சொல்லின் செல்வர் சம்பத்தின் நளினமான வார்த்தைப் பிரயோகங்களை தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவனிடம் என்றும் காண முடிந்ததில்லை என்றும், அவரிடம் உள்ள மிகப்பெரிய குறை அவரது வாயடக்கமின்மை என்றும் காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் கூறியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் இளங்கோவன், வீழ்ந்து கிடக்கும் காங்கிரஸ் கட்சிக்குப் புத்துயிர் அளிக்கும் நோக்கில் வேகமாகச் செயற்படுவதும், ஆட்சி பீடத்தில் உள்ளவர்களின் ஊழல் நடவடிக்கைகளை மக்கள் மன்றத்தில் ஆதாரங்களுடன் வெளிப்படுத்த முயல்வதும், ராகுல் காந்தியை வரவழைத்துத் திருச்சியில் மாபெரும் மக்கள் கூட்டத்தைத் திரட்டிக் காட்டியதும், கூட்டணி ஆட்சி குறித்து வெளிப்படையாகப் பேசி வருவதும் அவரது தலைமைக்கு மதிப்புகளைத் தேடித் தந்தன. ஆனால் அவரிடம் உள்ள மிகப்பெரிய குறை அவரது வாயடக்கமின்மை.
‘திருவாளர் அண்ணாதுரை பொய் பேசினார் என்று நான் சொல்ல மாட்டேன். அவர் உண்மைக்குப் புறம்பாகப் பேசி வருகிறார்’ என்று மேடை நாகரிகத்திற்கு மெருகேற்றிய சொல்லின் செல்வர் சம்பத்தின் நளினமான வார்த்தைப் பிரயோகங்களை இளங்கோவனிடம் என்றும் காண முடிந்ததில்லை. ‘எண்ணம் என்பது ஏப்பம் இல்லை. அதை நினைத்தபடி வெளிப்படுத்துவதற்கு’ என்ற அண்ணாவின் அழகான விளக்கத்தை இளங்கோவன் இனியாவது நெஞ்சில் நிறுத்த வேண்டும்.
மோடி – ஜெயலலிதா சந்திப்பை இளங்கோவன் வருணித்த விதம் விரசமானது என்பதில் இரு கருத்துக்களுக்கு இடமில்லை. ஆனால் ஆர்ப்பாட்டங்கள் என்ற பெயரில் அ.தி.மு.க.வினர் நிகழ்த்தும் எதிர்வினை நடவடிக்கைகள் அராஜகமானவை. சத்தியமூர்த்தி பவனைத் தாக்க முற்பட்டதும், இளங்கோவன் இல்லத்தை முற்றுகையிட முயன்றதும், அவரது உருவ பொம்மைகளை எரித்துத் தரக்குறைவான நடவடிக்கைகளில் ஈடுபட்டதும் எந்த வகையிலும் நியாயப்படுத்தக் கூடியதன்று.
முன்பொருமுறை உயர்நீதிமன்ற வளாகத்தில் சுப்பிரமணிய சுவாமிக்கு எதிராக அ.தி.மு.க., மகளிர் அணியினர் நடத்திய எதிர்ப்பு நாடகம் அன்று அனைவரையும் முகஞ்சுளிக்க வைத்தது. இன்று இளங்கோவனுக்கு எதிரான நடவடிக்கைகளும் ஜனநாயக மரபுகளுக்கு உட்பட்டதாக அமையவில்லை. அதிகாரம் தங்கள் கையில் இருக்கிறது என்ற ஆணவம் எந்த நிலையிலும் தலைக்கேற ஆளும் கட்சியினர் இடமளிக்கலாகாது.
“வாய் தவறி வந்து விழுந்த வார்த்தைகள்” என்று இளங்கோவன் வருத்தம் தெரிவித்தால் அது அவருடைய தலைமைப் பண்புக்கு பெருமையைத்தான் சேர்க்கும். ஊடகங்கள் மீதும், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மீதும் அடிக்கடி அவதூறு வழக்குகளைப் போடுவதைத் தவிர்த்தால், முதல்வர் ஜெயலலிதா விற்கு ஜனநாயகத்தின் நடைமுறைகளைப் பேணிப் பராமரிப்பவர் என்ற நற்பெயர் வந்து சேரும்.
நாகரிக அரசியலை நடைமுறைப் படுத்துவதற்கு இரு கைகளும் இணைந்து ஓசை எழுப்புவதே நல்லது” என்று தெரிவித்துள்ளார்.