தானே புயலால் சின்னபின்னமாகிப் போன கடலூர் பற்றி குறும்படம் தயாரித்துள்ளதாக இயக்குநர் தங்கர்பச்சான் கூறினார்.
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவரான தங்கர் பச்சான், தானே புயல் பாதிப்பு குறித்து மிகுந்த அக்கறை காட்டி வருகிறார்.
இந்தப் பகுதி மக்களின் பிரச்சினைகளைப் பற்றி அடிக்கடி மீடியாவில் பேசிவரும் அவர், நேற்று மீண்டும் நிருபர்களைச் சந்தித்தார். அவருடன் காந்தி மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியனும் இருந்தார்.
தங்கர் பச்சான் கூறுகையில், “கடலூர், விழுப்புரம் பகுதியில் ‘தானே’ புயலால் ஏற்பட்டது பாதிப்பு அல்ல, பேரழிவு. அந்த பகுதி மக்களுடன் 3 நாட்கள் தங்கியிருந்து, அவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சேகரித்து வந்திருக்கிறேன். அவர்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகள், விவசாய அழிவுகளை குறும்படமாக பதிவு செய்திருக்கிறேன்.
எல்லாவற்றுக்கும் சாட்சியாக இந்த படம் அமையும். அரசியல்வாதிகளுக்கும், தமிழக அரசுக்கும் பல கேள்விகளை எழுப்பும் விதமாக இந்த படம் அமையும். கடலூர் பகுதியில் நிகழ்ந்த இந்த கோர சம்பவம் குறித்து முதல்வரிடம் அதிகாரிகள் சரிவர சொல்லவில்லை என்பது தான் உண்மை.
குடிநீர், பால், மின்சாரம் எதுவும் அந்த மக்களுக்கு இன்னும்கூட கிடைக்கவில்லை. ரேஷன் பொருட்கள் கடையும் இல்லை. ஆனால் டாஸ்மாக் கடைகள் மட்டும் 100 சதவீதம் திறந்துள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை.
கடலூர், விழுப்புரம் பகுதியில் சிறப்பு செயலாக்கத்துறையை அமைத்து, இந்த பகுதி மக்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒவ்வொரு 10 ஆண்டுக்கு ஒருமுறையும் இதை செயல்படுத்தி, மக்களின் நிலையை கண்காணிக்க வேண்டும். மக்களின் வாழ்வாதாரம் உயரும் வரை சலுகை விலையில் மக்களுக்கு பொருட்கள் வழங்க வேண்டும். டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றார்.
தமிழருவி மணியன்
காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் கூறுகையில், “கடலூர் மக்கள் வாழ்வுரிமை இழந்து வீதியில் நிற்கிறார்கள். தமிழக அரசே இதற்கான நிவாரண தொகை முழுவதுமாக அளித்து சரி செய்ய முடியாது. சுனாமி ஏற்பட்டபோது ஒட்டுமொத்த தமிழகமே ஆதரவு கரம் நீட்டியது. ஆனால் இப்போது அந்த சூழல் இல்லை.
கோடி கோடியாய் சம்பாதிக்கும் நடிகர்கள் எந்தவொரு உதவித்தொகையும் வழங்கவில்லை. நடிகர்கள் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொழில் நிறுவனங்களை தொடங்கி, அந்த பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்க வேண்டும். மேல்மருவத்தூர் மடாதிபதி கூட பாதிக்கப்பட்ட பகுதியில் தான் வசிக்கிறார். ஆனால் அவர் எந்த உதவியும் செய்யவில்லை.
ரூ.5 ஆயிரம் கோடி தேவை
வட மாவட்டத்தில் அரசியல் செய்யும் பா.ம.க. கூட புயல் பாதித்த பகுதிகளுக்கு சென்று உதவவில்லை. எல்லா தரப்பு மக்களும் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும்.
மத்திய அரசு தற்போது அளித்திருக்கும் நிவாரணம் போதாது. ரூ.5 ஆயிரம் கோடி அளிக்க வேண்டும்,” என்றார்.