நார்வே நாட்டின் தலைநகர் ஆஸ்லோவில் நடந்த “நார்வே தமிழ்த் திரைப்பட விழா”வில், உச்சிதனை முகர்ந்தால் – திரைப்படம் 4 விருதுகளைப் பெற்றுள்ளது. ஏப்ரல் 29ம் தேதியன்று, ஆஸ்லோவில் நடந்த விழாவில் விருதுகள் அறிவிக்கப்பட்டன.
மக்களின் அபிமானம் பெற்ற சிறந்த திரைப்படத்துக்கான ‘நள்ளிரவுச் சூரியன்’ விருதினை, உச்சிதனை முகர்ந்தால் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த விருதுக்காக பேஸ்புக் மூலம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் முதலிடம் பெற்று, அந்த விருதினைப் பெற்றது ‘உச்சிதனை முகர்ந்தால்’.
சிறந்த பாடலாசிரியர், சிறந்த கதாசிரியர், சிறந்த குழந்தை நட்சத்திரம் – ஆகிய விருதுகளையும் உச்சிதனை முகர்ந்தால் பெற்றது.
சிறந்த பாடலாசிரியர் விருதினை உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் பெற்றார். உலகத் தமிழர்களின் பெருமதிப்புக்குரிய அவர், திரைப்படத்துக்குப் பாடல் எழுதுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. “இருப்பாய் தமிழா நெருப்பாய் நீ” – என்ற அவரது பாடல், உச்சிதனை முகர்ந்தால் – படத்தின் உச்சக்கட்டக் காட்சியில் இடம்பெறுகிறது. அந்தப் பாடலை இசையமைப்பாளர் இமான், இதயத்தை உருக்கும் விதத்தில் பாடியிருந்தார்.
சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருது, உச்சிதனை முகர்ந்தால் படத்தில் ஒய். புனிதவதியாக நடித்திருந்த நீநிகாவுக்குக் கிடைத்துள்ளது. புனிதவதியாகவே வாழ்ந்து காட்டிய நீநிகாவுக்குப் பல்வேறு விருதுகள் கிடைக்கும் என்று தமிழ்நாட்டின் மூத்த தலைவரான நல்லகண்ணு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ, காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் உள்பட பலரும் ஏற்கெனவே பாராட்டியிருந்தனர். நார்வே விருது நீநிகா, சர்வதேச அளவில் பெறும் முதல் விருதாகும்.
சிறந்த கதாசிரியர் விருதினை, உச்சிதனை முகர்ந்தால் கதைக்காக, இயக்குநர் புகழேந்தி தங்கராஜ் பெற்றுள்ளார். 2009 மார்ச் முதல் தேதி மட்டக்களப்புக்கு அருகே சிங்களப் படைகளால் சீரழிக்கப்பட்ட புனிதவதி என்கிற 13 வயது சிறுமியின் உண்மைக்கதையை அடிப்படையாகக் கொண்டு இந்தக் கதை உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
உண்மையிலேயே நிகழ்ந்த போர்க்குற்றம் ஒன்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட உச்சிதனை முகர்ந்தால் – திரைப்படத்துக்குக் கிடைத்துள்ள இந்த அங்கீகாரம், மேன்மேலும் இதுபோன்ற மாற்று சினிமாக்கள், மக்களுக்கான சினிமாக்கள் வர வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உச்சிதனை முகர்ந்தால் படத்துக்கு விருது கிடைத்த செய்தி தொலைக்காட்சிகளில் வெளிவந்ததும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் படத்தின் சிறப்புக்காட்சி நடத்தக் கோரி தொலைபேசி மூலம் அணுகியவர்களின் அக்கறைதான் விருது கிடைத்ததைக்காட்டிலும் அதிக மகிழ்ச்சியை அளித்தது என்கிறார் இயக்குநர் புகழேந்தி தங்கராஜ். மக்களைப் போய்ச் சேர்ந்து விடாதபடி திட்டமிட்டு முடக்கப்பட்ட உச்சிதனை முகர்ந்தால் – நார்வே விருது பெற்ற சூட்டோடு தமிழ்நாடு முழுக்க ஒரு ரவுண்ட் வந்தால், புகழேந்தி மட்டுமல்ல – ஒவ்வொரு தமிழனும் மகிழ்ச்சியடைவான் என்பதை புகழேந்திக்குச் சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம்.
இலங்கை இனவெறி அரசு செய்த இனப்படுகொலையை அம்பலப்படுத்தியதோடு நில்லாமல், விருதுகளைக் குவிக்கும் தரமான படமாகவும் உச்சிதனை முகர்ந்தால் படத்தை உருவாக்கியிருப்பதற்காக வசனம் எழுதிய தமிழருவி மணியன், இசையமைத்த இமான், ஒளிப்பதிவு செய்த கண்ணன் – அழகிய மணவாளன் உட்பட தொழில் நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நம்முடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்!
(நமது ஒரே வருத்தம் என்வென்றால் தமிழ் ஊடகங்கள் இப்படத்தை மட்டுமல்லாது, இந்த விருது பற்றிய செய்திகளையும் மக்களிடையே கொண்டு சேர்த்தால்/சென்றால் இன்னும் சிறப்பாக இருக்கும். அனைத்து முகநூல் நண்பர்களும் இதை பதிவு செய்யவும் – நன்றி.)