‘தாலிக்குத் தங்கம் கொடுத்துவிட்டு, தாலியை அறுக்கிறார்களே! டாஸ்மாக் கடைகளைத் திறந்து தமிழ் பெண்களின் தாலிகளை தமிழக அரசே அறுக்கிறது!’ என பொங்குகிறார்கள், சமூக ஆர்வலர்கள். தமிழ்நாட்டில், குடிநோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது.
குடியின் காரணமாக, கல்லீரல் பாதிப்பு உட்பட உடல்நிலை மிக மோசமான அளவுக்கு நலிவுற்று, மரணத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறார்கள் லட்சக்கணக்கான குடிநோயாளிகள் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். லட்சக்கணக்கான குடும்பங்களின் எதிர்காலம் இருள் சூழ்ந்து வருகிறது. ஆகவேதான், ‘ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தையும் குட்டிச்சுவராக்கி வரும் மதுக் கடைகளை மூடு’ என்கிற குரல், பெண்கள் மற்றும் சமூக அக்கறையாளர்களிடம் இருந்து ஆவேசத்துடன் எழுகிறது. ஆனால் ஆட்சியாளர்களோ, அதை எல்லாம் கண்டுகொள்வதாகவே இல்லை.
ஏன்?
மதுவின் மூலமாக தமிழக அரசுக்கு மிகப் பெரிய வருமானம் கிடைத்து வருகிறது. மதுக்கடைகளை மூடினால் அந்த வருமானம் பாதிக்கப்படும் என்று அரசு கருதுகிறது என்பது பொதுவாக சொல்லப்படும் ஒரு காரணம். மற்றொரு காரணம்தான் அதிர்ச்சி ரகம்.
“தமிழக அரசாங்கத்துக்கு வருமான இழப்பு ஏற்படும் என்ற கவலை ஆட்சியாளர்களுக்கு இருப்பது உண்மைதான். ஆனால், அதைவிட, டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டால் அல்லது அதன் எண்ணிக்கையை குறைத்துவிட்டால், தாங்கள் மெகா கோடீஸ்வரர்களாக வளர்ந்து வருவதற்கு தடையாக அமைந்துவிடும் என்று நினைக்கிறார்கள் சில அரசியல்வாதிகள். யார் அந்த அரசியல்வாதிகள்? டாஸ்மாக் கடைகளுக்கு மதுபானங்களை சப்ளை செய்கிற, மதுபான தயாரிப்பு தொழிற்சாலைகளின் முதலாளிகள்தான் அவர்கள். டாஸ்மாக் கடைகளை மூடினால், தங்களுடைய மதுபான ஆலைகளை மூட வேண்டியிருக்குமே என்று அவர்கள் அச்சப்படுகிறார்கள். அதுதான் டாஸ்மாக் கடைகளை மூடாததற்கு முக்கியக் காரணம்” என்கிறார், சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் பொதுச் செயலாளர் செந்தில் ஆறுமுகம்.
தலைவர்கள் அல்ல… சாராயக் கம்பெனி முதலாளிகள்!
‘‘தமிழ்க் குடும்பங்களை அழிப்பதற்காக, அரசாங்கமே மதுக்கடைகளை நடத்துகிறது. அந்த மதுக்கடைகளுக்கு சாராயம் சப்ளை செய்யும் மதுபான தயாரிப்பு தொழிற்சாலைகளை, ஆட்சி அதிகாரத்தில் இருந்த, இருக்கும் அரசியல்வாதிகளே நடத்துகிறார்கள் என்பதைவிட ஒரு கேவலமான நிலைமை தமிழ்நாட்டுக்கு வேறு என்ன இருக்க முடியும்? ‘மக்கள் சேவையே உயிர் மூச்சு’, ‘உங்கள் காலுக்கு செருப்பாக இருப்போம்’ என்றெல்லாம் சொல்லி மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வரும் தந்திர அரசியல்வாதிகள், மக்களுக்கு துரோகம் செய்கிறார்கள். அரசியலை தங்கள் சுயநலத்துக்காகப் பயன்படுத்திக்கொண்டு, சாராயக் கம்பெனிகளின் முதலாளிகளாக சிறிதும் வெட்கமின்றி உலாவுகிறார்கள்.
‘டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு எந்தெந்த கம்பெனிகளிடம் இருந்து சரக்கு வாங்கப்படுகிறது, எவ்வளவு வாங்கப்படுகிறது என்ற விவரங்களை, தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் வாங்கி இருக்கிறோம்(பார்க்க பெட்டிச் செய்தி). பிராந்தி, விஸ்கி, ரம், ஒயின் போன்றவைகளுக்கு மட்டுமே அதில் கணக்கு உள்ளது. பீர் கொள்முதல் கணக்கை அவர்கள் குறிப்பிடவில்லை.
‘மதுபானங்களை அரசு கொள்முதல் செய்வதில் பாரபட்சமாக உள்ளது என்று சொல்லி, பலமுறை மத்திய அமைச்சராக இருந்த ஒருவருக்குச் சொந்தமான மதுபான நிறுவனம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அதை விசாரித்த நீதிமன்றம், ஒவ்வோர் மதுபான ஆலையில் இருந்தும் எந்த அடிப்படையில் மதுபானக் கொள்முதல் செய்யப்படுகிறது என்பது குறித்து டாஸ்மாக் நிறுவனத்திடம் விளக்கம் கேட்டது. ஆனால், கொள்முதலுக்கு எந்த விதிமுறைகளும் இன்றுவரையில் நிர்ணயிக்கப்படவில்லை. ஆளும் கட்சியின் ஆதரவு பெற்ற நிறுவனங்களுக்கு ஆர்டர் அதிகம் என்பது டாஸ்மாக்கில் எழுதப்படாத சட்டமாக இருக்கிறது” என்கிறார் செந்தில் ஆறுமுகம்.
எழுதப்படாத ஒப்பந்தம்!
அதே நேரத்தில், யார் ஆட்சிக்கு வந்தாலும் ஆளும் கட்சிக்கும் எதிர்க் கட்சிக்கும் இடையே எழுதப்படாத ஓர் ஒப்பந்தம் உண்டு. ஆட்சி மாறினால், எதிர்க் கட்சியைச் சேர்ந்த ‘தலைவர்கள்’ நடத்தும் மதுபான கம்பெனிகளுக்கான ஆர்டரில் கூடுதல் குறைச்சல் என்று இருக்குமே தவிர, ஆர்டர் ஒருபோதும் ரத்து செய்யப்படுவது இல்லை.
2003-ம் ஆண்டு, மதுபான விற்பனையை டாஸ்மாக் தொடங்கியபோது, அதன் வருவாய் ரூ.3,500 கோடி. டாஸ்மாக் நிறுவனத்தின் இந்த ஆண்டு விற்பனை இலக்கு ரூ.30 ஆயிரம் கோடி. 12 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 10 மடங்கு விற்பனையை அதிகரித்துள்ளது.
விற்பனையில் முதலிடம் பிடிக்கும் அதே அளவுக்கு லஞ்சம், ஊழல், முறைகேடு ஆகியவற்றிலும் முன்னணி வகிக்கிறது. மதுபான தயாரிப்பு நிறுவனங்கள் முதல் டாஸ்மாக் நிர்வாக அதிகாரிகள், கண்காணிப்பு அதிகாரிகள், மது விற்பனை செய்யும் கடைகள் வரை லஞ்சம், ஊழல், முறைகேடுகளின் உறைவிடமாக டாஸ்மாக் கடைகள் விளங்குகின்றன. அதுமட்டுமல்ல… இன்னும் இருக்கிறது. அது…
– அடுத்த இதழில்…
பண மழை பெய்கிறது!
பார்களில் பணம் கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது. ஆகவே, தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பார்களை அரசியல் பின்னணி கொண்டவர்களே ஆக்கிரமித்து வைத்துள்ளார்கள். யார் ஆட்சிக்கு வந்தாலும் தங்கள் கட்சிக்காரர்களின் ‘வளர்ச்சிக்காக’ என்று சொல்லி அவர்களுக்கு பார்களை ஒதுக்குகிறார்கள். பார்களுக்கான ஏலம், அரசு அதிகாரிகளால் நடத்தப்படுவதாகச் சொல்லப்பட்டாலும், ஆளும் கட்சியின் மாவட்டச் செயலாளர்களாலே சிண்டிகேட் அடிப்படையில் ஏலம் விடப்படுகிறது என்ற குற்றச்சாட்டு உள்ளது.
“ஒவ்வொரு கடைக்கும் பார் இருக்கும். அதற்கான ஏலத் தொகை, ஏரியாவைப் பொறுத்து அரசால் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ஆளும் கட்சியினர், அரசு நிர்ணயித்துள்ள தொகையைவிட கூடுதலாக ரூ.100 கட்டினால் போதும். பார் உரிமம் கிடைத்துவிடும். ஆனால், அதிக தொகைக்கு பார் ஏலம் எடுத்து நடத்த நினைக்கும் போட்டியாளர்களுக்கு பார் உரிமம் கிடைப்பது இல்லை. அதனால், அரசுக்கு பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. பார் ஏலம் எடுத்தவர்கள், கடையில் விற்பனையாகும் தொகையின் அடிப்படையில் இரண்டரை சதவிகிதம் வரியாக அரசுக்குச் செலுத்த வேண்டும். ஆனால், அதைக்கூட இவர்கள் முறையாகக் கட்டுவது இல்லை” என்கிறார் டாஸ்மாக் கண்காணிப்பாளர் ஒருவர்.
அவருக்கு மட்டும் வளைந்து கொடுப்பார்களா?
பள்ளிகள், கல்லூரிகள், வழிபாட்டுத்தலங்கள் அருகில் மதுபானக் கடைகளை நடத்தக் கூடாது என்ற விதிகள் இருந்தும் அதை டாஸ்மாக் நிர்வாகம் மதிப்பதே இல்லை. விதிமுறைகளை மீறி வைக்கப்பட்டுள்ள மதுபானக் கடைகளை அகற்ற வேண்டும் என்று மாநிலத்தின் பல இடங்களில் பொதுமக்கள் போராடுகிறார்கள். எவ்வளவு போராடினாலும் கடைகள் அவ்வளவு எளிதில் இடமாற்றம் செய்யப்படுவது இல்லை. ஆனால், ஒரு அமைச்சரின் பி.ஏ ஒருவர், சென்னை அம்பத்தூர் பாடி புதுநகர் பகுதியில் புறம்போக்கு இடத்தில் வீடு கட்டி குடியிருக்கிறார். அவரது வீட்டுக்கு அருகில் டாஸ்மாக் கடை ஒன்று இருந்தது. அவர் சொன்ன உடனே அந்தக் கடையை அங்கிருந்து அகற்றிவிட்டார்கள்.
Source & Thanks : http://www.vikatan.com/article.php?module=magazine&aid=106751