தமிழருவி மணியன், தலைவர், காந்திய மக்கள் இயக்கம்
“அன்னா ஹஸாரே இயக்கம் ஓர் அரசியல் கட்சியாக உருமாறுகிறது என்றால், அது அவரது வீழ்ச்சியாகத்தான் இருக்கும். ஒரு காந்தியோ, ஒரு ஜெயப்பிரகாஷ் நாராயணனோ, ஒரு பெரியாரோதான் இன்றையத் தேவை. அரசியல் கட்சியாக மாறினால் சட்டமன்றம் செல்ல வேண்டும், நாடாளுமன்றம் செல்ல வேண்டும், அமைச்சராக வேண்டும் என கொஞ்சம் கொஞ்சமாக சமரசம் செய்ய வேண்டியிருக்கும்.
அரசியல் கட்சியைத் தொடங்கி, நாடாளுமன்றத் தேர்தலில் தனியாகப் போட்டியிடுவோம் என்றும், பாஜகவையும் காங்கிரஸ் கட்சியையும் சம தூரத்தில் வைப்போம் என்றும் அன்னா அணியினர் கூறுகின்றனர். அது காங்கிரசுக்கு எதிரான வாக்குகளை, அதாவது ஆளுங்கட்சிக்கு எதிரான வாக்குகளைப் பிரிப்பதற்கு உதவும். அதன் மூலம் காங்கிரஸ் கட்சிக்கு மறைமுகமாக உதவி செய்யும். காங்கிரஸ் கட்சி ஆட்சியில் தொடர துணைபுரியும் அல்லது காங்கிரஸ் கட்சியை ஒழிக்க முடிவு செய்தால், அவர்கள் பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டும். அப்படியொரு முடிவை எடுத்தால், மாற்று அரசியலை உருவாக்குவது என்ற அவர்களின் நோக்கம் பொய்யாகிவிடும்.
ஊழல் ஒழிப்பு என்பதை மட்டுமே வலிமையானதாகக் கொண்டுசெல்ல வேண்டும் என்றால், வெகுமக்களைத் திரட்டி வீதியில் இறங்கி வலுவாகப் போராட வேண்டும். அரசியல் கட்சி ஆரம்பித்தால் அது பத்தோடு பதினொன்றாகப் போய்விடும்.”
த.ஸ்டாலின் குணசேகரன், தேசியக்குழு உறுப்பினர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
“ஊழல் என்பது தற்போதைய சமூக அமைப்பில் இருக்கக்கூடிய ஒரு நோய். ஊழல் ஒழிப்பு என்பது சமூக மாற்றத்துக்கான போராட்டங்களில் ஒன்று. ஊழல் அரசியல்வாதிகள் மீதான வெறுப்பு, கோபம் கொண்டிருக்கிற இளைஞர்களிடம், இதற்கு எதிராக ஏதாவது செய்ய வேண்டும் என்கிற வெறி இருக்கிறது. ஹஸாரேவின் ஊழல் எதிர்ப்பு முழக்கத்திற்கு இவ்வளவு பெரிய ஆதரவு கிடைத்திருப்பதற்கான காரணம் அதுதான்.
பொதுவாழ்வில் இருந்து பின்னர் அரசியலுக்கு வந்த எவரும் அரசியலில் வெற்றி பெறவில்லை. அதற்கு எம்.எஸ்.உதயமூர்த்தி போன்றவர்களை உதாரணமாகச் சொல்ல முடியும். அரசியலில் இருந்துகொண்டு, அரசியலில் ஊறித் திளைத்தவர் பெரியார். அவர் பொதுமனிதராகத்தான் பார்க்கப்பட்டார். ஏனெனில், அவர் நேரடியாக அரசியலுக்கு வரவில்லை. காந்தியடிகளைக்கூட காங்கிரஸ்காரர் என்று யாரும் பார்க்கவில்லை.
அரசியல் என்பது புனிதமான இடம். எளிமைக்கும் தூய்மைக்கும் இலக்கணமாக வாழ்ந்துகொண்டிருக்கும் நல்லகண்ணு மாதிரி ஆயிரக்கணக்கான நேர்மையாளர்கள் அரசியலில் இருக்கத்தான் செய்கிறார்கள். அரசியல் மோசம் என்று பேசப்படுவதற்குக் காரணம் கொள்கையற்ற, அரசியலற்ற மனிதர்கள் அரசியலில் கோலோச்சுவதால்தான். ஹஸாரே போன்றவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்பது வரவேற்கத்தக்கது. ஆனால், ஓர் அரசியல்வாதியாக மக்கள் அவரை ஏற்பார்களா என்பது பெரும் சந்தேகத்துக்குரியது.”
எஸ்.எம்.அரசு, பொதுச்செயலாளர், ஊழல் எதிர்ப்பு இயக்கம்
“அன்னா ஹஸாரே நேர்மையோடு செயல்படுகிறார் என்று உறுதியாக நம்புகிறேன். ஊழலுக்கு எதிரான அமைப்பை பெரிய அளவில் உருவாக்கித் தீவிரமாக அவர் செயல்படுகிறார். அவரைப் போன்றவர்கள் அரசியலுக்கு வந்தால் நிச்சயம் சாதிக்க முடியும். ஆனால், அது உடனடியாக சாத்தியப்படும் என்று சொல்ல முடியாது. ஏனெனில், ஊழலுக்கு எதிராகப் போராடுகையில் அவரை ஆதரிப்பவர்கள், தேர்தல் அரசியலிலும் அவரை ஆதரிப்பார்கள் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. ஜாதி, மதம் போன்ற பல காரணிகள் தேர்தலில் தீர்மான சக்திகளாக உள்ளன. அப்படிப்பட்ட சூழலில் ஹஸாரேவுக்கு அவர்கள் வாக்களிப்பார்கள் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை.
நேர்மையை மட்டுமே வைத்துக்கொண்டு அரசியலில் ஜெயிக்க முடியாது. அப்படியென்றால், கம்யூனிஸ்ட் கட்சி என்றைக்கோ ஆட்சியைப் பிடித்திருக்க வேண்டும். ஆனால், அது நடக்கவில்லை.
இதையெல்லாம் சொல்வதால், ஹஸாரேவால் சாதிக்க முடியாது என்பதற்காக அல்ல. நிச்சயம் அவரால் சாதிக்க முடியும். அதற்கு நீண்டகாலம் தேவைப்படும். அதற்கு, முதலில் அவர் அரசியலுக்கு வர வேண்டும்.”
புதியதலைமுறை 09-08-2012