பிளாஸ்டிக் பயன்பாடு மற்றும் துரித உணவு ஒழிப்பு :
கோவை SIHS காலனி பகுதியில் 04.12.2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காந்திய மக்கள் இயக்கத்தினர் ஏற்பாடு செய்திருந்த பிளாஸ்டிக் பயன்பாடு மற்றும் துரித உணவு ஒழிப்பு முகாமும் உறுதி ஏற்பு நிகழ்வும் நடைபெற்றன. நிகழ்வில் அந்தப் பகுதியைச் சேர்ந்த சிறுவர் சிறுமியர்கள், இல்லத்தரசிகள் மற்றும் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
அனைவருக்கும் பிளாஸ்டிக் பொருள்களால் விளையும் சீர்கேடுகள் பற்றியும் துரித உணவுகளால் ஏற்படும் ஊட்டச் சத்து குறைபாடு பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது. மக்கிப் போகாமல் மண்ணுக்குக் கேடு தரும் பிளாஸ்டிக் பொருள்களை உபயோகிப்பதைத் தவிர்த்து விட்டு, சுற்றுச் சூழலுக்கு உகந்த கட்டைப் பைகளையும் சணல் பைகளையும் பயன்படுத்துவதால் விளையும் நன்மைகள் பற்றி விளக்கப்பட்டது. காளான், பேல்பூரி, பீஸா, பர்கர் போன்ற துரித உணவு வகைகளை உண்பதை முற்றிலும் ஒதுக்கிவிட்டு, ஆரோக்கியமான உடல் நலனுக்கேற்ற பொரிகடலை, எள்ளு மிட்டாய், இஞ்சி மிட்டாய் போன்ற பாரம்பரிய உணவுகளை உண்ணவும் அறிவுறுத்தப்பட்டது.
நிகழ்வில் தெருவோரங்களில் குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் குப்பைகளைச் சுட்டிக் காட்டி அவற்றால் விளையும் சீர்கேடுகள் பற்றி விளக்கப்பட்டது. சிறுவர் சிறுமியர்கள் அவற்றை ஆர்வத்துடன் கேட்டறிந்தது ஒரு மாற்றத்திற்கான அறிகுறியாகத் தென்பட்டது.
நிகழ்வில் பிளாஸ்டிக் பயன்பாடுகளை ஒழிப்போம் எனவும் துரித உணவுகளைத் தவிர்ப்போம் எனவும் உறுதிமொழி எடுக்கப்பட்டது. நிகழ்வுக்கு காந்திய மக்கள் இயக்கக் கோவை மாவட்டத் தலைவர் துரைச்சந்திரன் தலைமை ஏற்க, மாநில இளைஞரணிப் பொதுச் செயலாளர் பாலாஜி, மாவட்டச் செயலாளர் ஆர்.பி.செந்தில்குமார், மாவட்டப் பொருளாளர் முருகேசன், செய்தித் தொடர்பாளர் எம்.ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியாக தேசிய கீதம் பாடப்பட்டு நிகழ்வு நிறைவடைந்தது.