தமிழக ஆற்று மணல், மாநில எல்லையைத் தாண்டி எடுத்துச் செல்வதற்கு உடனடியாகத் தடை விதிக்க வேண்டும் – காந்திய மக்கள் இயக்கம் வலியுறுத்தல்
(02 08 – அச்சு மற்றும் காட்சி ஊடகங்களுக்கு அனுப்பப்பட்ட அறிக்கை)
மணல் கொள்ளை, தமிழகமெங்கும் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது. பாலாற்றுப் படுகை, கரூர் மற்றும் தஞ்சை மாவட்ட காவிரி ஆற்றுப் படுகைகள், மதுரை மாவட்ட வைகை ஆற்றுப் படுகை, நெல்லை மாவட்ட தாமிரபரணி ஆற்றுப் படுகை என்று பாதிப்புக்கு உள்ளாகாத பகுதிகளே இல்லை. இந்த கூட்டுக் கொள்ளையில் சில அரசு அதிகாரிகள், சட்ட திட்டங்களுக்கு அடங்காத உள்ளூர்ப் பிரமுகர்கள், அதிகார அரசியலுக்கு நெருக்கமானவர்கள் போன்றோர் ஒரு மாபெரும் கூட்டணி அமைத்து செயலாற்றி வருகிறார்கள்.
ஆற்று நீர் மலைகளிலும், பாறைகளிலும் முட்டி மோதி வரும்போது பாறைகளின் பகுதிகள் மணலாக உருமாறி ஆற்றுப் படுகைகளில் தங்குகின்றன. அந்த மணலானது வெள்ள நீரை உறிஞ்சி நிலத்தடி நீர்மட்டம் உயர துணை நிற்கின்றது; குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது. அப்படிப்பட்ட மணல், விதிமுறைகளை மீறி பொக்லைன் இயந்திரம் மூலம் ஒரு மீட்டர் ஆழத்திற்கு மேலாக தோண்டி எடுக்கப்படுகிறது. தோண்டி எடுக்கப்பட்ட மணல் அரசுக்கு ஒரு யூனிட்டுக்கு ரூபாய் 520 கட்டிவிட்டு, நம் மாநிலத்து தேவைகளுக்கு பத்து மடங்கு கட்டணத்தில் விற்கப்படுகிறதென்றால், பக்கத்து மாநிலங்களுக்கு இன்னும் அதிக கட்டணத்தில் கடத்தப்படுகிறது. இந்த வகையில் பாலாற்றுப் படுகையில் மட்டும் கோடிக்கணக்கான ரூபாய் பெறுமானமுள்ள ஆற்று மணல் கடத்தப்படுவது அனைவரும் அறிந்த பகற்கொள்ளையாகவே நடந்து கொண்டிருக்கிறது.
பக்கத்து மாநிலங்களான ஆந்திரம், கர்நாடகம், கேரளம் போன்றவை தங்கள் மாநிலத்து ஆற்று மணல் வளத்தைக் காத்திட விழிப்புடன் இருக்கும் வேளையில் தமிழத்தில் மட்டும் சுரண்டப்படும் மணலில் 60 சதவீதம் எல்லை தாண்டிப் போகிறது; கடல் வழியாக மாலத் தீவுகளுக்கும் பயணிக்கிறது. இவற்றை உடனடியாகத் தடுத்திட, தமிழக ஆற்று மணல் மாநில எல்லையைத் தாண்டி எடுத்துச் செல்வதற்கு தமிழக அரசு உடனடியாகத் தடை விதிக்க வேண்டும் என்று காந்திய மக்கள் இயக்கம் வலியுறுத்துகிறது.