டி.வி.எஸ். சோமு
1 மணி · தொகுத்தது ·
குடி நோயாளியான நண்பர் ஒருவர், தன் அனுபவத்தைக் கூறுகிறார். கேளுங்கள்.
என் இருபது வயதிற்குள் மதுப்பழக்கம் ஏற்பட்டது. நண்பர்களுடன் விளையாட்டாக ஆரம்பித்ததுதான்.
கணினி பட்டயப் படிப்பு தேறியதால் பல நிறுவனத்தில் வேலை கிடைத்தது.
என் இருபத்தி மூன்றாம் வயதில் என் தாயார் மறைந்தார். நான் அனாதையான உணர்வு. மதுவின் பிடிக்குள், இன்னும் இறுகினேன். உணவு, உறக்கம் எதுவும் தேவையில்லை… மது மட்டுமே போதும் என்ற நிலை வந்தது.
அதன் பிறகு கடந்த 16 வருடங்களால எத்தனை எத்தனையோ அனுபவங்கள், அவமானங்கள்… அதன் உச்சகட்டமாய் நடந்தது கடந்த 2011ம் வருடம்.
திடுமென, ஏதோ ஒரு ஏகாந்தம் என்னைப் பற்றிக்கொண்டது. பல லட்சத்தக்கு அதிபதியாகி, நோட்டுக்களை எண்ண ஆரம்பித்தேன்… நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் கொடுத்தேன்… செத்துப்போன என் அம்மாவுக்கும் கொடுத்தேன்!
ஆமாம்… மனநிலை தவறிவிட்டது!
எனக்கு நானே பேசிக்கொண்டு… வேலூர் பேருந்து நிலையத்தில் சுமார் ஒருமாதம் சோறு தண்ணி இன்றி அலைந்திருக்கிறேன். ஒருமாதம் கழித்து கொஞ்சம் நினைவு சரியானது.
நம்பினால் நம்புங்கள்… அந்த ஒருமாதமும் ஒரு கைப்பிடி உணவு கூட உண்ணவில்லை! மலம் கழிக்கவில்லை! அவ்வப்போது பொதுக்குழாயில் தண்ணீர் குடித்திருக்கிறேன்.. அவ்வளவுதான்!
ஓரளவு நினைவு வந்ததும்… என்னைப் பார்த்தேன்… கருப்பாய் மாறியிருந்தது கால் சட்டை… அத்தனை அழுக்கு! மேல்சட்டை இல்லை!
என் நிலையை பார்த்து விட்டு வேலூர் மாநகராட்சியில் துப்புரவு தொழிலாளியாக பணிபுரிந்த அக்கா ஒருவர் ஒரு பழைய சட்டையை கொடுத்து உதவினார்
ஒருவரிடம் கடன் வாங்கி ஈரோட்டில் உள்ள நண்பர் …..த்தை அழைத்தேன். சேலம் வருவதற்கான டிக்கெட்டை வேலூர் பஸ்நிலையத்தில் கடைவைத்திருக்கும் …. அவர்கள் கொடுத்து உதவினார்கள். அங்கிருந்து ஈரோடு வந்து நண்பர் ….த்தை சந்தித்தேன். அறையும், உடையும் கொடுத்து உதவினார்.
அடுத்த சில நாட்களில் மனம் மேலும் தெளிவானதாகத் தோன்றியது.
ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சென்று மனநிலை மருத்துவ நிபுணரான ஆனந்தகுமார் அவர்களை சந்தித்ளேன்.
அவர் சொன்னதைக் கேட்டு அதிர்ந்தேன்:
“மதுவுக்கு அடிமையாகி, அதீதமாய் அருந்தியதால் நரம்பு மண்டலத்தில் சுரக்கும் ஒரு சுரபி சுரக்கவில்லை. அது தான் நினைவு தப்பி, மனநிலையில் மாற்றம் ஏற்பட்டுவிட்டது!” என்றார்.
தகுந்த சிகிச்சையும் அளித்தார். அவர் எழுதிக் கொடுத்த மாத்திரைகள் என் வாழ்வில் புது வசந்தத்தை ஏற்படுத்தியது.
ஆனாலும், உள்ளுக்குள் அனாதை என்பது அழுத்தமாக பதிந்ததால் தனிமை என்னை மீண்டும் மதுவுக்கே அடிமையாக்கி விட்டது.
அதிலிருந்து மீள முடியாமல் நான் தினம் தினம் செத்துப் பிழைத்துக் கொண்டிருக்கிறேன். நேற்று கூட மரணத்துக்கு முயற்சி செய்தேன். ஆனால் என் நண்பர்கள் அதனை தடுத்து நிறுத்தி விட்டனர். இரண்டாம் கெட்ட நிலையாக என் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறேன்.
மீண்டும் மரணத்தை நாடலாம் என்றால் 100 ரூபாய் கூட இல்லை. ஆயிரமாயிரமாய் சம்பாதித்து.. லட்ச லட்சமாய் செலவழித்து… இன்று மரணத்துக்குள் நுழைய நூறு ரூபாய் இல்லை!
அநாதைக் குழந்தைகள் கல்விக்கு உதவ வேண்டும், கணினி துறையில் சாதிக்க வேண்டும் என்கிற எண்ணமெல்லாம் இருக்கிறது…
வாழ்ந்து சாதிக்க வேண்டும், வாழ பிறந்தவன் என்ன எண்ணம் இருந்தாலும், சந்தர்ப்ப சூழ்நிலைகள் என்னை வாழ விடாமல் தடுக்கிறது. இதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றுமில்லை!”
# இந்த குடிநோயாளி நண்பருக்கு தகுந்த மருத்துவ உதவி செய்ய வாய்ப்பும் விருப்பமும் உள்ளவர்கள் யாரேனும் இருந்தால், எனது இன்பாக்ஸில் தொடர்புகொள்ளவும்.