வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழகத்தில் மூன்றாவது அணிக்கு வாய்ப்பில்லை. மாறாக அனைத்துக் கட்சிகளும் அதிமுக, திமுக ஆகிய திராவிடக் கட்சிகளில் ஒன்றுடன் கூட்டணி அமைத்துதான் போட்டியிடும் என காந்திய மக்கள் கட்சியின் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்தார்.
இது குறித்து அவர் சேலத்தில் சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மத்திய அரசு நாடு முழுவதும் 100 ஸ்மார்ட் சிட்டிகளை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இதன் முதல்கட்டமாக 12 ஸ்மார்ட் சிட்டிகளை உருவாக்க முனைந்துள்ளது. இதற்கு தமிழகத்திóல் சென்னைக்கு அருகே உள்ள பொன்னேரி என்ற இடத்தை தேர்ந்தெடுத்துள்ளது. வளர்ச்சியடைந்த சென்னையை விடுத்து, பின்தங்கிய மாவட்டமான ராமநாதபுரத்தில் உள்ள ஏதேனும் ஒரு நகரைத் தேர்ந்தெடுத்து ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். இதனால் அந்த மாவட்டம் வளர்ச்சி பெறும்.விவசாயிகளுக்கு பாதகமான நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தை அமுல்படுத்தினால் மோடி தலைமையிலான பாஜக அரசு வாட்டர்லூ போரில் நெப்போலியன் தோற்றது போல தனது செல்வாக்கை இழந்து வீழ்ச்சியைச் சந்திக்கும்.
தனியார் பள்ளிகளில் ஏழை, எளிய மக்களுக்கு 25 சத இடஒதுக்கீடு என்ற சட்டத்தை, தமிழகத்தில் எந்த ஒரு தனியார் கல்வி நிறுவனமும் உளப்பூர்வமாக நிறைவேற்றவில்லை. இந்த சட்டத்தை அமுல்படுத்தாத தனியார் கல்வி நிறுவனங்களின் அங்கீகாரத்தை உடனடியாக ரத்த செய்து உத்தரவிட வேண்டும்.
தமிழகத்தில் மேலவை அமைக்கப்பட வேண்டும். இதன்மூலம் படித்தவர்களும், நிபுணர்களும் அமைச்சர்களாக வர முடியும்.ஆலை முதலாளிகள் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய ரூ.720 கோடி நிலுவைத் தொகையை இதுவரை வழங்கவில்லை. இதைப் பெற்றுத்தரவும், கரும்பு விவசாயிகளைக் காப்பாற்றவும் தமிழக அரசு, ஆலை முதலாளிகள், கரும்பு விவசாயிகள், அரசு அதிகாரிகள் அடங்கிய முத்தரப்பு கூட்டத்தை கூட்டி உரிய முடிவு எடுக்க வேண்டும்.
அரசுப் பணத்தில் தனக்கென்று ரூ.ஒன்றை எடுத்தாலும் குற்றமே. சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலையானது குறித்து எதிர்க்கட்சியினர் விமர்சிக்கின்றனர். அதுவும் ஊழல் செய்தவர்கள்தான் அதிகமாக விமர்ச்சிக்கின்றனர். இது சரியல்ல. ஊழல் குறித்து விமர்சிக்க தகுதியான ஒரே கட்சி காந்திய மக்கள் கட்சிதான். திமுக, அதிமுகவை பல கட்சிகள் விமர்சனம் செய்தாலும் அனைத்துக் கட்சிகளும் ஏதேனும் ஒரு திராவிடக் கட்சிகளுடன் இணைந்துதான் தேர்தலில் சந்திக்கும். எனவே, தமிழகத்தில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மூன்றாவது அணி அமைய வாய்ப்பில்லை என்றார் தமிழருவி மணியன்.
நன்றி: தினமணி