திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரத்தில் பெருமாள்
கோயில் அருகே செயல்பட்டு வந்த மதுபானக் கடை செவ்வாய்க்கிழமை இடமாற்றம் செய்யப்பட்டது. இந்தக் கடையை அகற்றக் கோரி, காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்ட காந்தியவாதியின் போராட்டம் வெற்றியடைந்தது.
இக்கடையை அங்கிருந்து அகற்ற வேண்டும் என பல்வேறு அமைப்புகளும் வலியுறுத்தி வந்தன. எனினும், அக்கடை அகற்றப்படவில்லை.
இதையடுத்து, காந்திய சிந்தனையாளர் பொன்.இசக்கியப்பன் (75) (படம்) இந்த மதுபானக் கடையை அகற்றக் கோரி, ராதாபுரம் நித்தியகல்யாணி அம்மன் கோயில் அருகே காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் கடந்த 1ஆம் தேதி தொடங்கினார்.
இந்நிலையில், கடந்த 6ஆம் தேதி அவரது உடல்நிலை மோசமானது.
இதையடுத்து, அவர் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கும் அவர் போராட்டத்தைத் தொடர்ந்தார்.
இதற்கிடையே, டாஸ்மாக் மதுக் கடை ஊருக்கு வெளியே மாற்று இடம் தேர்வு செய்யப்பட்டு, கடை அங்கு மாற்றப்பட்டது.
இதையடுத்து, பொன்.இசக்கியப்பன் திருநெல்வேலியில் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொண்டார். அவருக்கு ஊராட்சி மன்றத் தலைவர் மதன் மற்றும் ஊர்ப் பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.