்தம் கிடைக்கும்.
முதல் வேலையாக, தமிழ்நாட்டு அரசியலில் ஒரு வெற்றிடம் உருவாகி இருப்பதாகச் சொல்லிவரும் பா.ஜ.க-வின் பிரசாரத்தை முறியடிக்க வேண்டும். இந்தியாவிலேயே தமிழ்நாடு மதச் சண்டைகள் காலூன்ற முடியாத அமைதியான மாநிலமாக இருப்பதற்கு, திராவிட அரசியல் கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க-வின் தொடர்ச்சியான ஆட்சிகளே காரணம். அதனால் தமிழ்நாட்டில் காலூன்ற நினைக்கும் கருத்துரிமைக்கு எதிரான இந்து அமைப்புகளை ஒடுக்க வேண்டும். மிக மிக முக்கியமாக, டாஸ்மாக் மதுக்கடைகளை மூடி, தமிழ்நாட்டில் அழிந்துகொண்டிருக்கும் இளைய தலைமுறையைக் காப்பாற்ற வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்களும் வன்முறைகளும் தமிழ்நாட்டில் அதிகரித்துவருகிறது. காவல் துறையை வேகப்படுத்தி அத்தகைய குற்றங்களைத் தடுத்து நிறுத்த வேண்டும். தமிழ்நாடு முழுவதும் வெளியில் சென்று வேலை பார்க்கிற பெண்களுக்குப் பாதுகாப்பான தங்கும் இல்லங்களை அரசே கட்டி நிர்வாகம் செய்ய வேண்டும்.
பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவுவதற்காகத்தான், மகளிர் காவல் நிலையங்களை உருவாக்கினார் ஜெயலலிதா. ஆனால் இன்று தமிழ்நாட்டில் அனைத்து மகளிர் காவல் நிலையங்களில் பெண்கள் புகார் கொடுக்கப் போனால், வழக்குப் பதிவுகூட செய்யாமல் அலைக்கழிக்கப்படுகிறார்கள். பொய் வழக்குகள் போட்டு ஆண்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டும் உச்ச நீதிமன்றத்தால் அடிக்கடி சொல்லப்படுகிறது. இதை உடனடியாக சீரமைத்தால்தான், மகளிர் காவல் நிலையங்களால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்கும். அரசுப் பள்ளிகளைத் தரம் உயர்த்தும் அதே நேரம், தனியார் பள்ளிகளில் தமிழைக் கட்டாயமாக்கும் தமிழ்நாட்டு அரசின் உத்தரவை மதிக்காத பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்துசெய்ய வேண்டும். தி.மு.க அரசால் கொண்டுவரப்பட்டவை என்பதாலேயே, அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் பல திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டன. அதன் விளைவை சென்னை மாநகரத்தில் ஏற்பட்டிருக்கும் சீர்கேடுகள் வெளிப்படையாகக் காட்டுகின்றன. குறிப்பாக மாநகராட்சிப் பள்ளிகள், சமீபத்தில் வெளிவந்துள்ள ப்ளஸ் டூ பொதுத்தேர்வு முடிவுகளில் மிகவும் பின்தங்கியிருக்கின்றன. எனவே தி.மு.க கொண்டுவந்தது என்பதற்காக நல்ல திட்டங்களை ஒதுக்காமல் நல்லவற்றைத் தொடர்ந்து செயல்படுத்துவதை உறுதிப்படுத்த வேண்டும். எல்லாவற்றையும்விட, தன் மீதான விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளக்கூடிய, குறைந்தபட்சம் விமர்சனங்களைக் கேட்டுக்கொள்ளக்கூடிய சகிப்புத்தன்மையையும் பொறுமையையும் ஜெயலலிதா வளர்த்துக்கொள்ள வேண்டும்.”
டிராஃபிக் ராமசாமி, சமூகச் செயற்பாட்டாளர்.
——————————————————————————–
”ஜெயலலிதா, வழக்கில் இருந்து விடுதலை பெற்றிருக்கலாம். ஆனால், இனிமேல் அவரால் எதுவும் செய்ய முடியாது. ஊழல் ஆட்சிதான் நடத்த முடியும். அரசின் அனைத்துத் துறைகளிலும் லஞ்சம் தலைவிரித்தாடும் நிலையில், இந்த நீதிமன்றத் தீர்ப்பினால் அவர்கள் இன்னும் மன தைரியம் அடைந்து அதிகமாக ஊழல் செய்வார்கள். சாதாரண மக்கள் அரசின் மீதும், நீதிமன்றத்தின் மீதும் நம்பிக்கை இழப்பார்கள். திடீர் அரசியல் மாற்றங்கள் எதுவும் நடந்தால் ஒழிய, இந்த அம்மையாரிடம் இருந்து வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது. தனிப்பட்ட வகையில் என் விருப்பம், அதிகாரிகள் மக்களிடம் இன்னும் நெருங்கிப் பழக வேண்டும். மக்கள் ஒரு புகார் கொடுத்தால், சம்பந்தப்பட்ட இடத்துக்கு உடனடியாக நேரில் சென்று விசாரித்து நடவடிக்கை எடுப்பதை உறுதிசெய்ய வேண்டும். அப்படிச் செய்தால்தான், ஜெயலலிதாவால் உண்மையான ‘மக்களின்’ முதல்வராக இருக்க முடியும்.
அவருக்கு அந்த நிர்வாகத் திறமை இருக்கிறது; ஒப்புக்கொள்கிறேன். ஆனால், அப்போதும் இப்போதும் அவரைச் சுற்றி ஒரு கும்பல் சூழ்ந்திருக்கிறது. அந்தக் கும்பலின் கட்டுப்பாட்டில்தான் அவர் இருக்கிறார். ஜெயலலிதா மீதான இத்தனை வழக்குகளுக்கும் பின்னடைவுகளுக்கும் காரணம் அவர்கள்தான். இப்போதாவது இதை உணர்ந்துகொண்டு அந்தக் கும்பலை ஒட்டுமொத்தமாக வெளியேற்றிவிட்டு அவர் சுயேச்சையாக செயல்படத் தொடங்க வேண்டும். தமிழ்நாட்டு மக்களுக்கு ஏதாவது ஆக்கபூர்வமாகச் செய்ய வேண்டும் என ஜெயலலிதா விரும்பினால் முதலில் செய்ய வேண்டியது, அவர்களை வெளியேற்றுவதுதான். அப்போதுதான் தனிப்பட்ட வகையிலும் அவர் நிம்மதியாக வாழ முடியும்!”
ஹென்றி டிஃபேன், இயக்குநர், மக்கள் கண்காணிப்பகம்.
—————————————————————————————————
”நிரபராதி என விடுதலை செய்யப்பட்டிருக்கிறார் ஜெயலலிதா. அது உண்மை என்றால், அவர் முழுமையாகத் தனது அரசுத் துறையில் இருந்து
லஞ்சத்தையும் ஊழலையும் ஒழிக்க வேண்டும். அடுத்து, தமிழ்நாட்டில் தனியார், கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு சட்டத்துக்கு உட்பட்டு ஊதியம் தருவது இல்லை. உயர் பதவியில் இருப்பவர்களுக்குத்தான் நல்ல ஊதியம் கிடைக்கிறதே தவிர, சாதாரணத் தொழிலாளர்களுக்கு முறையான ஊதியம் கொடுப்பது இல்லை. இதில் நடவடிக்கை எடுத்து, தொழிலாளர்களின் ஊதிய உரிமையைப் பாதுகாக்க வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது.
நான் முக்கியம் என நினைக்கும் இன்னொரு விஷயம், பிரகாஷ் சிங் வழக்கில் 2006-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், ‘மாநில அரசுகள் காவல் சட்டத்தை அமல்படுத்த வேண்டும்’ எனச் சொன்னது. ஜெயலலிதாவுக்கு சிறை, நீதிமன்றம், சட்ட நுணுக்கங்கள் பற்றி எல்லா தகவல்களும் தெரியும். எனவே, அந்தக் காவல் சட்டத்தை இங்கே அமல்படுத்தும் பணிகளைச் செய்ய வேண்டும். அதேபோல முடங்கிக் கிடக்கும் 100 நாள் வேலைத் திட்டத்தை மீண்டும் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். தனக்கு மக்களிடம் இருக்கும் ஆதரவை வைத்து தன் அரசியல் எதிரிகளைப் பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை விட்டுவிட்டு மக்களின் விருப்பங்களை நிறைவேற்ற வேண்டும்!”