தமிழருவி மணியன் அறிக்கை..
திரு. எடப்பாடி பழனிச்சாமியின் அமைச்சரவைக்குப் பின்னால் இயக்கி வைக்கும் அழிவுசக்தியாக மன்னார்குடி குடும்பம் இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. அ.தி.மு.க.வின் கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதிகள் சட்டப் பேரவை உறுப்பினர்களாக உள்ள நிலையில் ஆளுநருக்கு எடப்பாடி பழனிசாமியை அழைத்து பதவிப் பிரமாணம் செய்து வைப்பதைத் தவிர வேறு வழியில்லை. ஆளுநர், அரசியல் அமைப்புச் சட்டப்படி தனக்குரிய கடமையைச சரிவரச் செய்து விட்டார். இனி மக்களால் தேர்தெடுக்கப்பட்ட சட்ட மன்ற உறுப்பினர்கள் தங்கள் சமூகக் கடமையைச் சரியாகச் செய்து முடிக்க வேண்டும்.
மன்னார்குடி குடும்பத்தின் பினாமி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க தி.மு.க., காங்கிரஸ், பன்னீர் செல்வம் ஆதரவு சட்ட மன்ற உறுப்பினர்கள் கட்சி பேதங்களைக் கடந்து எடப்பாடி அமைச்சரவைக்கு எதிராக வாக்களித்துத் தமிழகத்தைக் காப்பாற்ற வேண்டும். இதைச் செய்யத் தவறினால் அரசியல் நேர்மை குறித்தும் ஊழலற்ற பொதுவாழ்வு குறித்தும் பேசுவதற்கான தகுதி எந்தக் கட்சிக்கும் இருக்கப் போவதில்லை.
தேர்தல் நேரத்தில் மாணவர்களையும் இளைஞர்களையும் ஆரோக்கியமான அரசியலை விரும்பும் பொதுமக்களையும் இவர்கள் சந்தித்துத் தான் ஆக வேண்டும். இன்று தவறு செய்தால் அதற்குரிய தண்டனையை இவர்கள் அன்று பெறப்போவது நிச்சயம்.
-தமிழருவி மணியன்