கர்நாடகத்தில் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் வன்முறை, நமக்கு மிகுந்த கவலையையும், வருத்தத்தையும் உருவாக்கி இருக்கிறது. காவிரி நீரில் தனக்குண்டான உரிமையையும், பங்கையும் ஒவ்வொரு முறையும் உச்ச நீதி மன்றத்தின் கதவுகளைத் தட்டியே தமிழகம் பெற்று வரும் சூழல் நிலவி வருகிறது. கடந்த ஆகஸ்ட் வரை வழங்கப்படவேண்டிய தண்ணீரில் 61 TMC மீதம் உள்ள நிலையில் நீதிமன்றத் தீர்ப்புப்படி 12 TMC தண்ணீர் திறந்து விடப்பட்டதற்கு கன்னட அடிப்படைவாதிகளிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியிருந்த நிலையில், இன்று கர்நாடக அரசு தாக்கல் செய்திருந்த மறு சீராய்வு மனு உச்ச நீதி மன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் வன்முறை – கைவிடக் கோரி காந்திய மக்க இயக்கம் வலியுறுத்தல்
இதனைப் பின்னணியாகக் கொண்டு தமிழ்நாட்டுப் பதிவு கொண்ட வாகனங்கள், தமிழ் மக்களின் வணிக நிறுவனங்கள் வன்முறைக் கும்பல்களால் தாக்கப்பட்டு வருகின்றன. தங்கள் மாநில நலனை மட்டுமே முன் நிறுத்தி குறுகிய கண்ணோட்டத்துடன் செயல்படும் இந்த போக்கு தொடர்வது, இந்திய ஒருமைப்பாட்டு எவ்வளவு காலம் நீடிக்கும் என்ற கேள்வியை எழுப்புகிறது.
கர்நாடகத்தில் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் கட்சிக்கும், மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜகவிற்கு தமிழகத்தில் வலு இல்லை என்பதால், தமிழக நலன் குறித்த அக்கறை சிறிதும் இல்லை; தமிழகத்தில் உள்ள இக்கட்சிகளின் மாநில அமைப்புகளை தேசியத் தலைமைகள் மதிப்பதே இல்லை. கர்நாடக அதிகார அரசியலில் தங்களை நிலை நிறுத்திக் கொள்வதற்காக தமிழக வாழ்வாதார உரிமைகள் புறக்கணிக்கப்படுவதை பற்றி கவலை கொள்வதும் இல்லை. காவிரி நதி நீர் ஒழுங்காற்றுக் குழு அமைப்பதற்கான அறிவிக்கை வெளியிடத் தாமதமாவது ஏன் ? என்பதை மத்திய அரசு விளக்கியாக வேண்டும்.
இன்றைய சூழலில், கர்நாடகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களும் ஒன்றுக்கொன்று சார்பு இன்றி தன்னந் தனியே இயங்க இயலாது, இதனை கருத்தில் கொண்டு, சுயநலக்கார கன்னடர்கள் வன்முறையை உடனடியாகக் கைவிட வேண்டும். கர்நாடக நிகழ்வுகளைப் பார்த்து தமிழ்நாட்டு மக்கள், சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக் கொள்ளக்கூடாது. இரு மாநில மக்களின் நலனைப் பேணுவதற்கு உரிய நடவடிக்கைள் எடுக்க வேண்டும் என்று ஆட்சி பொறுப்பில் இருப்போரை காந்திய மக்கள் இயக்கம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.