சென்னை: செவ்வாய்க்கிழமை, ஜூன் 29, 2010, 10:19 – வீட்டு வசதி வாரிய தலைமை அலுவலக கட்டடத்தின் மேல், பெரிய அளவில் நியான் விளக்கு பொருத்தப்பட்ட போர்டு உள்ளது. அதில், “தமிழ் வாழ்க’ என்கிற வார்த்தை பொறிக்கப்பட்டுள்ளது. இதை உண்மையாக நடைமுறைப்படுத்த வேண்டுமென்றால், கொள்கை ரீதியான மாறுபாடுகள் இருந்தாலும், தமிழ் எழுத்தாளர்கள், தமிழ் அறிஞர்கள், தமிழ் சிந்தனையாளர்களை கவுரவப்படுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம், தமிழக அரசின் வீட்டு வசதி வாரியத்திற்கு குட்டு வைத்துள்ளது.
பிரபலமான தமிழறிஞர் தமிழருவி மணியன். காங்கிரஸ் கட்சியில் இருந்து வந்தார். இலங்கையில் தமிழர்கள் படுகொலை உச்சத்தில் இருந்தபோது காங்கிரஸ் கட்சி இன அழிப்புக்குத் துணை போவதாக பகிரங்கமாக குற்றம்சாட்டி அக்கட்சியை விட்டு வெளியேறியவர்.
தமிழருவி மணியனுக்கு கடந்த 2007ம் ஆண்டு கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் சாலையில் உள்ள அரசு வீடு, பொது ஒதுக்கீட்டின் கீழ் ஒதுக்கப்பட்டது. இந்த வாடகை வீட்டுக்கான குத்தகையை 19 மாதங்களாக அவர் புதுப்பிக்கவில்லை. இதையடுத்து தொடர்ந்து அந்த வீட்டில் வாடகைக்கு குடியிருக்க உரிமையில்லை. எனவே, வீட்டை காலி செய்து வீட்டு வசதி வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும் என தமிழருவி மணியனுக்கு வீட்டு வசதி வாரியம் நோட்டீஸ் அனுப்பியது.
இதை எதிர்த்தும் ரத்து செய்யக் கோரியும் தமிழருவி மணியன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த கோர்ட், குத்தகையை புதுப்பிக்குமாறு கோரி வீட்டு வசதி வாரியத்தை அணுகுமாறு மணியனுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து அவரும்வாரியத்திடம் விண்ணப்பித்தார். ஆனால் வீட்டைக் காலி செய்யுமாறு கூறி வீட்டு வசதி வாரியம் உத்தரவிட்டது.
இதையடுத்து மீண்டும் கோர்ட்டை அணுகினார் மணியன். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சந்துரு, வீட்டு வசதி வாரியத்திற்கு குட்டு வைத்து உத்தரவு பிறப்பித்தார்.
அதில்,
பொது ஒதுக்கீட்டின் கீழ் வீடுகள் ஒதுக்கப்பட்ட மற்றவர்களுக்கு, குத்தகையை புதுப்பிக்க வேண்டும் என வற்புறுத்தவில்லை என்பதை மனுதாரர் நிரூபித்துள்ளார். மனுதாரரை மட்டும் தனியாக பிரித்து பாரபட்சம் காட்ட முடியாது.
தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலை அளித்தும், மற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது குறித்து வீட்டு வசதி வாரியம் பதிலளிக்கவில்லை. எனவே, மனுதாரர் குடியிருப்பை காலி செய்ய வேண்டும் என்கிற நோக்கில் தான் இந்தக் காரணத்தை வாரியம் கண்டுபிடித்துள்ளது. வீட்டு வசதி வாரியம் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.
வீட்டு வசதி வாரிய தலைமை அலுவலக கட்டடத்தின் மேல், பெரிய அளவில் நியான் விளக்கு பொருத்தப்பட்ட போர்டு உள்ளது. அதில், தமிழ் வாழ்க என்கிற வார்த்தை பொறிக்கப்பட்டுள்ளது. இதை உண்மையாக நடைமுறைப்படுத்த வேண்டுமென்றால், கொள்கை ரீதியான மாறுபாடுகள் இருந்தாலும் மனுதாரரைப் போன்ற தமிழ் எழுத்தாளர்கள், தமிழ் அறிஞர்கள், தமிழ் சிந்தனையாளர்களை கவுரவப்படுத்த வேண்டும்.
தமிழ் சிந்தனையாளர்களை பாதுகாப்பதன் மூலமே தமிழ் வாழும். அப்போது தான், நியான் விளக்கு பொருத்தப்பட்ட போர்டில் உள்ள, “தமிழ் வாழ்க’ என்கிற வாசகம் மேலும் மிளிரும் என்று உத்தரவிட்டார் நீதிபதி சந்துரு.
thanks : Thatstamil