தமிழகச் சிந்தனையாளர் தமிழருவி மணியன் ஏற்பாடு செய்த கருத்தரங்கு பல அடிப்படை விவாதங்களை எழுப்புகிறது. இந்திய அரசியலை மாத்திரமல்ல உலக அரசியலையும் இந்த மேடையில் எழுந்த கருத்துக்கள் விமர்சிக்கின்றன.
தெற்கு ஆசியாவில் கணவனுக்குப் பிறகு மனைவி என்ற வாரிசு உரிமையை முதன் முதலாக உருவாக்கிய நாடு இலங்கை தான்.; பிரதமர் எஸ் டபிள்யூ ஆர் டி பண்டார நாயக்கா ஒரு புத்த பிக்குவால் சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு அவருடைய மனைவி சிறிமாவோ பிரதமரானார்.
இதே உதாரணம் வங்க தேசத்திலும் பின்பற்றப்பட்டது. இந்தியாவிலும் அது நடைமுறையில் உள்ளது. ராஜீவ் காந்தியின் மனைவி சோனியா இந்தியத் தேசியக் காங்கிரசின் தலைமைப் பதவியைத் தக்க வைத்தபடி மக்களால் தெரிவு செய்யப்படாத பிரதமர் மன்மோகன் சிங் ஊடாக நாட்டின் அதிபதியாகத் திகழ்கிறார்.
தமிழருவி மணியனின் மேடை விவாதத்திற்கு இலங்கை மேலும் பல முன்னுதாரணங்களை வழங்குகிறது. வாரிசு அரசியலின் உச்சத்தை இந்த தீவில் காணமுடியும். பண்டாரநாயக்கா குடும்பத்தில் தோன்றிய சந்திரிக்கா இலங்கையின் பிரதமராகவும் அதை அடுத்து ஜனாதிபதியாகவும் இடம் பெற்றார்.
இரண்டு பிரதமர்களுக்கு மகளாகப் பிறந்து பெற்றாரின் பதவியை மாத்திரமல்ல ஒரு படி மேலே போய் ஜனாதியாகவும் சந்திரிக்கா குமாரதுங்கா பண்டாரநாயக்கா வரலாறு படைத்தார். உலகில் வேறெங்கணும் இதைப் போன்றதைக் காணமுடியாது.
இலங்கையின் சாதனைப் பட்டியல் அந்தளவோடு முடியவில்லை. இப்போது ஆட்சியில் இருக்கும் ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த நான்கு சகோதரர்கள் நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கிறார்கள். ஓரு தாய் பிள்ளைகளான நால்வரும் பின்வரும் பதவிகளை வகிக்கிறார்கள்.
முதலாவது சாமல் ராஜபக்ச பாராளுமன்றச் சபாநாயகர், இரண்டாவது மகிந்த ராஜபக்ச நாட்டின் ஜனாதிபதி, மூன்றாமவர் பாதுகாப்புச் செயலர் கொத்தபாய ராஜபக்ச. நான்காவது ராஜபக்ச பொருளாதார மேம்பாடு அமைச்சராகவும் இந்தியாவுடனான உத்தியோகப் பற்றற்ற தொடர்பாளர் பசில் ராஜபக்ச ஆவார்.
இந்த நால்வருடைய சகோதரி நிருபமா ராஜபக்ச துணை அமைச்சராகப் பதவி வகிக்கிறார். அவருடைய கணவர் நடேசன் என்ற பெயருடைய கொழும்புச் சீமான் தமிழனாகப் பிறந்தாலும் அவர் தமிழ் பேசுவதில்லை.
அடிக்கடி தமிழகம் வரும் வழக்க முள்ளவர் இந்தப் பச்சோந்தி நடேசன், சிதம்பரம், காளகஸ்தி, திருப்பதி போன்ற திருக்கோவில்களில் மனைவியின் குடும்ப நலனுக்காக விசேட வழிபாடுகள் செய்வது இவருடைய வழக்கம். சில வேளைகளில் இவர் நாம் தமிழர் இயக்கத்தினரால் தாக்கப்பட்டதும் உண்டு.
இந்தியாவில் ஒரு றாகுல் காந்தியைப் போல் இலங்கையில் ஒரு நாமல் ராஜபக்ச இருக்கிறார். இவர் ஜனாதிபதி மகிந்தவின் மகன், அத்தோடு பாரளுமன்ற உறுப்பினர். அடுத்த ஜனாதிபதி இவர் தான் என்று இலங்கையின் விலைபோன ஊடகங்கள் பறைசாற்றுகின்றன.
வெளிநாட்டுப் பத்திரிகைகளின் கண்டனங்களுக்குப் பதிலளிக்கும் விதத்தில் அமைச்சர் பசில் ராஜபக்ச பின்வருமாறு பதிலளித்தார் “அமெரிக்காவில் கெனடி சகோதரர்களும் இந்தியாவில் நேரு குடும்பமும் ஆட்சி செய்ய முடியுமானல் ராஜபக்ச குடும்பம் ஏன் ஆட்சி செய்யக் கூடாது?”
கெனடி குடும்பத்தின் சகாப்தம் அதிபர் ஜோன் கெனடியின் மகன் அகால மரணம் அடைந்ததோடு முடிந்து விட்டது. ஆனால் இந்தியாவின் குடும்ப ஆட்சி வரலாறு தொடர்கின்றது. தமிழருவி மணியன் அமைத்த கருத்தரங்கில் பேசிய சினிமாத் தயாரிப்பாளர் தங்கர் பச்சான் இப்படிப் பேசினார்.
“சுதந்திரதிற்குப் பிறகு ஜம்பது ஆண்டு காலமாக ஒரே குடும்பம் நம்மை ஆண்டு கொண்டிருக்கிறது. இதை ஜனநாயகம் என்கிறோம். மக்களாட்சி என்கிறோம். கேடு கெட்ட விஷயம் இது தான்.” அவர் சொல்வதில் உண்மை இருக்கிறது. சிறிய இடைவெளிகள் இருந்தாலும் நேரு குடும்ப ஆட்சி தொடர்ச்சியாக நடைபெறுகிறது. முதலாவது இந்தியப் பிரதமரான நேரு வாரிசை நியமிக்காமல்; அல்லது கோடி காட்டாமல் இறந்து போனார்.
நேருவின் மறைவுக்குப் பிறகு பிரதமர் பதவிக்குப் போட்டியிட மூத்த அமைச்சர் மொரார்ஜி தேசாய் விரும்பினார். அதற்கான தயார்ப் படுத்தலையும் மேற்கொண்டார். அப்போதைய இந்தியத் தேசிய காங்கிரசின் அகில இந்தியத் தலைவர் காமராசர் மாற்று யோசனையைக் கொண்டிருந்தார்.
தேசாய்க்குப் பதிலாக லால் பகதூர் சாஸ்திரியை பிரதமராக்க காமராசர் விரும்பினார். தேசாயும் ஒதுங்கிக் கொண்டார். பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி குறுகிய காலத்தில் காலமானார். காமராசரை ஒதுக்கித் தள்ளிய நேருவின் மகள் இந்திரா காந்தி பிரதமர் பதவியைக் கைப்பற்றினார்.
காமராசருக்கு மரண அடி கொடுத்தவர் இந்திரா காந்தி. அவர் தான் நேரு குடும்ப ஆட்சியை நிறுவியவர். அவர் சஞ்சய் காந்தியை தனது வாரிசாக உருவாக்கினார். சஞ்சய் அகால மரணமடைந்தவுடன் அரசியலுடன் தொடர்பு இல்லாமல் வாழ்ந்த ராஜீவ் காந்தியை இந்திரா தனது வாரிசாக வளர்த்தெடுத்தார்.
இப்போது ராஜீவ் காந்தியின் மகன் றாகுல் காத்திருக்கும் இளவரசர் போன்று வருங்காலப் பிரதமராக வலம் வருகிறார். மூத்த பத்திரிகையாளர் குல்திப் நய்யார் றாகுல் காந்தி பிரதமர் பதவிக்கு முற்றிலும் தகுதி அற்றவர் என்று சான்றிதழ் வழங்கியுள்ளார்.
வருங்காலப் பிரதமர், இந்திய தேசிய காங்கிரசின் அடுத்த தலைவர் என்று இந்திய மண்ணில் சுற்றித் திரியும் றாகுல் காந்தி சகோதரி பிரியங்காவின் கணவர் ராபேர்ட் வத்ரா (42) உருவத்தில் போட்டியைச் சந்திக்கிறார்.
அண்மையில் நடந்து முடிந்த வட மாநிலத் தேர்தல்களில் படுதோல்வி அடைந்த காங்கிரசிற்காகப் பிரசாரம் செய்த ராகுல் தனிப்பட்ட தோல்வி அடைந்தார். பிரசாரத்தில் ஈடுபட்ட பிரியங்காவும் கணவரும் மக்கள் மனதில் இடம் பிடித்தனர். பிரியங்கா நடந்து வரும் போது இந்திராவைப் பார்த்தது போல் இருந்தது என்று ஒரு மூதாட்டி கூறினார்.
தானுண்டு தனது ஏற்றுமதி வர்த்தகம் உண்டு என்றிருந்த ராபேர்ட் வத்ரா அரசியலில் குதிக்கத் தயாராகி விட்டார். “மக்கள் விரும்பிக் கேட்டால் நான் அரசியலுக்கு வருவேன்” என்று அவர் முழங்கினார். பாவம் மக்கள், அதிலும் பாவம் றாகுல் காந்தி.
இந்தியா அரச பரம்பரையினர் ஆட்சிக்குப் பழக்கப்பட்ட நாடு. அதிலிருந்து விடுபட இயலாது. மத்திய மாநில அரசுகளில் வாரிசு அரசியலின் இன்னோர் பரிமாணமாக உத்தர பிரதேச முதல்வராக அகிலேஷ் யாதவின் பதியேற்பு அமைகிறது.
உத்தர பிரதேச சமாஜவாடி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் தனது மகன் அகிலேஷ் யாதவை முதல்வராக இருத்துவதில் வெற்றி பெற்றிருக்கிறார். கட்சியின் மூத்த தலைவர்களும் முலாயம் சிங்கின் தம்பியும் எதிர்த்தார்கள். ஆனால் மகனை அமர்த்தும் முயற்சிக்கு வெற்றி.
“அண்ணன் எப்போது சாவான் திண்ணை எப்போது காலியாகும்” என்ற நமது மாநிலப் பழமொழிக்கு உதாரணமாகக் கருணாநிதி சாகும் வரை தலைமைப் பதவிக்காகக் காத்திருக்கிறார்கள் அவருடைய சற்புத்திரர்கள் அழகிரியும் ஸ்டாலினும்.
கருணாநிதி குடும்ப நலனில் அக்கறை உள்ளவர். முள்ளிவாய்க்கால் படுகொலைகள் நடந்து கொண்டிருந்த காலத்தில் அவர் தள்ளாத வயதையும் பொருட்படுத்தாது டில்லிக்குச் சென்றார். அவர் இனத்திற்காகப் போராடச் செல்லவில்லை. பிள்ளைகளுக்கும் பேரனுக்கும் அமைச்சர் பதவிகளுக்காகப் போராடி வெற்றி வாகை சூடினார்.
கருணாநிதியைக் குறை கூறிப் பயனில்லை. நமது நாடும் மக்களும், எமது அரசியல் சூழலும் அவரைப் போன்ற ஏமாற்று அரசியல் வாதிகளை உருவாக்குகின்றன. எனினும் தமிழருவி மணியனின் முயற்சியைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. இன்னும் இது போன்ற கருத்தரங்குகள் நடைபெற்றால் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு.
Thanks: tamilarul.com