கோவை மாநகராட்சி மேயர் பதவிக்கான தேர்தலில் காந்திய மக்கள் கட்சி சார்பில் டென்னிஸ் கோவில்பிள்ளை போட்டியிடுவார் என்று அக் கட்சியின் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்தார்.
கோவையில் நிருபர்களுக்கு சனிக்கிழமை அவர் அளித்த பேட்டி:
காந்திய மக்கள் கட்சி சார்பில், கோவை மாநகராட்சி மேயர் பதவிக்கு டென்னிஸ் கோவில்பிள்ளையும், திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி பேரூராட்சித் தலைவர் பதவிக்கு முத்துகுமாரும் போட்டியிடுகின்றனர்.
காந்திய மக்கள் கட்சிக்கு மக்கள் மத்தியில் உள்ள செல்வாக்கு குறித்து அறிந்துக் கொள்ள இந்தத் தேர்தலில் போட்டியிடுகிறோம்.
உள்ளாட்சி அமைப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பது காந்தியின் கொள்கை.
அதே நேரத்தில், உள்ளாட்சி அமைப்புகளில் கட்சி சார்பற்ற நிர்வாகத்தை அளிக்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே, உள்ளாட்சித் தேர்தலில் முதல்முறையாக போட்டியிடுகிறோம். கடந்த 2016-ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்குப் பின் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் மாநிலம் முழுவதும் போட்டியிடத் திட்டமிட்டுள்ளோம்.
கோவை மாநகராட்சியில் திமுக, அதிமுக-வினர் மேயர் பதவி வகித்துள்ளனர். ஆனால், இரு கட்சிகள் சார்பிலும் ஊழலற்ற நிர்வாகம் அளிக்க முடியவில்லை. எனவே, ஊழலற்ற நிர்வாகம் அளிக்கவே இத் தேர்தலில் போட்டியிடுகிறோம்.
அதே சமயம், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுடன் கருத்து வேறுபாடு எதுவும் இல்லை.
தமிழக மீனவர்கள், ஈழத் தமிழர்கள் நலனுக்கு எதிராக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்து கருத்துத் தெரிவித்து வருகிறார். அவரின் கருத்து குறித்து கட்சித் தலைமை தெளிவான கருத்தைத் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு கருத்து தெரிவிக்கவில்லை என்றால், தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சி பாதிப்படையும்.
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக பதவி வகித்த சதாசிவம், கேரள மாநில ஆளுநராக பதவியேற்றுள்ளார். இதே போல், பாஜக அமைச்சரவையில் முன்னாள் ராணுவத் தளபதி வி.கே.சிங் இடம்பெற்றுள்ளார்.
ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகளுக்கு அரசியல் சார்பற்ற பதவிகளை வழங்கியுள்ளது ஏற்க முடியாது என்றார் தமிழருவி மணியன்.