ஜு.வி.ஸ்பெஷல் ஸ்டோரி : கடையை மூடினாலும் சரக்கு கிடைக்கும் !
தமிழ்நாட்டில் கோடிக்கணக்கில் பணம் கொழிக்கும் இடங்களாக டாஸ்மாக் பார்கள் விளங்குகின்றன. ஒவ்வொரு பார்களிலும் தினமும் லட்சக்கணக்கான ரூபாய் வருமானம் கிடைக்கிறது. எனவேதான், பெரும்பாலான பார்களை வளைத்துப்போட்டு வைத்திருக்கிறார்கள் செல்வாக்கு மிகுந்த கட்சிகளைச் சேர்ந்த அரசியல்வாதிகள்.
தமிழகத்தில் 6,800 டாஸ்மாக் மதுபானக் கடைகள் உள்ளன. நான்கு ஆயிரத்துக்கும் அதிகமான அனுமதிபெற்ற பார்கள் உள்ளன. அனுமதிபெற்ற பார்களுக்கு இணையான எண்ணிக்கையில், அனுமதி இல்லாத பார்கள் செயல்படுகின்றன என்று சொல்லப்படுகிறது. பெரும்பாலான பார்கள் ஆளும் கட்சிக்காரர்கள் கையிலும், மற்றவை முன்னாள் ஆளும் கட்சியினர் வசமும் உள்ளன.
பினாமிகளின் ஆதிக்கம்!
அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளின் பினாமிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் ஆகியோரிடம்தான் அதிகமான பார்கள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. உதாரணமாக, திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள ஒரு டாஸ்மாக் மதுபானக்கடைக்கு ஒரு பார் அல்ல… 7 பார்கள் உள்ளன. அந்த பார்கள், முக்கிய அமைச்சர் ஒருவரின் பினாமிகளின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன என்று சொல்லப்படுகிறது. சென்னை தெற்கு மாவட்டத்தில் 20 பார்கள், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 17 பார்கள் என மொத்தம் 27 பார்கள், ஆளும் கட்சி எம்.எல்.ஏ ஒருவருடைய பினாமிகளின் பெயர்களில் இருக்கின்றன. இதுதான் தமிழகம் முழுவதும் உள்ள நிலைமை.
டாஸ்மாக் பார்களில் நடக்கும் முறைகேடுகள் பற்றி நீண்ட பட்டியலை வாசிக்கிறார்கள் பார்களுக்கு அடிக்கடி சென்றுவரும் வாடிக்கையாளர்கள். சம்பந்தப்பட்டவர்களுக்கு கட்டிங் போய்விடுவதால் முறைகேடுகள் பற்றி யாரும் கண்டுகொள்வது இல்லையாம்.
எதுவுமே ஃப்ரெஷ் இல்லை!
கடலூர் பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு டாஸ்மாக் கடைக்குச் சென்றோம். அப்போது, இரவு 11 மணி. மதுபானக் கடை மூடப்பட்டு இருந்தது. ஆனால், பார் மட்டும் திறக்கப்பட்டு இருந்தது. பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்த அந்த பாரில், தங்குதடை இல்லாமல் சரக்கு கிடைத்தது. குடிமக்களின் கூட்டமோ, அலைமோதியது. அங்கு மது அருந்திக்கொண்டிருந்த இளைஞர் ஒருவரிடம் பேசினோம்.
“கடலூர் மாவட்டத்துல 228 டாஸ்மாக் கடைகளோட இணைஞ்சு 60 பார்களுக்கு மேல இருக்கு. இந்த பார்கள்ல, எல்லா பொருட்களின் விலையும் பல மடங்கு அதிகம். ஒரு வாட்டர் பாக்கெட்டோட விலை வெளியில ஒரு ரூவாதான். ஆனா இங்கே, அஞ்சு ரூபாய்ல இருந்து ஏழு ரூபாய் வரை சொல்றாங்க. இது எவ்வளவு அநியாயம்? இங்கே, எதுவுமே ஃப்ரெஷ்ஷா கிடைக்கிறதில்ல. சிக்கன், மட்டன், மீன் எல்லாமே முதல் நாள் ஃப்ரிட்ஜ்ல வெச்சிருந்து, மறுநாள் அப்படியே எடுத்து சூடுபண்ணிக் குடுக்குறாங்க. நாங்க ஒண்ணும் ஓசியா கேட்கலை. எல்லாத்தையும் கூடுதலா காசு கொடுத்துத்தான் வாங்குறோம். ஆனாலும், எங்களை ஏதோ பிச்சைக்காரங்க மாதிரிதான் பாக்குறாங்க. பழைய சிக்கனை சூடுபண்ணி குடுக்குறீங்களேன்னு ஒரு நாள் கேட்டேன். ‘இஷ்டம்னா சாப்பிடு. இல்லைனா போய்கிட்டே இரு’னு தெனாவெட்டா சொல்றாங்க”என்று புலம்பினார் அந்த இளைஞர்.
இரவு 10 மணிக்கு டாஸ்மாக் மதுபான கடைகளை மூடிவிட்டால், பார்காரர்களுக்கு ஒரே கொண்டாட்டம்தான். காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை டாஸ்மாக் கடையில் மது விற்பனை நடக்கிறது. இரவு 10 மணிக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்படுகின்றன. பிறகு பிராந்தி, விஸ்கி, பீர் என எல்லா வகையான மதுபானங்களும் பார்களில் கிடைக்கின்றன. அங்கு மதுபானங்களின் விலை அதிகம். ஒரு குவாட்டருக்கு 30 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை கூடுதல் விலை வைத்து விற்கப்படுகின்றன. பார்களில் விற்கப்படுகிற பெரும்பாலான மதுவகைகள் டூப்ளிகேட் என்று புகார் சொல்கிறார்கள், வாடிக்கையாளர்கள்.
தவறுகளுக்குக் காரணம் அதிகாரிகள்!
பார்களில் மட்டுமல்ல, டாஸ்மாக் கடைகளிலும்கூட மதுபானங்களின் விலை கூடுதல் விலை வைத்துத்தான் விற்கப்படுகின்றன என்ற புகாரும் உண்டு. “இது நியாயம்தானா?” என்று தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் பாலுச்சாமியிடம் கேட்டோம்.
“தமிழகத்தில் 6,800 டாஸ்மாக் கடைகள் உள்ளன. அவற்றில், சூப்பர்வைசர், சேல்ஸ்மேன், உதவி சேல்ஸ்மேன் என 29 ஆயிரத்து 647 பேர் பணியாற்றி வருகின்றனர். 11 ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் இவர்கள் இதுவரை பணிநிரந்தரம் செய்யப்படவில்லை. அவர்களின் ஊதியம் மிகவும் குறைவு. சூப்பர்வைசருக்கு 6,500 ரூபாய், சேல்ஸ்மேனுக்கு 4,800 ரூபாய், உதவி சேல்ஸ்மேனுக்கு 3,400 ரூபாய் என மாதச் சம்பளம் வழங்கப்படுகின்றன. முறைகேடு செய்ததாக டாஸ்மாக் ஊழியர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருக்கிறார்கள். ஊழியர்களை முறைகேடு செய்யத் தூண்டுவதே இந்த அரசும், அதிகாரிகளும்தான்.
மது பாட்டில்கள் அடைக்கப்பட்ட அட்டைப் பெட்டிக்கான சேதாரம், பாட்டில்கள் உடைந்தால் அதற்கான தொகை என எல்லாவற்றையும் சம்பந்தப்பட்ட கடை ஊழியர்களின் தலையில் சுமத்துகிறார்கள். இது மிகப் பெரிய அநியாயம். லாரியில் வரும்போது பாட்டில் உடைந்தால் கடை ஊழியர் எப்படி பொறுப்பாவார்? சொற்ப ஊதியம் பெறும் அந்த ஊழியர்களால் ஆயிரக்கணக்கில் எப்படி தண்டத் தொகையை செலுத்த முடியும். எனவே, அதை சமாளிப்பதற்காக, நிர்ணயிக்கப்பட்ட விலையைக் காட்டிலும் கூடுதலாக ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் என ஊழியர்கள் வாங்குகிறார்கள். இது அதிகாரிகளுக்கு நன்றாகவே தெரியும். அவர்கள்தான் அதை அனுமதிக்கிறார்கள். எப்போதாவது, யாராவது புகார் தெரிவிக்கும் சமயத்தில் மட்டும் கூடுதலாகப் பணம் வாங்கியதாக ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறார்கள்” என்ற பாலுச்சாமி, பார்களால் டாஸ்மாக் ஊழியர்களுக்கு வரும் பிரச்னைகளை விவரிக்க ஆரம்பித்தார்.
“பார்கள் மூலம் ஊழியர்களுக்கு பெரும் தலைவலி ஏற்படுகிறது. பெரும்பாலான பார்கள் ஆளும் கட்சியினரால் நடத்தப்படுகின்றன. பார் நடத்துபவர்கள் சொல்லும் நேரத்தில் கடையை மூடிவிட வேண்டும். அதன் பிறகு மதுபான விற்பனை பாரில் வைத்துதான் நடக்கும். இந்த டீலிங்குக்கு உடன்படவில்லை என்றால் அதிகாரிகளிடம் போட்டுக் கொடுப்பார்கள். அதைத் தொடர்ந்து ஊழியர்கள் இடமாற்றம் செய்யப்படுவார்கள். இல்லையென்றால், ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி சஸ்பெண்ட் செய்துவிடுவார்கள். பீர் மற்றும் சில மதுபானங்களை பார்களில் மட்டுமே விற்க வேண்டும் என்பது எழுதப்படாத சட்டமாக இருக்கிறது. இதற்கு பார் நடத்துபவர்கள் உடனடியாகப் பணமும் கொடுப்பதில்லை. சரக்குகள் விற்ற பிறகே பணம் கொடுக்கிறார்கள். இந்த சமயத்தில் அதிகாரிகள் ரெய்டு நடத்தி ஸ்டாக் குறைவாக இருக்கிறது, கலெக்ஷன் பணம் குறைவாக இருக்கிறது என்று சொல்லி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறார்கள். பார் நடத்துபவர்கள் கேட்கும் மதுபானங்களை கொடுக்கவில்லை என்றாலும் அதிகாரிகளிடம் சொல்லி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இப்படி மத்தளத்துக்கு இரண்டுபக்கமும் இடி என்பதைப்போல டாஸ்மாக் ஊழியர்களின் பாடு திண்டாடுகிறது” என்றார்.
பணம் காய்க்கும் மரம்!
தமிழக அரசுக்கு பணம் காய்க்கும் மரமாக விளங்கும் டாஸ்மாக் ஊழியர்களின் குமுறலுக்கான காரணங்கள் ஏராளம்.
“ஒரு நாளைக்கு 65 கோடி ரூபாய் டாஸ்மாக் மூலம் அரசுக்கு வருமானம் கிடைக்கிறது. எங்களை பணம் காய்க்கும் மரங்களாக மட்டுமே பார்க்கிறார்கள். சேல்ஸ், இலக்கு என்று ஊழியர்களை அதிகாரிகள் நிர்ப்பந்திக்கிறார்கள். ஆனால், எங்களுக்கான எந்தவொரு அடிப்படை வசதியும் செய்துதரப்படவில்லை. காலை 10 மணிக்கு ஆரம்பித்து இரவு 11 மணி வரை ஓய்வின்றி உழைக்கிறோம். கடைகளில் மின் விசிறி, கழிப்பறை போன்ற எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை. சில கடைகளில் மின்கட்டணத்தைக் கூட ஊழியர்களே செலுத்த வேண்டி இருக்கிறது.
தவறே செய்யாமல் ஊழியர்கள் பாதிக்கப்படுகிறார்கள். நடவடிக்கை எடுப்பதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட ஊழியரிடம் விசாரணை நடத்த வேண்டும். ஆனால், அப்படி எதுவும் டாஸ்மாக் வரலாற்றில் நடந்தாக இல்லை. வார விடுமுறைகூட இல்லாததால் ஓய்வின்றி ஊழியர்கள் பணியாற்ற வேண்டியுள்ளது. ஒவ்வொரு கடைக்கும் விற்பனை இலக்கை அதிகாரிகள் நிர்ணயிக்கிறார்கள். இலக்கை நிறைவேற்றுமாறு அதிகாரிகள் கடும் நிர்ப்பந்தம் செய்கிறார்கள். இலக்கை அடையாத கடை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறார்கள். வீடுவீடாகச் சென்று எல்லோரையும் வற்புறுத்தி குடிக்கச் சொன்னால்தான் அவர்கள் சொல்கிற இலக்கை எங்களால் எட்ட முடியும். வேறு வழியில்லை” என்று வேதனையுடன் சொன்னார், தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பழனிபாரதி.
டாஸ்மாக் மதுபான பார்களுக்கு விதிமுறைகளை தமிழக அரசால் வகுக்கப்பட்டுள்ளன. பார்களை பொழுதுபோக்கு இடமாகவோ, சூதாடும் இடமாகவோ பயன்படுத்தக் கூடாது. பார்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். தேவையான மின்விளக்குகள் பொருத்தப்பட வேண்டும். கழிப்பிட வசதி கண்டிப்பாக இருக்க வேண்டும். துப்புரவு பணியாளர்களை நியமித்து முறையாகப் பராமரிக்க வேண்டும் என ஏராளமான விதிமுறைகள் வகுக்கப்பப்பட்டுள்ளன. ஆனால், டாஸ்மாக் பார்கள் என்ன லட்சணத்தில் காட்சியளிக்கின்றன?
Source and Thanks : http://www.vikatan.com/article.php?module=magazine&aid=106895