வர்த்தமானன் பதிப்பகம் சார்பில் மகாத்மா காந்தி எழுதியவை “மகாத்மா காந்தி நூல்கள்’ என்ற தலைப்பில் 20 தொகுதிகளாக தொகுக்கப்பட்டுள்ளன. இந்த நூல்களின் 6-ம் பதிப்புக்கான வெளியீட்டு விழா சென்னை நாரத கான சபாவில் நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ். ராஜேஸ்வரன், மேற்கு வங்க முன்னாள் தலைமைச் செயலர் பி.எஸ். ராகவன், காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன். தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அவ்வை நடராஜன், ஸ்ரீராம் சிட்டி நிர்வாக இயக்குநர் கண்ணன், பொள்ளாச்சி மகாலிங்கம், வர்த்தமான பதிப்பக நிறுவனர் சந்திரன் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் பேசுகையில், “பற்றற்று வாழ்வதும், சக மனிதன் மீது இரக்கம் கொள்வதுமே காந்தியத்தைப் பின்பற்றுவதாகும். காந்தியை மறுவாசிப்பு செய்யவேண்டும். காந்தியை நாம் புரிந்துகொண்டதை விட அதிகம் புரிந்து கொண்டவர்கள் வெளிநாட்டினர் தான்.
காந்தி ஒரு பதவி மறுப்பாளர். ஜார்ஜ் வாஷிங்டன், லெனின், பிடல் காஸ்ட்ரோ, நெல்சன் மண்டேலா, போன்றோர் தாங்கள் போராடிக் கிடைத்த வெற்றிக்குப் பிறகு பதவிகளை ஏற்றுக்கொண்டனர். ஆனால், காந்தி மட்டுமே பதவியே ஏற்க மறுத்தவர். எனவே காந்தியவாதிகளும் பதவி மறுப்பாளர்களாக இருக்க வேண்டும். நாம் குறைந்த தேவைகளை வைத்துக் கொண்டு வாழ பழகிக் கொள்ள வேண்டும். தேவைகள் அதிகரிக்கும் போது பிரச்சினைகளும் அதிகரிக்கும்
நமது பண்பாட்டு வேர்கள் எங்கோ பறி போய் விட்டன, இன்றைய இளைஞர்களுக்கு ஒழுக்கத்தை மையமாக வைத்து கல்வி அளிக்கப்படவில்லை. அறிவும் ஒழுக்கமும் வேறு வேறாக இருக்க முடியாது. காந்தியக் கல்வி என்பது அறத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். நல்ல அறிவு என்பது நல்ல ஒழுக்கத்தை சார்ந்ததாகும். இன்றைக்கு ஒழுக்கமற்ற சமுதாயம் உருவாகி வருகிறது. இதனை மாற்ற வேண்டும்.
மது விலக்கு கொள்கையை முழுமையாக கொண்டுவர வேண்டும். மது விற்பனை மூலம் தமிழக அரசுக்கு ரூ. 15 ஆயிரம் கோடிக்கும் மேல் வருமானம் வருகிறது என்கிறனர். இதனாலே மதுவிலக்கைக் கொண்டு வர முடியவில்லை என்று கூறுகின்றனர்.
இந்த வருமானத்தை மாற்றுத் திட்டம் மூலம் பெறவதற்கான ஆலோசனைகளை வழங்குவதற்காக பிப்ரவரி மாதம் 26ந் தேதி சென்னையில் ஓர் ஆலோசனை கூட்டம் ஒன்று நடத்த உள்ளோம். அந்த ஆலோசனைகளை பின்பற்ற தமிழக அரசு முன்வரவேண்டும்” என்றார் தமிழருவி மணியன்.
Thanks: www.inneram.com