மதுரை,ஆக. 5: தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி, 1 கோடி பேரிடம், கையெழுத்து இயக்கம் நடைபெற்று வருவதாகவும், இந்தக் கடைகளை மூடுவதற்கு முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்தார்.
மதுரையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காந்திய மக்கள் இயக்கத்தின் மாநிலச் செயற்குழுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
மதுபான கடைகளை மூடினால் ஏற்படும் 18 ஆயிரம் கோடி ரூபாய் வரி இழப்பை ஈடுசெய்ய மாற்றுத் திட்டம் குறித்து அரசுக்குத் தெரிவித்தோம். மதுவிலக்கை வலியுறுத்தி 1 கோடி மக்களிடம் கையெழுத்து பெறும் இயக்கம் நடத்தி வருகிறோம். இதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் ஆதரவு தெரிவித்துள்ளார்.
டாஸ்மாக் கடைகளை மூடாவிட்டால் தமிழகம் நிர்மூலமாகிவிடும். இப்போது ரூ. 10 ஆயிரம் கோடி வரி வசூல் செய்ய மாற்றுத் திட்டத்தை தயாரிக்குமாறு முதல்வர் உத்தரவிட்டிருப்பதாகத் தகவல் வந்துள்ளது. அப்படி டாஸ்மாக் கடைகளை மூடினால், முதல்வருக்கு நாம் பாராட்டுகளைத் தெரிவிப்போம்.
அரசியல் சார்பற்ற நமது இயக்கம் 2016-ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
Thanks : Dinamani