தலைமையேற்க மீண்டு(ம்) வாருங்கள் ….
காந்திய மக்கள் இயக்கத்தின் மாநில, மாவட்டநிர்வாகிகள், மாநிலச் செயற்குழு – பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் இயக்கத் தொண்டர்கள் சார்பாக காந்திய மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் ஆ. கணேசன் எழுதும் கடிதம் ….
சீரிய சிந்தனையாளர், கறைபடியாத எங்கள் தலைவர் தமிழருவி மணியன் அவர்களே ….
நாங்கள் உங்களோடு கரம் கோர்த்த்து உங்களின் மேடைப் பேச்சுக்காகவோ எழுத்துக்காகவோ அல்ல. உங்கள் ஒழுக்கம் செறிந்த தூய்மையான அரசியலை மக்கள் சேவைக்காக கடந்த 50 ஆண்டுகளாக முன்னெடுத்துச் செல்கின்ற உங்கள் தூய்மையான நேர்மையான அரசியல் நடத்தி வருகின்ற அந்தக் காரணம் தான் எங்களை உங்களோடு சேர்த்து வைத்தது. பணம், பதவி மட்டுமே என்று நாங்கள் நினைத்திருந்தால் வேறு எத்தனையோ கட்சிகளை தேடிச் சென்றிருப்போம். அதன் மூலம் நாங்கள் எங்கள் வாழ்க்கையையும் ஏற்படுத்திக் கொண்டிருப்போம். ஆனால் உங்களைப் போன்ற வாய்மை, தூய்மை, நேர்மை, தன்னலமற்ற தலைமைதான் உங்களோடு எங்களை இணைத்து வைத்தது.
நீங்கள் எடுத்து வைத்த ‘உண்மைக்கு உயிர் கொடுப்போம்’, மதுவை ஒழிப்போம்; ஊழலை வேரறுப்போம்; மக்களைக் காப்போம் என்ற தாரக மந்திரங்கள் தான், அதை யார் சொல்கிறார்கள் என்பதைப் பார்த்து தெரிந்து சிந்தித்து அதன் பிறகு உங்களோடு இணைந்தோம். யாரும் பின்ற்ற முடியாத தன்னை முன்னிறுத்திக் கொள்ளாமல் மக்கள் நலன் கருதி, யார் அதிக வாக்குகளை யார் பெறுகிறார்கள் என்று கருதாமல் வாக்குகள் குறைந்திருந்தாலும் அந்த நேர்மையானவர்களை பதவிக்கு முன்னிறுத்துகின்ற ஒரு துறவற அரசியலை நடத்தி வருகிறீர்கள். தூய அரசியலைக் கொண்டு வர எங்களுக்கு நேர்மையையும் தூய்மையையும் பயிற்சி கொடுத்தீர்கள்.
பொது மக்களிடம் பணம் வசூல் செய்தால் வரவு செலவு கணக்குகளை நன்கொடை கொடுத்தவர்களுக்கு அனுப்ப வேண்டும் என்று சொல்லி அரசியலில் ஒருவரும் செய்யாத ஒன்றை செய்து காட்டிய அரசியல் தலைவர்தான் நீங்கள். சொந்த வாழ்க்கையில் பொருளாதார, வறுமை இருந்த போதும் ஆன்மிகச் சொற்பொழிவு மூலம் வரும் பணத்தை, கல்லூரிகளில் சென்று உரை நிகழ்த்தி வரும் வருமானத்தையும் வீடுகளில் வேலை செய்கின்ற பிள்ளைகளைத் தத்தெடுத்து அவர்களின் கல்விச் செலவுக்குக் கொடுக்கும் ஈகை குணம் உள்ளவர்கள் நீங்கள். வெளிநாடுகளில் சென்று தமிழ் சொற்பொழிவு நிகழ்த்தி டாலர் கணக்கில் பெரும் பணத்தைப் பெற்று வருபவர்கள் மத்தியில் வெளிநாடுகளில் உள்ளவர்களிடம் “நீங்கள் தமிழை வளர்க்கின்றீகள். உங்களுக்கு தமிழ் சேவை செய்யவே வந்திருக்கிறேன். எங்கள் நாட்டில் நான் பேசுவதற்கு போதுமான தொகை பெற்றுக் கொள்கிறேன்” என்று சொல்லி வழிச்செலவுக்கு மட்டும் பணம் பெற்று வரும் தமிழ் சேவகர் நீங்கள்.
சொந்த வாழ்க்கையும் குடும்ப வாழ்க்கையைப் பற்றி மட்டுமே கவலைப் படுகின்ற அரசியல்வாதிகளுக்கு மத்தியில் பொதுநலன் பற்றியே எந்த நேரமும் சிந்திக்கும் உயரிய குணம் கொண்டவர் நீங்கள். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் மாற்று அரசியலை முன்னிறுத்தி திராவிடக் கட்சிகளின் பிடியிலிருந்து தமிழக அரசியலை விடுவிக்க வேண்டும் என்ற ஓயாத சிந்தனையும் அதற்கான உழைப்பும், எப்படிப்பட்ட உயர்ந்த இடத்தில் இருந்தாலும் அந்தத் தலைவர்கள் தவறு செய்தால் விருப்பு வெறுப்பின்றி சுட்டிக் காட்டுகின்ற ஆண்மையும், தவறுகள் இல்லாத ஒழுக்கமான அரசியலை நிலை நிறுத்த எந்த சமரசத்திற்கும் ஆட்படாத துணிச்சலும், எந்த சூழ்நிலையிலும் தன் சொந்த நலனுக்காக தன்னை அடகு வைக்காத பண்பு நலனைக் கொண்டவர் நீங்கள்.
ஆண்டவன் உங்களுக்குச் கொடுத்திருக்கின்ற வரம் ஆழமான சிந்தனை, சிந்தித்ததை தெள்ளு தமிழில் தெளிவாகப் பேசி மக்களைக் கவர்கின்ற ஆற்றல், கருத்தாழம் மிக்க அழகு தமிழில் எழுதி அந்த எழுத்தின் மூலம் மக்களின் சிந்தனியை நல்வழிபடுத்துகின்ற அரிய சக்தி யாருக்கய்யா இருக்கிறது. கண்ணுக்கு எட்டின மட்டும் தேடிப் பார்த்தோம் உங்களைத் தவிர எங்கள் கண்ணுக்கு வேறு யாரும் தென்படவில்லை.
கூட்டு வைக்கின்றோம் என்று சொல்லி தொகுதிகளையும் பணத்தையும் சுயநலத்திற்காகப் பெறுகின்ற இந்தத் தரங் கெட்ட அரசியல் உள்ள காலத்தில் ஒரு இடைத் தேர்தலில் காந்திய மக்கள் இயக்கத்தின் மூலம் 100 பேர்கள் ஒருவாரம் கூட்டணிக் கட்சிகள் வேட்பாளருக்கு பிரச்சாரம் செய்து விட்டு வழிச்செலவுக்குக் கொடுத்த பணத்தைக் கூடப் பெறாமல் நட்புக்காக பிரச்சாரம் செய்ய வந்த நாங்கள் தான் எங்கள் பணத்தில் தான் செலவு செய்ய வேண்டும் என்று மறுதலித்து மற்றவர்களுக்கு வழிகாட்டும் அரசியலுக்குச் சொந்தக்காரரல்லவா நீங்கள். 50 ஆண்டுகாலமாக எதையும் எதிர்பாராமல் நீங்கள் தமிழகம் முழுக்க தேச நலன் ஒன்றையே கருத்தில் கொண்டு சொந்த வாழ்க்கையைப் புறந்தள்ளி தமிழக மக்களை நல்வழிப் படுத்துவேன் என்று முதலில் என் தமிழ், அதன்பின் என் தமிழ் மக்கள், என் தமிழ்நாடு என்று முழங்கிய நீங்கள் பொது வாழ்வையையும் அரசியலையும் விட்டு விலகுகிறேன் என்று சொல்கிறீர்களே ….
உங்களைப் போன்ற ஒழுக்கம் உள்ளவர்கள் விலகினால் தமிழ் மக்களையும் நாட்டையும் சுயநலமுள்ள அரசியல்வாதிகளிடமிருந்தும் பொதுச் சொத்தைக் கொள்ளையடிப்பவர்களிடம் இருந்தும் மீட்பவர் யார்? நல்லவர்களையும் தூய்மையானவர்களையும் அடையாளம் காட்டி அரசியல் தூய்மை பெற வேண்டாமா? பொதுச் சொத்து காப்பாற்றப்பட வேண்டாமா? சாகும் வரை மக்களுக்காக உழைப்போம்; கடமையைச் செய்வோம். பலனைப் பற்றிச் சிந்திக்க வேண்டியவர்கள் சிந்திக்காவிட்டாலும் கடமையைச் செய்தோம் என்ற உணர்வோடு சாவோம்.
உங்களைக் கைகூப்பி வேண்டுகிறோம். மீண்டும் தலைமையேற்க வாருங்கள். காந்திய மக்கள் இயக்கத்தை வழி நடத்துங்கள். மக்கள் சேவையைத் தொடர்ந்து செய்வோம்….