தெருவெங்கும் மதுக்கடைகள் திறந்து மகாத்மாவின் நினைவுக்கு நல்லஞ்சலி(!) செலுத்தும் மாநில அரசுகள், வருவாய்ப் பெருக்கத்துக்காக விலை மகளிர் விடுதிகளை நடத்தாமல் விட்டதே பெரிய புண்ணியம்…”,
(தினமணி நாளிதழில் இன்று காந்தி ஜெயந்தியையொட்டி எழுதியுள்ள கட்டுரை)
“எனக்கு மட்டும் அதிகாரம் இருக்குமானால் வகுப்புவாதத்தையும்,
மதவெறியையும், வெறுப்புணர்வையும், பகையையும் வளர்க்கக்கூடிய எல்லா எழுத்துகளையும் தீண்டத்தகாதவையாக அறிவிப்பேன்.
என்னைப் பொறுத்தவரை கடவுள் என்பது வாய்மையும் அன்பும்தான். கடவுள் என்பதுஒழுக்கநெறியும் அறவழியும்தான். கடவுள் என்பது அச்சமின்மைதான். வெளிச்சத்திற்கும் வாழ்க்கைக்குமான மூல ஊற்றே கடவுள். நான் ஒரு சர்வாதிகாரியாக இருந்தால், மதமும் அரசியலும் தனித்தனியாகவே இயங்கும். என் மதத்திற்காக நான் உயிரையும் தருவேன். ஆனால், அது என் சொந்த விவகாரம். அதில் அரசுக்கு எந்தவொரு வேலையும் இல்லை’ என்று பிரகடனம் செய்தவர் நம் தேசப்பிதா.
“பலாத்காரத்திலும், பொருளியல் செல்வத்திலும் மேலை நாடுகள் அசைக்க முடியாத, ஆழமான நம்பிக்கை கொண்டுள்ளன. அவை உலக அமைதிக்காகவும், யுத்தக் கருவிகளை ஒழிப்பதற்காகவும் எவ்வளவு உரக்கக் கூவினாலும் அவற்றுக்கு மாறான சக்திகளின் குரலே ஓங்கி ஒலிக்கும்.
மிருகபலத்தைவிட ஆன்மிக சக்தியே அதிக வலிமை வாய்ந்தது என்பதை ஆயுதமற்றமக்களால்தான் நிரூபிக்க முடியும். மிருக பலமற்ற மேன்மையான மனிதன், எவ்வித ஆயுதமும் இல்லாமலே உலகைத் தன்வசமாக்க முடியும் என்பதை உறுதிப்படுத்தும் நாள் விரைவில் வரத்தான் போகிறது’ என்று ஆழ்ந்த நம்பிக்கையுடன் அகிலத்திற்கு அகிம்சையைப் போதித்தவர் நம் அண்ணல்.
“உலகில் தீண்டத்தகாதவர்கள் என்று எவருமே இல்லை. ஒரே நெருப்பின் சுடரொளிதான் ஒவ்வொருவரும். மனிதராய்ப் பிறந்த எவரையும் தீண்டத்தகாதவரென்று ஒதுக்கிவைப்பது மாபெரும் தவறு என்ற மகாத்மாவிடம் ஒரு வெளிநாட்டுப் பத்திரிகையாளர், “இந்தியாவின் சர்வாதிகாரியாக உங்களை ஒரேயொரு நாள் மட்டும் நியமித்தால் என்ன செய்வீர்கள்?’ என்று கேட்டார். “தில்லி வைசிராய் மாளிகையின் குதிரை லாயத்தைவிட மோசமாக இருக்கும் அரிஜனக் காலனியின் குடிசைகளைச் சுத்தம் செய்வதில் அந்த நாளை நான் செலவழிப்பேன்’ என்றார் காந்தியடிகள்.
பிர்லா ஒருமுறை காந்தியிடம், “மனிதன் உண்டு, உடுத்து, இன்பமாய் இந்த மண்ணில் வாழ எவ்வளவு பணம் தேவைப்படும்?’ என்று கேட்டபோது, “எவ்வளவுக்குள் சுகமாகவும், நலமாகவும் வாழ முடியுமோ, அவ்வளவு இருந்தால் போதும்’ என்று பதிலளித்தார்.
“நிறையச் சம்பாதித்து, அதிகமாகச் செலவழிப்பதை நீங்கள் ஏன்
எதிர்க்கிறீர்கள்?’ என்றார் பிர்லா. “இயற்கை அன்னை ஒவ்வொருவருக்கும் சாதாரண இன்ப வாழ்வுக்கு வேண்டிய பொருள்களைத்தான் உற்பத்தி செய்கிறாள். மனிதன் விரயமாக்குவதற்காக அவள் எதையும் தருவதில்லை. யாராவது ஒருவன் தன்னுடைய தேவைக்கு மேல் பயன்படுத்தினால், அடுத்தவனுக்கு அது இல்லாமல் போய்விடும். தேவைக்கு மேல் பயன்படுத்துபவன் என்னளவில் ஒரு கொள்ளைக்காரன்’ என்று தார்மிக ஆவேசத்துடன் பதில் தந்தார் காந்தி.
காரல் மார்க்ஸ் காண விரும்பிய சமத்துவமும், காந்தி சமைக்கத் துடித்த சர்வோதயமும் வர்க்க பேதங்களற்ற வாழ்க்கை முறைதான். எந்த மாற்றமும் வன்முறையால் வரக்கூடாது என்று வலியுறுத்திய மகாத்மா, “நான் வன்முறை தவிர்த்த ஒரு கம்யூனிஸ்ட்” என்றார். ஏழை எளியவர்களின் நலன் காக்கும் தர்மகர்த்தாக்களாக ஒவ்வொரு பணக்காரரும் பரிணமிக்க வேண்டும் என்பது காந்தியக் கனவு. ஆனால் அவருடைய மேலான கனவு இன்றுவரை நிறைவேறாத கனவாகவே நீடிப்பதுதான் வேதனைக்குரியது.
“ஒரு விஷயம் மட்டும் மிக நிச்சயம். காந்தியின் ஆன்மிக சக்தி உறுதியாக ஒருநாள் வெற்றிபெறும். மறுபடியும் மறுபடியும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தோன்றியதைப் போன்று புதிதாக, இயேசுவாக அந்த சக்தி மீண்டும் தோன்றிக் கொண்டே இருக்கும். புதிய சமுதாயத்துக்கு, புதியதோர் பாதைக்கு அந்த அருள்சக்தி நம்மை அழைத்துச் செல்லும்’ என்று நிறம் மாறாத நிஜமான நம்பிக்கையுடன் அழுத்தம் திருத்தமாக ஆருடம் சொன்னவர் பிரெஞ்சுப் பேரறிஞர் ரோமன் ரோலண்ட். அவர்தான் மகாத்மாவை ‘சிலுவை இல்லாத இயேசு’ என்று மனம் நெகிழ்ந்து வருணித்தவர்.
ரோமன் ரோலண்டுக்கு நம் மகாத்மாவின் வாழ்க்கை முறையில் இருந்த ஆழமான நம்பிக்கை, இந்தியர்களாகிய நமக்கு இல்லாமல் போனதுதான் இந்த மண்ணின் மிக மோசமான சாபம். காந்தியப் பாதையில் கால் பதித்து நடப்பது கடினமான காரியம் என்ற முடிவுக்கு நாம் எப்போதோ வந்தாயிற்று. வாழ்க்கையின் உன்னதமான விழுமியங்களின் மீதிருந்த பிடிப்பும் பற்றும் மேலைநாட்டுக் கலாசாரப் பாதிப்பால் நம்மிடமிருந்து முற்றாகப் பறிபோய்விட்டன. பணத் தேட்டமும், உடல் சார்ந்த இன்ப நாட்டமும்தான் நம் வாழ்வின் அடிப்படை நோக்கங்களாகச் சரிந்துவிட்டன.
திருக்குறள் போன்ற நீதிநூல்களைக் கூட நாம் அழகாகப் பேசவும், எழுதவும் மட்டுமே பயன்படுத்துகிறோம். அவற்றைப் பின்பற்றும் எண்ணம் நமக்கு எள் மூக்கின் முனையளவும் இல்லை. நம்மை நெறிப்படுத்தத் தூண்டும் எந்த நற்செய்தியையும் நாம் செவிகொடுத்துக் கேட்கவும் தயாராக இல்லை. தற்சோதனை முயற்சிகளில் ஈடுபட இன்று யாருக்கும் நேரமில்லை.
எளிமையும், நேர்மையும், தூய்மையும் துவங்க மண்ணில் நல்ல வண்ணம் வாழ்ந்து மறைந்த மனிதர்களுக்கு ‘மகாத்மா’ பட்டமளித்து, அவர்களுடைய உருவப்படத்தைச் சட்டத்தில் சிறைவைத்துக் கற்பூரம் காட்டுவதோடு நாம் கதையை முடித்துவிடுகிறோம். “நாமெல்லாம் தவறு செய்யும் சாதாரண ஆத்மாக்கள். நம்மால் எப்படி மகாத்மாக்களாக மாற முடியும்?’ என்று நமக்கு நாமே நியாயம் கண்டு நிறைவடைகிறோம். எந்த இழப்பும் வலியும் இல்லாமல் பெருக்கெடுத்துப் பாயும் நீராய், கட்டறுந்து வீசும் காற்றாய் மனம் போன போக்கில் நாம் வாழப் பழகிவிட்டோம்.
“என்னுடைய வாழ்க்கையே உலகுக்கு நான் வழங்கும் என் செய்தி” என்று சொன்ன மகாத்மாவிடம் நாம் எளிதாகப் பின்பற்றுவதற்கான எந்தச் செய்தியும் இல்லையா?
“காமத்தோடும், கடவுளோடும் ஒரே நேரத்தில் நாம் கைகோர்த்து நடக்க முடியாது” என்ற காந்தி, “சகமனிதர்களுக்குத் தொண்டாற்றுவதே சமயத்தின் சாரம்” என்று விளக்கிய அண்ணல், தன் மனைவி பக்கத்தில் இருந்தபோதே, தன்னுடைய முப்பத்தேழாவது வயதிலிருந்து பெண்ணின்பம் துறந்து புலனடக்கம் காத்தவர். அவரைப்போல் நாமும் பெண்ணின்பம் துறத்தல் சிரமந்தான். ஆனால், அவரைப்போல் தூய்மையான அகவாழ்வும், நேர்மையான பொதுவாழ்வும் நடத்த நம்மால் இயலாதா?
“காந்தியம் என்று ஒன்றில்லை. எனக்குப் பின்னால் எந்தவொரு தனிதத்துவத்தையும் விட்டுச் செல்ல நான் விரும்பவில்லை. எந்தப் புதிய கொள்கையையோ, கோட்பாட்டையோ உருவாக்கியதாக ஒருநாளும் நான் கூறவில்லை. நித்தியமான சத்தியத்தை நம் அன்றாட வாழ்க்கைச் சிக்கல்களில் இணைக்க என்னுடைய வழியில் முயன்றதுதான் நான் செய்தது” என்று அளவற்ற அடக்கத்துடன் சொன்னவர் அண்ணல்.
வெறுப்புக்கு மாற்றாக அன்பு, போட்டிக்குப் பதில் ஒத்துழைப்பு, தன்னலத்திற்கு எதிராகத் தியாகம், புற ஆரவாரத்திற்கு இடமில்லாத அகநாகரிகம் என்பவைதான் காந்திய வாழ்க்கை நெறிகள். மனித நேயம், ஒழுக்கம், சமூக அன்பு ஆகியவை காந்திய லட்சியங்கள்.
சத்தியம், அகிம்சை, பிரம்மசரியம், திருடாமை, சமயநல்லிணக்கம், சுதேசி, தீண்டாமை ஒழிப்பு, மதுவிலக்கு ஆகியவை காந்திய விரதங்கள். இந்த விரதங்களுள் பிரம்மசரியம் போற்றுவதும், உடைமையற்று வாழ்வதும் சாதாரண மனிதர்களுக்கு இயலாமற் போகலாம். ஆனால், ஒருத்தியோடு வாழ்வதும், அவசியத் தேவைகளுக்கேற்ப அளவோடு பொருள் சேர்ப்பதும் ஒருவர் இன்பமாய் இருக்கப் போதாதா?
பொதுவாழ்வில் நிர்மலமான நேர்மையே மகாத்மாவின் முக்கிய இலக்கு. அரசியல் தலைமை ஏற்பவர்கள் உறவுகளின் பிடியிலிருந்து விலகி நிற்க வேண்டும் என்பதைத் தன் வாழ்வின் மூலம் உலகிற்கு உணர்த்தியவர் அவர். அதனால்தான் அவர் வழி நடந்த பெருந்தலைவர், பெற்ற தாயைக்கூடப் பக்கத்தில் வைத்துப் பராமரிக்கவில்லை. உடைமையற்றவனிடம்தான் உண்மையான அன்பு பிரவாகமாகப் பெருக்கெடுக்கும் என்பது காந்திய நம்பிக்கை.
கள்ளுண்ணாமை குறித்து வள்ளுவன் வலியுறுத்தியதும், மதுவிலக்கிற்காக மகாத்மா கொடி பிடித்ததும் இன்று அர்த்தமற்றுப் போய்விட்டன. காந்தி- இர்வின் ஒப்பந்தம் மூலம் சட்டமறுப்பு இயக்கம் நிறுத்தப்பட்டபோதும், மதுக்கடைகளின் முன்பு மறியல் நடப்பது மட்டும் நிற்காது என்று அறிவித்தவர் மகாத்மா. மதுவின் பிடியிலிருந்து விடுபட்டாலொழிய, மக்கள் வறுமையிலிருந்து மீள முடியாது என்ற உண்மையைச் செல்லுமிடமெல்லாம் கொண்டு சேர்த்தவர் அண்ணல்.
ஆனால், இன்று மதுவை ‘ராஜ திரவம்’ என்றும், ‘மகாகவிகளின் தாய்ப்பால்’ என்றும் வாழ்த்தும் கூட்டம் வளர்ந்துவிட்டது. நம் மாநில அரசின் மொத்த வருவாயில் நான்கில் ஒரு பங்கு மதுக்கடைகளிலிருந்துதான் வந்து சேர்கிறது. பாரத தேசத்தின் மாநில அரசுகள் அனைத்தும் தவறுகளுக்கு நியாயம் கற்பித்து,
ஒழுக்கக்கேடுகளுக்கு ஒப்பனை செய்கின்றன. நம் மண்ணுக்குச் சொந்தமான மரபார்ந்த ஒழுக்கங்களை அவை வருவாய்க்காக இழக்கச் சம்மதிக்கின்றன. தெருவெங்கும் மதுக்கடைகள் திறந்து மகாத்மாவின் நினைவுக்கு நல்லஞ்சலி(!) செலுத்தும் மாநில அரசுகள், வருவாய்ப் பெருக்கத்துக்காக விலை மகளிர் விடுதிகளை நடத்தாமல் விட்டதே பெரிய புண்ணியம்.
“சபி பூமி கோபால்கி, எல்லா நிலங்களும் ஆண்டவனுடையது. அதனால் அவன் அளித்த அனைத்து உடைமைகளும் அனைவருக்கும் பொதுவானது. தன் தேவைக்கு மேல் ஒருவன் சேர்த்திருந்தால், அதை அவன் தேவையுள்ளவர்களுக்குத் தானாகவே முன்வந்து பகிர்ந்தளிக்க வேண்டும். போதுமென்ற நல்லுணர்வு நம்மிடையே பெருக வேண்டும்.
சொத்துடைமை ஓரெல்லைக்குள் கட்டுப்பட்டால்தான் ஏழைகளுக்கு எளிதில் உணவு கிடைக்கும்” என்ற காந்தியின் ‘தர்மகர்த்தா கொள்கை’ மனிதர்களின் நல்லியல்பிலும், சமூகத்தின் உயர்நெறிகளிலும் நம்பிக்கை வைத்தது. ஆனால், அந்த நம்பிக்கை இன்று அடியோடு பொய்த்துப் போனது.
தேவைகளைக் குறைத்து எளிமையாக வாழ்வது ஓர் உன்னதமான தவம். மகாத்மாவைப் போல் மண் குடிசையில் நாம் அரை நிர்வாண ஆடையில் வாழவேண்டிய அவசியமில்லை. தேவையற்ற ஆடம்பரங்களைத் தவிர்த்தாலே போதும். ஆசை வலையில் அன்றாடம் சிக்கிச் சீரழியும் சிலந்திகள் நாம். நமக்கு எவ்வளவு கிடைத்தாலும் நிறைவு வராது. அதனால்தான், காந்தியம் கவைக்கு உதவாது என்று கை கழுவிவிட்டோம்.
அதிகாரப் பரவல், கிராமப் பொருளாதாரம், சிறுதொழில் வளர்ச்சி, சர்வோதய அரசு, தாய்மொழிக்கல்வி என்ற காந்தியக் கட்டுமானங்கள் அனைத்தும் காலநடையில் தகர்ந்துவிட்டன. “எனக்குப் பின்னால் என் மொழியில் நேரு பேசுவார்” என்று நம்பிக்கையோடு பிரகடனம் செய்தார் நம் தேசப்பிதா. மகாத்மா நினைத்தபடி நேரு, காந்தியப் பாதையில் தடம் பதிக்கவில்லை. காந்தியின் அரசியல் வாரிசே காந்தியத்தைக் கை கழுவிய பின்பு, அவருடைய மொழியில் இன்று யார் பேசப்போகிறார்கள்?
காந்தியம் என்பது ஒரு வறட்டுச் சித்தாந்தமில்லை. அது ஓர் உயர்ந்த
வாழ்க்கை முறை. அது உடல்பலத்தைவிட ஆன்மபலத்தில் அதிக நம்பிக்கை கொண்ட வாழ்வியல் நெறி. வாழ்க்கை முழுவதும் உண்மையாய் இருப்பதும், எல்லா உயிர்களிடத்தும் அன்பாய் இருப்பதும்தான் காந்தியத்தின் அடித்தளம்.
எவரிடத்தும் பகைமை பாராட்டாத இதயம் இருப்பவர்தான் காந்தியவாதியாக இருக்க முடியும். வசதிகள் குவிந்த போலியான வாழ்க்கைத் தரத்தைவிட, அடிப்படைத் தேவைகளில் மன நிறைவு கொள்ளும் வாழ்வியல் தரமே காந்தியத்தின் ஜீவநாடி. கடையனுக்கும் கடைத்தேற்றம் தரும் சர்வோதய சமத்துவ சமுதாயமே காந்தியத்தின் ஜீவலட்சியம்.
இன்று காந்தியும் இல்லை; காந்தி வழி நடந்த காமராஜும் இல்ல. காலம் மீண்டும் ஒரு காந்தியையும், காமராஜையும் நிச்சயம் காட்டும்!”
– தமிழருவி மணியன்.
2 Comments
நரேந்திரன் நா
எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. உங்கனள போல் ஒருவர் இருக்கிரார் இம் உலகில் என்பதை என்னி மகிழ்கின்றேன். நான்னும் உங்கள் இயக்கத்தில் சேர விருப்பம்.
Emmanuel Mallar
காமராஜரா ???? அறிவு கண் திறந்த இவர் -1964 ‘ல் நடந்த கலவரத்தின் போது எங்கே போனார் . இன்று வரை அந்த கலவரத்தின் வடு எங்க ஊர் மக்கள் மனசுல இருந்து மறையல. ஹ்ம்ம் அதுல இவருக்கும் பங்கு இருக்குதுல .
காமராஜர் நல்லவர் தான் . அவரு இல்லேனா தமிழ்நாட்டில் கல்வி வந்து இருக்காது .