காந்திய மக்கள் இயக்கத்தின் கோவை மாவட்ட இளைஞரணி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு இயக்கம் சார்பில், “இயற்கை முறை விவசாய மேம்பாடு” குறித்த கருத்தரங்கம், கோவை மாவட்டம் அன்னூர்-பொன்னேகவுண்டன்புதூரில் 19 05 2013 ஞாயிறன்று காலை 10 மணியளவில் நடந்தது.
“பஞ்ச கவ்யம் தயாரித்து, அதை பயன்படுத்துவதன் மூலம் விவசாயத்தில் அற்புதமான பலன்கள் பெறலாம். பசு சாணம், சிறுநீர், பால், தயிர், கடலை புண…்ணாக்கு ஆகியவற்றுடன், வாழைப்பழம், இளநீர், கரும்புசாறு ஆகியவற்றை குறிப்பிட்ட விகிதத்தில் கலக்கி பஞ்சகவ்யம் தயாரிக்க வேண்டும். விதைகளை பஞ்சகவ்யத்தில் நனைத்து அதன் பின் விதைத்தால் கூடுதல் மகசூல் பெறலாம்,” என்று இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் பேசினார்.
காந்திய மக்கள் இயக்கத்தின் கோவை மாவட்ட இளைஞரணி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு இயக்கம் சார்பில், “இயற்கை முறை விவசாய மேம்பாடு’ குறித்த கருத்தரங்கம், பொன்னேகவுண்டன்புதூரில் நடந்தது. சுற்றுச்சூழல் இயக்க தலைவர் நடராஜ் தலைமை வகித்தார்.
இதில் இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் பேசியதாவது:
ரசாயன உரங்களை தொடர்ந்து பயன்படுத்துவதால் நிலம் கெடும். முதலில் அதிக விளைச்சல் தரும். பின்னர் நிலவளம் குறைந்து, விளைச்சலும் குறைந்து விடும். ரசாயன உரங்களை பயன்படுத்துவதால், விளைபொருள் விஷமாகி, சாப்பிடும் மக்களும் நோய் பாதிப்புக்கு உள்ளாவார்கள். வேம்பு உள்ளிட்ட இயற்கை பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தினால், முதலில் விளைச்சல் குறைவாக இருக்கும். பின்னர் ஆண்டுக்கு ஆண்டு நிலவளம் கூடும். அதன்பின் மகசூல் அதிகரிக்கும். உர செலவு குறையும். விவசாயத்தில் அதிக விளைச்சல் பெற, தோட்டத்தில் விழும் இலை, தழை, செடிகளை அப்புறப்படுத்தக்கூடாது. அவற்றை பயிர், செடி மற்றும் மரங்களை சுற்றி போட வேண்டும். இப்படி போடுவதால், அந்த இடத்தில் மண்ணில் ஈரப்பதம் நீடிக்கும். வெளியில் இருப்பதை விட வெப்பம் அங்கே குறைவாக இருக்கும். நாளடைவில் இலை, தழைகள் மக்கி, மண்ணுக்கு வளம் சேர்க்கும்.
குஜராத்தில் இந்த முறையை பின்பற்றி அதிக விளைச்சல் எடுக்கின்றனர்.கரும்பு வெட்டும்போது ஒரு ஏக்கருக்கு ஐந்து டன் வரை தோகை கிடைக்கிறது. பலர் அதை எரிக்கின்றனர். அந்த தோகையை எரிக்காமல் மண்ணுடன் மக்க விட்டுவிட வேண்டும். தோட்டத்திற்குள் விழுபவைகளில், பிளாஸ்டிக், ரப்பர், இரும்பு, அலுமினியம் தவிர மற்றவற்றை அப்புறப்படுத்தாமல், அப்படியே மக்க விட வேண்டும்.
பஞ்ச கவ்யம் தயாரித்து, அதை பயன்படுத்துவதன் மூலம் அற்புதமான பலன்கள் பெறலாம். பசு சாணம், சிறுநீர், பால், தயிர், கடலை புண்ணாக்கு ஆகியவற்றுடன், வாழைப்பழம், இளநீர், கரும்புசாறு ஆகியவற்றை குறிப்பிட்ட விகிதத்தில் கலக்கி பஞ்சகவ்யம் தயாரிக்க வேண்டும். விதைகளை பஞ்சகவ்யத்தில் நனைத்து அதன் பின் விதைத்தால் கூடுதல் மகசூல் பெறலாம்.
கிராமங்களில் இருந்து பல லட்சம் பேர் நகரத்தை நோக்கிச் செல்கின்றனர். நகரில் சுத்தமான காற்று இல்லை. மக்கள் கிராமங்களிலிருந்து வெளியேறுவதை தடுக்க அரசும், மக்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராமங்களில் போதுமான வசதிகள் செய்து தரப்பட்டால், நகரங்களை நோக்கிச் செல்வது குறையும்.
ஒவ்வொரு வீட்டிலும் மரங்கள் நட வேண்டும். குளியல் நீர் செல்லும் இடத்தில் வாழை, பாத்திரம் கழுவும் இடத்தில் தென்னை, வேலியில், சவுண்டால், மொசு மொசு, அகத்தி, சீதா பழம் ஆகிய மரங்களை நடலாம். பல ஆண்டுகளாக, பலரும் இயற்கை வேளாண்மையை பற்றி பேசியதால், தமிழ்நாடு வேளாண் பல்கலை, இயற்கை வேளாண்மைக்கு என தனி துறை துவங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
இவ்வாறு, நம்மாழ்வார் பேசினார்.
தினமலர் 20-05-2013See More