‘மாற்று அரசியலை முன்வைப்போம்’ என்ற கொள்கையுடன் காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் திருப்பூரில் ஒரு பொதுக்கூட்டம் நடத்தினார். அதில், தமிழருவி மணியன் பேசும்போது, ‘கடலூரிலும் நாகையிலும் புதுச்சேரியிலும் நமது சகோதரர்கள் தங்களது வாழ்வாதாரங்களை இழந்து நிற்கிறார்கள். அவர்கள் இதில் இருந்து மீள்வதற்கு 15, 20 ஆண்டுகளுக்கு வழி இல்லை. அவர்களுக்கு இன்னொரு 15 ஆண்டுகளுக்குக் கண்ணீர் பொங்கல்தான். அவர்களுக்கு உங்களால் முடிந்த உதவியைச் செய்யுங்கள். உங்களது சிறு துளிதான் பெருவெள்ளமாக மாறும்’ என்று கேட்டுக்கொண்டார். 5 ரூபாய் தொடங்கி 1000 ரூபாய் வரைக்கும் நிதியைத் தாராளமாக வழங்கினார்கள் தமிழ் மக்கள். ‘5 ஆயிரம் ரூபாய் சேர்ந்தால்கூட அது பெரிய தொகைதான்’ என்று அந்தக் கூட்டத்தில் தமிழருவி மணியன் அறிவித்தார். ஆனால், 67 ஆயிரம் ரூபாய் சேர்ந்தது. அந்தத் தொகை விகடன் மூலமாக கடலூர் மக்களுக்குப் போய்ச் சேரட்டும் என்று முடிவு எடுத்த தமிழருவி மணியன், கடந்த 16-ம் தேதி காலையில் நமது அலுவலகத்துக்கு வந்தார். அவருடன், இயக்குநர் தங்கர்பச்சானும் வந்திருந்தார். ”இது உழைக்கும் மக்கள் கொடுத்த பணம். ஏழைகளைக் காப்பாற்ற ஏழைகளால்தான் முடியும் என்பதை உணர்ந்து கொடுத்த பணம். இதைப் பார்த்து வசதி உள்ளவர்களும் வழங்கினால், அதுவே இந்த 67 ஆயிரத்தின் பயன்பாடாக இருக்கும்” என்றார் தமிழருவி மணியன் நெகிழ்ச்சியாக!
‘தானே’ புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கை கொடுப்போம், துயர் துடைப்போம் என்று கடந்த இதழில் செய்தி வெளியிட்டு இருந்தோம். புதுச்சேரி தொடங்கி நாகை வரை புயல் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட நம் சொந்தங்களைத் துயரில் இருந்து மீட்டு எடுக்க, எல்லோரின் கருணைமிக்க ஒத்துழைப்பை ‘விகடன்’ கேட்டு இருந்தது. அதைத் தொடர்ந்து, சென்னை கிழக்கு ரோட்டரி சங்கத்தின் ‘டைரக்டர் ஆப் நியூஜெனரேஷன்’ ரகுராமன் நம்மைத் தொடர்புகொண்டார். தங்கள் சங்கத்தின் சார்பில், ‘பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவத் தயாராக இருப்பதாக’ கூறினார். அதைத் தொடர்ந்து விகடன், அதற்கான முயற்சியில் இறங்கியது. இந்த வாரக் கடைசியில் மருத்துவ முகாம் நடைபெறும். செட்டிநாடு ஹெல்த் சிட்டியைச் சேர்ந்த மன நலம், பொதுமருத்துவம், பல், காது – மூக்கு – தொண்டை என பல சிறப்பு மருத்துவப் பிரிவுகளைச் சேர்ந்த 20 மருத்துவர்கள், 30 மருத்துவப் பணியாளர்கள் பங்கேற்று மருத்துவ சிகிச்சை அளிக்க உள்ளனர்.
அன்பார்ந்த வாசகப் பெருமக்களே!
‘தானே’ புயலின் கோரத் தாண்டவம் ஏற்படுத்திய அழிவுகளில் இருந்து கடலூர், புதுச்சேரி மக்களை மீட்டு எடுப்பதற்கான துயர் துடைப்புத் திட்டத்துக்கு உதவிடும் வகையில், முதல் பங்களிப்பாக விகடன் குழும நிறுவனங்கள் சார்பாக
10 லட்சம் அளிக்க முன்வந்துள்ளதை அறிவீர்கள். அன்பு வாசகர்களே… நீங்களும் அவரவரால் இயன்ற நிதியை அனுப்பத் தொடங்கிவிட்டீர்கள். ‘எந்தப் பெயருக்கு நிதி அனுப்ப வேண்டும்? எப்படி அனுப்ப வேண்டும்?’ என்று தொடர்கிறது உங்களின் மனிதநேயம் மிக்க விசாரணை.
நெஞ்சில் ஈரம் உள்ள அனைவரும் நம் தமிழ்ச் சொந்தங்களின் துயர் துடைக்க முன்வரலாம். Vasan Charitable Trust என்ற எங்களின் அறக்கட்டளையின் பெயருக்கு செக் அல்லது டி.டி. எடுத்து அனுப்பலாம். நிதியை நெட் பேங்கிங் மூலம் டிரான்ஸ்ஃபர் செய்ய விரும்புவோர், எங்களின் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி சேமிப்பு கணக்கு எண் 000901003381 (ஆர்.டி.ஜி.எஸ்./ ஐ.எஃப்.எஸ்.சி. கோட்: ICIC 0000009 , நுங்கம்பாக்கம் கிளை, சென்னை-600034) வழியாக அனுப்பலாம்.
வெளிநாட்டு வாசகர்கள் எங்களின் இந்தியன் வங்கி கரன்ட் அக்கவுன்ட் எண் 443380918-க்கு (எத்திராஜ் சாலை கிளை, சென்னை-600008) அனுப்பலாம். நேரில் வந்து நிதி அளிக்க விரும்புவோர், விகடனின் அண்ணா சாலை அலுவலகத்தில் அளித்து உரிய ரசீதை உடனே பெற்றுக்கொள்ளலாம்.
Vasan Charitable Trust பெயரில் நிதி உதவி அளிப்பவர்களுக்கு, 1961 வருமான வரிச் சட்டம் 80-ஜி பிரிவின்படி (உத்தரவு எண்: DIT(E)NO.2(749)/03-04 dt. 10-05-2010) வருமான வரி விலக்கு கிடைக்கும்.
நேயமிக்க வாசகர்களே… நீங்கள் அனுப்பும் வழிமுறை எதுவாக இருப்பினும், எதிர்பக்கம் நாங்கள் அளித்து உள்ள படிவத்தையும் தயவுசெய்து பூர்த்திசெய்து, ‘தானே துயர் துடைப்புத் திட்டம்’ என்று உறையின் மீது மறவாமல் குறிப்பிட்டு ‘ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை – 600002’ என்ற முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டுகிறோம்.
உங்களுக்கான ரசீதுகளை அனுப்பிவைப்பதோடு, துயர் துடைப்புத் திட்டத்தில் தொடரும் முன்னேற்றங்களை விகடன் இணையதளத்தின் மூலம் தொடர்ந்து பகிர்ந்துகொள்ளத் தயாராக இருக்கிறோம். www.vikatan.com/thane என்ற இணைய முகவரியில், இது தொடர்பான பூர்வாங்க விவரங்களை இப்போதே நீங்கள் காணலாம். நிதி அளித்துவரும் நல்ல மனங்களின் பட்டியலும், நமது பல்வேறு நிவாரண நடவடிக்கைக்கான செலவுக் கணக்கும் அந்த இணைய முகவரியின் வாயிலாக அடுத்தடுத்து உங்கள் முன் சமர்ப்பிக்கப்படும்.
வாருங்கள் வாசகர்களே… ‘தானே’ துயரை நாமும் துடைப்போம்!
– ஆசிரியர்