மதுரை, ஆக. 5-
மதுரையில் இன்று காந்திய மக்கள் இயக்கம் மாநில செயற்குழு கூட்டம் நடந்தது. இதில் இயக்க தலைவர் தமிழருவி மணியன் கலந்து கொண்டு பேசினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் உள்ள நதிகளை இணைத்தாலே மின் தேவை, குடிநீர், பாசனநீர் பூர்த்தியாகி விடும். நதிகளை இணைக்க அரசு வழிவகை செய்ய வேண்டும். மதுரை மாவட்டத்தில் குவாரிகளில் சட்ட விரோதமாக கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டதால் அரசுக்கு பல ஆயிரம் கோடி இழப்பீடு ஏற்பட்டு உள்ளதாக முன்னாள் கலெக்டர் சகாயம் அறிக்கையில் கூறி உள்ளார்.
எனவே தமிழக அரசு கிரானைட் கொள்ளையர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் வங்கிகளில் ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி அளிக்கப் படுகிறதா? என்பதை கண்காணிக்க அரசு சிறப்பு குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும்.
முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் செயலற்ற நிலையில் உள்ள மத்திய அரசுக்கு எதிராக தமிழக மக்கள் ஒன்று திரள வேண்டும்.
கடந்த 1986-ம் ஆண்டு கருணாநிதி மதுரையில் அகில இந்திய தலைவர்கள் அழைத்து டெசோ மாநாடு நடத்தினார். அதன் பிறகு அதை அவர் கிடப்பில் போட்டு விட்டார். எம்.ஜி. ஆருக்கு பிரச்சினை ஏற்படுத்தத்தான் அப்போது அந்த மாநாடு நடத்தப்பட்டது. தற்போதும் கருணாநிதி நடத்தும் டெசோ மாநாட்டில் ஈழதமிழர்களுக்கு எந்த பயனும் ஏற்பட போவதில்லை. வாழ்வுரிமையும் கிடைக்காது. தன் மீது உள்ள தமிழக துரோகி என்ற களங்கத்தை போக்கவே அவர் டெசோ மாநாடு நடத்துகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
Thanks: http://www.maalaimalar.com