காந்திய மக்கள் இயக்கம் நடத்தும் அரசியல் விழிப்புணர்வு மாநாடு.
20.08.2017 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணிக்கு திருச்சி அண்ணா நகர் உழவர் சந்தையில் மாநாடு நடைபெருகிறது, இம்மாநாட்டில் ரஜினியின் அரசியல் பிரவேசம் – அவசியமா? ஆய்வுரை ஆற்றுகிறார் தமிழருவி மணியன், மேலும்
விவசாயிகளின் வேதனை :
விவசாயம் பொய்த்து வேதனையில் வாடி தற்கொலைக்குத் தள்ளப்படும் விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் அளிக்கப்பட வேண்டும். காவிரி நதி நீரில் உரிய பங்கினைப் பெற்றிட மேலாண்மை வாரியம் அமைத்திட வேண்டும். உள்நாட்டு நதிகளை இணைப்பதின் மூலம் நதிநீர் வீணாவதை தடுப்பதுடன் பாசன வசதிகளை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.
பூரண மதுவிலக்கு :
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் வழிகாட்டு நெறிமுறை 47-வது பிரிவின்படி பொது உடல்நலத்தை மேம்படுத்த, மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திட மதுவிலக்கு வலியுறுத்தப்படுகிறது. ஆனால் தமிழகத்து மக்களில் ஒரு கோடிக்கும் மேற்பட்டவர் குடிநோய்க்கு ஆளாகி உள்ள நிலையில் மது வருமான இழப்பை சரிகட்ட மாற்றுத் திட்டங்களைத் தந்தும், பூரண மதுவிலக்கை நோக்கி, தமிழக அரசு விரைந்து செயலாற்றவில்லை. மேலும் தாமதிக்காமல் பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்திட ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் இறங்க வேண்டும்.
லோக் ஆயுக்தா அமைப்பு :
தூய்மையான, வெளிப்படைத்தன்மை நிறைந்த, மக்களுக்கான பொறுப்புடன்கூடிய அரசாக நம் மாநில அரசு இயங்குவதற்கு “லோக் ஆயுக்தா” அமைப்பை உடனடியாக உருவாக்க வேண்டும். நிர்வாகத்தில் ஏற்படும் தவறுகளை கண்காணிப்பதற்கும், ஊழல் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டவர்களின் விண்ணப்பங்களை ஏற்று விசாரிப்பதற்கு லோக் ஆயுக்தா அமைப்பு அவசியமாகிறது. நம் பக்கத்து மாநிலங்களான கேரளம், கர்நாடகம், ஆந்திரா ஆகியவற்றில் “லோக் ஆயுக்தா” செயல்பட்டுவரும் நிலையில், அந்த அமைப்பினைத் தமிழகத்திலும் ஏற்படுத்திட வேண்டும்.
மாணவர்களே! இளைஞர்களே! சமூக ஆர்வலர்களே! தாய்மார்களே! பொதுமக்களே!
தமிழ்நாட்டில் விவசாயம் பாதுகாக்கப்படவும், பூரண மதுவிலக்கின் மூலம் மக்களின் வாழ்வு மேம்படவும், “லோக் ஆயுக்தா” வின் மூலம் ஊழல்களை கட்டுக்குள் கொண்டு வரவும் காந்திய மக்கள் இயக்கம் நடத்திடும் மாநாட்டில் பெரும் திரளாக பங்கேற்க உங்களை அன்புடன் அழைக்கிறோம். இந்த நிகழ்ச்சிகள் சிறப்பாக நடந்தேறிட உங்கள் பொருளுதவியும் வேண்டுகிறோம்.