ஆந்திர சிறையில் வாடும் 32 தமிழர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”செம்மரக் கடத்தலில் ஈடுபட்டார்கள் என்று குற்றம் சுமத்தப்பட்டு 32 தமிழர்கள் ஆந்திரக் காவல் துறையினரால் சித்தூர் சிறையில் அடைக்கப்பபட்டுள்ளனர். இவர்களுக்கு சட்ட ரீதியிலான உதவிகள் வழங்கிட வழக்கறிஞர்களை ஏற்பாடு செய்துள்ள தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பதோடு, அவர்களை ஜாமீனில் கொண்டு வர முழு முயற்சிகள் செய்திட வேண்டும்.
உரிய ஆதாரங்கள் இன்றி அப்பாவித் தமிழர்களை கைது செய்வததென்பது ஆந்திர காவல் துறைக்கு வாடிக்கையான ஒன்றாகி விட்டது. இவ்வாறு கைது செய்யப்பட 20 தமிழர்கள் போலி என்கவுன்டர் மூலம் அநியாயமாக சுட்டுக் கொல்லப்பட்டதும், அந்தப் படுகொலைகளுக்கான நியாயம் வழங்கப்படாமல் இன்னும் இழுத்தடிக்கப்பட்டுக் கொண்டு இருப்பதும் நமக்கு மிகவும் கவலை அளிக்கிறது.
சேஷாசலம் வனப்பகுதியில் 2 வனத்துறை அதிகாரிகள் கொல்லப்பட்ட பின்னர் கைது செய்யப்பட 450 தமிழர்களை குற்றமற்றவர்கள் என்று கூறி இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் ஆந்திர மாநில நீதிமன்றம் விடுதலை செய்ததையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
எனவே, அப்பாவித் தமிழர்கள் மீது பொய் வழக்குகள் பதிவு செய்து சிறையிலடப்பதை விடுத்து, உண்மைக் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க ஆந்திர அரசு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்; சிறையில் வாடும் அப்பாவித் தமிழர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்” என்று தமிழருவி மணியன் கூறியுள்ளார்.
நன்றி – தி இந்து – தமிழ்