சென்னை மே 31: காந்திய மக்கள் இயக்கம் சார்பில் வரும் சனிக்கிழமை (ஜூன் 2) சென்னையில் மதுவிலக்கு மாநாடு நடைபெறும் என காந்திய மக்கள் இயக்க நிறுவனத் தலைவர் தமிழருவி மணியன் (படம்) கூறினார்.
இது குறித்து சென்னையில் வியாழக்கிழமை அவர் கூறியதாவது: தமிழகத்தை மதுவுக்கு அடிமையாக்கி அரசு கருவூலத்திற்கு ஆண்டிற்கு ரூ.18 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டுவது இன்றைய சாதனையாக உள்ளது. மதுவை ஒழித்தால் அரசுக்கு ரூ.18 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும்.
ஆனால், அந்த இழப்பை வேறு வழியில் சீர் செய்ய காந்திய மக்கள் இயக்கம் உருவாக்கியுள்ள மாற்றுத் திட்டம் மதுவிலக்கு மாநாட்டில் வெளியிடப்படும். இந்திய குடியரசு தேர்தலில் சங்மாவை தமிழக முதல்வர் ஜெயலலிதா முன்னிறுத்தியிருப்பது பாராட்டுக் குரியது.
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் காந்தியின் பேரனான கோபாலகிருஷ்ண காந்தியை தமிழக முதல்வர் ஜெயலலிதா முன்னிறுத்த வேண்டும். முல்லைப் பெரியாறு விவகாரத்தில் கேரள அரசின் நிலைப்பாடு இந்திய ஒருமைப்பாட்டுக்கு ஊறுவிளைவிப்பதாக அமைந்திருப்பது கவலை அளிக்கிறது.
தமிழக காவல்துறையை அணை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த வேண்டியிருக்கும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா எச்சரிக்கை விடுத்துள்ளதை காந்திய மக்கள் இயக்கம் பாராட்டுகிறது.
ஈழப் பிரச்னையில் கட்சி மாச்சர்யங்களை மீறி தமிழர்கள் அனைவரும் தமிழ் ஈழம் காண உதவ வேண்டும்.
மாபெரும் மனிதப் பேரழிவை சந்தித்திருக்கும் ஈழத்தமிழர்களை வைத்து ஆதாயம்தேட தமிழக கட்சியினர் முயற்சிக்கக் கூடாது.
ஈழத் தமிழர்களுக்கு உரிய அரசியல் தீர்வு கிடைக்கும் வரை இலங்கை அரசு நடத்தும் எந்த விழாவிலும் தமிழக அறிஞர்கள் மற்றும் அரசியல்வாதிகள் பங்கேற்க வேண்டாம் என காந்திய மக்கள் இயக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறோம் என்றார்.
source : Dinamani