திண்டுக்கல்: தண்டிக்கப்பட்ட குற்றவாளியான சசிகலாவை சிறையில் சந்தித்த அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எக்காரணத்தை கொண்டும் சிறைச்சாலைக்கு சென்று சசிகலாவை சந்திக்க கூடாது என்றும் காந்திய மக்கள் இயக்கத்தின் நிறுவனத் தலைவர் தமிழருவிமணியன் தெரிவித்துள்ளார். திண்டுக்கல்லில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக காந்திய மக்கள் இயக்கத்தின் நிறுவனத் தலைவர் தமிழருவிமணியன் சனிக்கிழமை வந்தார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:
மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மக்களுக்கான சந்தேகம் தீரவில்லை. அதிமுகவிலிருந்து வெளியேறிய பின்னரே, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், பேரவை முன்னாள் தலைவர் பி.எச்.பாண்டியன் ஆகியோர் புகார் அளித்துள்ளனர். மக்களுக்கும் ஏற்பட்டுள்ள இந்த சந்தேகத்தை தீர்க்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் எந்நேரத்திலும் தேர்தல் வருவதற்க்கான வாய்ப்புகள் உள்ளது. தேர்தலை சந்திக்கின்ற அதிமுக இரு அணிகளும் தோல்வியை தழுவும், தமிழகத்தை ஆட்சி செய்து வருவது குற்றவாளி சசிகலா தான். குற்றவாளியை சிறைச்சாலைக்கு சென்று பார்த்து வந்த 3 அமைச்சர்களை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எக்காரணத்தை கொண்டும் சிறைச்சாலைக்கு சென்று குற்றவாளியை சந்திக்க கூடாது. தமிழகத்தில் இரண்டு திராவிட கட்சிகளுக்கு மாற்றாக மூன்றாவது அணியால் எந்த பயனும் கிடையாது, பாஜகவால் தமிழகத்தில் எக்காரணத்தை கொண்டும் ஆட்சி அமைக்க முடியாது. இவ்வாறு தமிழருவி மணியன் தெரிவித்தார்.