‘நாம் உருவாக்கும் அரசமைப்புச் சட்டம், ஜனநாயக நெறிமுறை களும் கூட்டாட்சி அணுகுமுறை யும் கொண்டதாக அமையும். மைய அரசிடம் அதிகாரம் குவிந்தால், அதுவே நாம் பெறும் சுதந்திரம் தரும் உரிமைகள் அனைத்தையும் முற்றாகப் பறித்துவிடக்கூடும். உள்நாட்டுப் பாதுகாப் புக்கு ஊறு விளைவிக்காத வகையில் உயர்ந்தபட்ச அதிகாரங்கள் மாநிலங்களிடம் இருப்பதுதான் நல்லது’ என்று நவம்பர் 1946-ல் நடந்த மீரட் காங்கிரஸ் மாநாட்டில் அன்றைய அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கிருபளானி அறிவித்தார். அண்ணல் அம்பேத்கர் உட்பட அனைவரும் பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின்பு இந்திய ஒருமைப்பாடு பராமரிக்கப்பட வேண்டுமெனில் மைய அரசு வலிமைமிக்கதாக இருக்கவேண்டும் என்று முடிவு எடுத்தனர். அதன் விளைவாக மாநில அரசுகள் ‘பெருமைக்குரிய பேரூராட்சிகளாக’ (glorifed municipalities) மாற்றப்பட்டன.
இந்திய அரசமைப்புச் சட்டத்தில் எந்த இடத்திலும் கூட்டாட்சியைக் குறிக்கும் ‘‘federal’என்ற வார்த்தை இடம் பெறவே இல்லை. மாநிலங்களை இணைக்கும் ஒப்பந்தமோ, பிரிந்து போகும் உரிமையோ இல்லாத நிலையில் ‘ஒன்றியம்’ (Union) என்று இந்தியா குறிப்பிடப்படுவதுதான் பொருத்தமாக இருக்கும்’ என்று விளக்கம் அளித்தார் அம்பேத்கர். நம் அரசமைப்புச் சட்டம் வழங்கியிருப்பது முழுமையான கூட்டாட்சியும் இல்லை; முற்றுரிமை கொண்ட ஒற்றையாட்சியும் இல்லை. இங்கே நடப்பது பூரணமான ஜனநாயக ஆட்சியும் இல்லை; சகல உரிமைகளையும் பறித்துவிடும் சர்வாதிகாரமும் இல்லை. எந்தவகையில் பார்த்தாலும் இது ஓர் இரண்டுங்கெட்டான் தேசம்.
இந்திய ஒருமைப்பாடு பேணிப் பராமரிக்கப்படவும், அமைதியும் ஒழுங்கும் அழிந்து விடாமல் காக்கப்படவும், மாநிலங்களுக்கு இடையே எழும் பிரச்னைகளை நடுநிலை பிறழாமல் தீர்த்து வைக்கவும் வலிமையான மத்திய அரசு அமைக்கப்பட்டு, ஏராளமான அதிகாரங்கள் அதனிடம் குவிக்கப்பட்டது. இன்று இந்திய ஒருமைப்பாடு மத்திய அரசால் காக்கப்படுகிறதா? இந்த ஒருமைப்பாடு இன்னும் எவ்வளவு காலம் நீடிக்கும்? சோவியத் ஒன்றியம் சிதைந்ததுபோல் ‘இந்திய ஒன்றியம்’ கால நடையில் சிதறுண்டு போகுமா? சந்தேக வலை நம் ‘திராவிட’ சகோதரர்களால் விரிக்கப்படுவதை மன்மோகன் அரசு விழி திறந்து பார்ப்பதாகத் தெரியவில்லை.
இந்தியராக இருப்பதற்கும், ஒருமைப்பாடு காப்பதற் கும் தமிழினம் கொடுத்து இருக்கும் விலை அதிகம். மொழி வழி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது தெலுங்கரிடம் 29 ஆயிரம் ச.கிலோ மீட்டரும், கன்னடரிடம் 16,946 ச.கி.மீட்டரும், மலையாளிகளிடம் 12,219 ச.கி.மீட்டரும் நிலப்பரப்பில் இழந்து நின்றது தமிழினம். திருப்பதி, திருக்காளத்தி, சித்தூர், புத்தூர், புங்கனூர், பல்லவனேரி, காருந்தி ஆகிய பகுதிகளையும், நெல்லூர் மாவட்டம் முழுவதையும் தெலுங்கரிடம் இழந்தனர் தமிழர். சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம் வடக்கெல்லைக் கிளர்ச்சியில் ஈடுபட்டதால் திருத்தணி தப்பியது.
சென்னையை ஆந்திரர் அபகரிக்க முயன்றபோது அதைத் தடுத்து நிறுத்த மூதறிஞர் ராஜாஜி முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாக நேருவிடம் அறிவித்தார். ‘சென்னையில் வாழும் ஆந்திரர்கள் சென்னை பற்றிய கிளர்ச்சியில் ஆந்திர காங்கிரசுடன் ஒத்துழைத்தால் அவர்களுக்குக் குடிதண்ணீர் வழங்க மாட்டேன். பிணம் புதைக்கவும் சுடுகாட்டில் அவர் களுக்கு இடம் கிடைக்காது’ என்று அப்போது சென்னை மேயராக இருந்த காங்கிரஸ்காரர் செங்கல்வராயன் எச்சரித் ததை இன்றைய சோனியா காங்கிரஸ் சகோதரர்கள் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை. பதவிப் போட்டிகளில் அடித்துக் கொள்ளும் அவர்களுக்குப் பழைய வரலாற்றைப் புரட்டிப் பார்க்க ஏது நேரம்? காமராஜர் அரங்கத்தில் கைதட்டலுக்காக வாய்வீரம் காட்டிய ப. சிதம்பரம் கேரளாவிலிருந்து எதிர்ப்புக் குரல் எழுந்ததும் அஞ்சி ஒடுங்கி விடவில்லையா? நாற்காலி மனிதர்களுக்கு ஏன் நாடக ஒப்பனை?
மிகக் குறைந்த மலையாளிக் குடும்பங்கள் இருந்த கோலார் தங்கவயலைக் கேரளாவில் இணைக்க வேண்டும் என்று குரல் கொடுத்தவர்கள், தமிழர் கள் பெரும்பான்மையாக வாழ்ந்த தேவிகுளம், பீர்மேடு தாலுக்காக்களைத் தமிழகத்துடன் இணைக்க அனுமதிக்கவில்லை. மொழிவழி மாநில எல்லைகளை நிர்ணயிக்கப் புறப்பட்ட பசல் அலி கமிஷன் தேவிகுளம், பீர்மேடு விவகாரத்தில் மொழியைப் புறக்கணித்தது. இந்தச் சதிக்குப் பின்புலமாக இருந்தது கே.எம்.பணிக்கரின் இனம் சார்ந்த பாசம். திருவிதாங்கூர் தமிழர்கள் தீரத்துடன் போர்க்களத்தில் இறங்கியதால்தான் செங்கோட்டை, தோவாளை, அகத்தீச்சரம், கல்குளம், விளவன்கோடு பகுதிகள் தமிழருக்குக் கிடைத்தன. திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் சிக்கிக் கிடந்த 2000 ச.கி.மீட்டர் நிலப்பரப்பில் 600 ச.கி.மீட்டர் நிலம் மட்டுமே நம்மிடம் மீண்டது.
தேசியம் பேசிய காமராஜரும், திராவிடம் பேசிய பெரியாரும் அண்ணா வும் வெவ்வேறு காரணங்களால் தேவிகுளம், பீர்மேடு பறிபோனது குறித்துக் கவலைப்படவில்லை. ‘தேவிகுளம், பீர்மேடு, நெய்யாற்றின் கரை, கொச்சின், சித்தூர் ஆகிய பகுதிகளைப் பற்றி எனக்குக் கவலையில்லை’ என்று வெளிப்படை யாகவே பெரியார் பேசினார். ‘தேவிகுளம், பீர்மேடு பகுதிகளைத் தமிழ்நாட்டுடன் சேர்ப்பதற்கு இயன்றது எல்லாம் செய்வோம். அந்தப் பகுதிகள் சேராவிட்டாலும், தேவிகுளத்திலுள்ள பெரியாற்றுத் தண்ணீரைச் சென்னை ராஜ்யத்திற்குப் பயன்படச் செய்வது உறுதி’ என்றார் அன்றைய மாநில நிதியமைச்சர் சி.சுப்பிரமணியம். தேவிகுளம், பீர்மேடு பகுதிகள் தமிழகத்தில் இணைக்கப்பட மார்ஷல் நேசமணி போராடி மூணாறில் சிறைப்பட்டபோது தமிழகத் தலைவர்கள் பொங்கி இருந்தால், இன்று முல்லைப்பெரியாறு குறித்துப் பேசுவதற்கு மலையாள நண்பர்களுக்கு வாய்ப்பே இருந்திருக்காது.
கேரளாவின் நீர்வளம் 2500 டி.எம்.சி. அந்த மாநிலத்தின் தேவை 850 டி.எம்.சி. ஏறக்குறைய 1200 டி.எம்.சி. தண்ணீர் அரபிக் கடலில் வீணாய்க் கலக்கிறது. இது மேட்டூர் தேக்கத்தின் நீரைப் போன்று 12 மடங்காகும். வீணாய்ப் போகும் நீரை வறண்டு கிடக்கும் நெல்லை, ராமநாதபுரம் மாவட்டங்களில் திருப்பிவிட நம் ‘திராவிட’ சகோதரர்களுக்கு மனமில்லை. காவிரி நீரைக் கர்நாடகம் தராது. பாலாற்றைப் பயன்படுத்த ஆந்திரம் விடாது. முல்லைப்பெரியாறு அணையைக் கேரள அரசு இடிக்கும். இது என்ன இந்திய தேசியம்? இதில் என்ன திராவிட இனஉணர்வு வாழ்கிறது? ‘ஆந்திரர்கள் என்றும் தங்களைத் திராவிடர் என்றது இல்லை. மலையாளிகளும் கன்னடரும் துளுவரும் திராவிடராகவில்லை. இளித்தவாய்த் தமிழர் மட்டும் திராவிடர் ஆயினர்’ என்றார் தமிழ்த் தேசியச் சிந்தனையாளர் குணா. ‘திராவிடம்’ என்பது நம் இனத்தை ஏமாற்றும், திசை திருப்பும் ஒரு மாய்மாலச் சொல். வைகோ தன் இயக்கத்தின் பெயரை ‘தமிழர் மறுமலர்ச்சிக் கழகம்’ என்று இனி மாற்றினால் நல்லது.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பைக் கர்நாடகமும் மதிக்கவில்லை. கேரளமும் பின்பற்றவில்லை. அரச மைப்புச் சட்டத்தின் அங்கமான உச்சநீதிமன்றம் உதாசீனப்படுத்தப்படுவதை ‘வலிமை மிக்க’ மைய அரசு மௌனமாய் வேடிக்கை பார்க்கிறது. உறுதி வாய்ந்த ஓர் அணையை உடைத்து நொறுக்க ஒரு மாநில அரசே கையில் கடப்பாரை ஏந்துகிறது. சில ‘சகோதர’ மலையாளிகள் மதகைச் சேதப்படுத்தினர். கம்பம் மெட்டுப் பகுதியில் தமிழரின் 200 ஜீப்புகள் அடித்து நொறுக்கப்பட்டன. ஏலம் விளையும் தோட்டங்களில் 500 தமிழ்ப் பெண் தொழிலாளர்கள் சிறை வைக்கப்பட்டனர். குமுளி வழியாகச் சென்ற ஐயப்ப பக்தர்கள் தாக் கப்பட்டனர். வினையை முதலில் விதைத்தது கேரளம். பின்னர், எதிர்வினையாற்றத் தொடங்கியது தமிழினம். ஆயுதம் தூக்குவதும், அடுத்தவரைத் தாக்குவதும் எந்த நாகரிக சமூகத்துக்கும் ந
ல்லதல்ல. அணையை இடிக்கத் துடிப்பவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை, நம் இதயங்களின் இணைப்புப் பாலத்தை உடைக்க முயல்கிறார்கள்.
இந்திய தேசியப் பண்பாடு ‘வேற்றுமையில் ஒற்றுமை’ காண்பதில்தான் செழிக்க முடியும். மாநிலங்களுக்கு இடையில் இணக்கமான சமநிலை சிதைந்தால் இன்பம் தரும் அமைதியும், ஒழுங்கு முறையும் அழிந்து விடும். அப்போது ஜனநாயக நெறிமுறைகள் சீர்குலையும். சில சுயநல அரசியல் சக்திகளால் ‘இந்திய ஒன்றியம்’ இனவெறி பலிபீடத்தில் சிதறுண்டு போகும். சார்ந்து வாழ்வதுதான் சமூக வாழ்க்கை. சேர்ந்து மகிழ்வதுதான் வாழ்வின் உன்னதம். பகிர்தலே பண்பாட்டின் அடையாளம். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரும்வரை அமைதி காப்போம். முதல்வர் ஜெயலலிதாவின் சமரச் சிந்தனையும், அணையைக் காப்பதில் காட்டும் உறுதிப்பாடும் பாராட்டுக்குரியது. அரசியல் லாபத்துக்காக சோனியா வாய் திறக்க மறுப்பதும், ராகுல் காந்தி விழி மூடிக் கிடப் பதும் கண்டிக்கத்தக்கது.
‘வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்! வாழிய பாரத மணித் திருநாடு!’ என்று பாரதியின் பாடலை வரி மாறாமல் பாட வேண்டும் என்பதுதான் நம் ஆசை. ஆனால், ‘வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்! வாழிய தமிழ்த் திருநாடு’ என்று திருத்திப் பாடும் அளவுக்கு, பக்கத்து மாநிலங்கள் பாதித்து விடுமோ என்ற அச்சம் நம்மை அலைக்கழிக்கிறது. எது நடக்கிறதோ, அது நல்லதாக இல்லை. எது நடக்க வேண்டுமோ, அது நல்லதாக நடக்கட்டும்!
2 Comments
Shan
நல்ல தொடக்கம்.
Emmanuel Mallar
தமிழன் வேற திராவிடன் வேற பாஸ் . தமிழன திராவிட கட்சிக பெயர வைத்து எம்மாதுறாங்க.
தமிழன தமிழனே ஆளும் காலம் வரும் .
திராவிடன் என்பவர்கள் தமிழர்கள் அல்ல . கன்னடம் மற்றும் தெலுகு பேசும் நாயகர்களே திராவிடர்கள்.நாயகர்கள் வித விதமான பெயர்களில் தமிழ்நாட்டில் இருகிறார்கள். உதாரணமாக ( நாய்டு , நாயகர் ,வடுகர், சக்ழியர்,இசை வேளாளர் என்கிற சின்ன மோளம் ) இது போல பல பெயர்களில் விஜய நகர படை எடுப்பின் போது வந்தவர்கள் அநேகம் .
மிகவும் துக்கமான செய்தி என்னவென்றால் – இன்று வரை மதுரை பாண்டிய அரண்மனையில் மஞ்சள் நிற தெலுகு வடுகர் கொடியே பறக்குது .