உள்ளாட்சி இடைத் தேர்தலில் காந்திய மக்கள் இயக்கம் போட்டி ….
காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவிமணியன் பேட்டி
திருச்சி, செப்.8-
காங்கிரசில் இருந்து வெளியேறி ஜி.கே.வாசன் தனிக்கட்சி தொடங்கினால், அவருடன் இணைந்து பணியாற்ற தயார் என்று காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவிமணியன் கூறினார்.
பேட்டி
திருச்சியில், காந்திய மக்கள் இயக்க மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் கணேசன், திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் வடிவேல் மற்றும் நிர்வாகிகள் பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு பின்னர் தமிழருவிமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பூரண மதுவிலக்கு கொள்கை
உள்ளாட்சி தேர்தலில் கோவை மாநகராட்சி மேயர் பதவிக்கும், திருப்பூரில் ஒரு பேரூராட்சி தலைவர் பதவிக்கும் காந்திய மக்கள் இயக்கம் சார்பில் வேட்பாளர்கள் களம் இறங்கி உள்ளனர். உள்ளாட்சி தேர்தலில் எங்கள் இயக்கம் அதிக வாக்குகளை பெறும். இதற்காக அங்கு பிரசாரம் மேற்கொள்ள உள்ளேன். 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது பூரண மதுவிலக்கு கொள்கையை முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தால் 2 கோடி பெண் வாக்காளர்கள் அ.தி.மு.க.வுக்கு வாக்களித்து மீண்டும் அவரை ஆட்சியில் அமர்த்துவார்கள்.
தமிழத்தில் மதுவிலக்கு கொள்கையை அமல்படுத்த வலியுறுத்தி அக்டோபர் 2-ந் தேதி முதல் கோவையில் இருந்து சென்னை வரை 1,000 கிலோ மீட்டர் தூரம் 100 கிராமங்களில் காந்திய மக்கள் இயக்கத்தை சேர்ந்த 100 பேர் பாதயாத்திரையாக சென்று பிரசாரம் மேற்கொள்ள உள்ளோம்.
ஜி.கே.வாசனுடன் இணைந்து பணியாற்றுவோம்
காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ஜி.கே.வாசன் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று கூறி இருக்கிறார். தமிழகத்தில் இனி காங்கிரஸ் எழுந்து நிற்க எந்த வாய்ப்பும் கிடையாது. 2016-ம் ஆண்டு தேர்தலை மனதில் கொண்டு சத்தியமூர்த்தி பவனை சோனியாவிடம் ஒப்படைத்து விட்டு ஜி.கே.வாசன் காங்கிரசில் இருந்து வெளியேற வேண்டும். தமிழக காங்கிரசார் பலர் அவருக்கு பின்னால் இருக்கிறார்கள்.
காங்கிரசில் இருந்து வெளியேறி ஜி.கே.வாசன் ஒரு கட்சியை தொடங்கினால் காந்திய மக்கள் இயக்கம் அவருடன் இணைந்து பணியாற்ற தயாராக இருக்கிறோம். அப்போது சாதி, மதம் இல்லாத ஒரு புதிய அணியை உருவாக்கும் முயற்சியை ஏற்படுத்துவோம். அதற்கு வாசன் வெளியே வரவேண்டும் என்று அவரை அன்போடு அழைக்கிறேன்.
தெளிவுபடுத்த வேண்டும்
நரேந்திரமோடி ஆட்சியில் தமிழக மீனவர்கள், ஈழத்தமிழர் பிரச்சினையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை அரசு விடுவிக்க கூடாது என்ற சுப்பிரமணியசாமியின் கருத்து, அவருடைய சொந்த கருத்தா? அல்லது பா.ஜ.க.வின் கருத்தா? என்பதை மக்களுக்கு பா.ஜ.க. தெளிவுபடுத்த வேண்டும்.
தமிழகத்தில் 16-வது முறையாக அமைச்சரவை மாற்றம் நிகழ்ந்து இருப்பது கேலிக்கூத்தாக உள்ளது. தேர்வு செய்த வாக்காளர்களுக்கு ஒரு அமைச்சர் ஏன் நீக்கப்பட்டார்? பின்னர் ஏன் அவர் மீண்டும் சேர்க்கப்பட்டார்? என்பது குறித்து காரணம் அறிய உரிமை உண்டு. இதனை முதல்-அமைச்சர் ஜெயலலிதா மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.