10/01/2012
சென்னை: குழந்தைகளுக்கு ‘ஜென்’ கதைப் புத்தகங்களை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று பெற்றோர்களுக்கு எழுத்தாளர் தமிழருவி மணியன் அறிவுறுத்தினார்.
மேலும், நல்ல சிந்தனைகளைத் தூண்டும் புத்தகங்களைப் படிக்குமாறு வாசகர்களை அவர் கேட்டுக்கொண்டார்.
சென்னை புத்தகக் காட்சியில் திங்கட்கிழமை இரவு நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘தீதும் நன்றும் புத்தகம் தரும்’ என்னும் தலைப்பில் அவர் பேசுகையில், “உலகில் எந்த ஒரு மொழியிலும் புத்தகத்துக்கு ‘நூல்’ என்ற மிகவும் பொருத்தமானதும், அர்த்தமுள்ளதுமான பெயர் சூட்டப்படவில்லை. நம் மனதில் இருக்கும் கோணல்களைக் கையில் இருக்கும் நூல்களைக் கொண்டு சரிப்படுத்தலாம். நூலைப் படிக்கையில், அதில் கலந்து, கரைந்துவிட வேண்டும். அப்போதுதான் நூலில் இருக்கும் கருத்துக்கள் நமது சிந்தனையைத் தூண்டி, அறிவை வளர்க்கும்.
கற்றவர்கள் எல்லாம் அறிவாளிகள் அல்லர். கல்லூரிகளில் படிக்கும் கல்வியை மட்டும் வைத்துக் கொண்டு அப்துல் கலாம், காமராஜர், எம்.ஜி.ஆர். போல மிகச் சிறந்த மனிதர்களாக மாறிவிட முடியாது.
நாம் பெறுகின்ற தகவல்கள் மூலம் உலகத்தை அறிந்து கொள்ளலாமே தவிர, நம்மை நம்மால் அறிந்து கொள்ள முடியாது. நாம் யார் என்று அறியும்போதுதான் வாழ்வின் உச்ச நிலைக்கு செல்ல முடியும்.
மேலை நாட்டுக் கல்வி பணம் சார்ந்தது; நம் நாட்டுக் கல்வியோ பண்பாடு சார்ந்தது நம்நாட்டுக் கல்வி. கற்றவர்களிடம் இருந்து அறிவு பெற வேண்டும். அடுத்து, அறிவிலிருந்து ஞானம் பெற வேண்டும்.
எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய ‘இன்றைய காந்தி’ என்ற நூலையும், அ.மார்க்ஸ் எழுதிய ‘காந்தியும் சனாதிகளும்’ என்ற நூலையும் வாங்கிப் படித்தேன். அவை என்னை மிகவும் பாதித்துவிட்டன.
ஹிட்லரின் ‘மெயின்கேம்ப்’ புத்தகத்தால்தான் 2-வது உலகப் போர் உருவானது. நல்ல புத்தகம் நல்ல சிந்தனைகளைத் தரும். மோசமான புத்தகம் தீய விளைவுகளைத் தரும்.
குழந்தைகளுக்கு ‘ஜென்’ கதைப் புத்தகங்களை வாங்கிக் கொடுக்க வேண்டும். அவர்களுக்கு நல்ல சிந்தனைகளைத் தூண்டும் புத்தகங்களை வாங்கித் தர வேண்டியது பெற்றோரின் கடமை,” என்றார் தமிழருவி மணியன்.