திருமுருகன் காந்தி உள்ளிட்ட நான்கு பேரை எந்த விதமான முன் நிபந்தனையுமின்றி விடுவிக்கப்பட வேண்டும். தமிழருவி மணியன் அறிக்கை.
உலக நாடுகளின் சதி காரணமாக, முள்ளி வாய்க்காலில் உயிரிழந்த தொப்புள் கொடி உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு, கடந்த ஏழு ஆண்டுகளாக, அமைதியான முறையில் காந்திய வழியில் நடந்தேறி வந்திருக்கிறது. ஜல்லிக்கட்டு எழுச்சியால் கலக்கமுற்ற ஆளுங்கட்சி எந்த ஆண்டும் இல்லாத புதுமையாய் இந்த ஆண்டு நினைவேந்தலை நடத்த அனுமதி மறுத்ததோடு,பல செயற்பாட்டாளர்களையும் கைது செய்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் திருமுருகன் காந்தி உள்ளிட்ட நான்கு செயற்பாட்டாளர்கள் மீது குண்டர் சட்டத்தை ஏவியிருக்கிறது. இதனை வன்மையாகக் கண்டிப்பதோடு கைது செய்யப்பட்டவர்கள் எந்த விதமான முன் நிபந்தனையுமின்றி விடுவிக்கப்பட வேண்டும் என்றும் காந்திய மக்கள் இயக்கம் வலியுறுத்துகிறது.
எந்த அரசும் அடக்குமுறையின் மூலம் இன உணர்வையும் ஜனநாயக உரிமைகளையும் முற்றாகப் பறித்துவிட முடியுமென்று நினைத்தால் தனக்கான வீழ்ச்சியின் பள்ளத்தை தானே வெட்டிக் கொள்கிறது என்பது தான் கடந்த கால வரலாறு. ஏற்கனவே வீழ்ச்சிப் பாதையில் விரைந்து கொண்டிருக்கும் தமிழக அரசு, உண்மையான இன உணர்வாளர்களை ஒடுக்கும் செயலில் ஈடுபடுவதன் மூலம் தன் வீழ்ச்சியின் வேகத்தை தானே அதிகரித்துக் கொள்கிறது என்பதை காந்திய மக்கள் இயக்கம் சுட்டிக் காட்ட விரும்புகிறது.
–தமிழருவி மணியன்.
2 Comments
Sankar
அய்யா உங்களது அபிமானி மற்றும் ரௌத்திரம் சந்தாதாரர் நான். பெருந்தலைவர் காமராஜரின் தொண்டன். உங்கள் மீது பெருமதிப்பு கொண்ட எனக்கு, உங்களது நிலைப்பாடு வருத்தம் அழிகிறது.
தேச ஒற்றுமை எல்லாவற்றிலும் பெரியது. பிர்வினைவாத சக்திகள் முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும். இப்படி தலைவர் காமராஜர் தொடர்ந்து பேசி இருக்கிறார் என்பது நீங்கள் அறியாதது அல்ல.
இந்த திருமுருகன் காந்தி என்பவர் யார்? எத்தகைய வெறுப்பு கருத்துக்களை தொடர்ந்து எழுதி வருகிறார் என்பதை அவரது facebook பக்கத்தை பார்த்தாலே தெரிந்து கொள்ளலாம். . “எனது நாடு தமிழ் நாடு. இந்திய நாயே வெளியேறு” என்பது அவரது முழக்கங்களில் நாகரீகமான ஒரு முழக்கம். கொஞ்சம் யோசித்து பாருங்கள். இதே போன்ற ஒரு சொற்றொடரை வட இந்தியாவில் இருக்கும் நம் தமிழ் இனத்தவரை பற்றி யாரோ சொன்னால் நமக்கு எப்படி இருக்கும்? உங்களது அறிக்கையில் திருமுருகனின் செயல்பாடுகளைபற்றி ஒரு வரி கூட இல்லையே?
அவர் அரசால் தடை செய்யப்பட்ட மெரினாவில் அனுமதி இன்றி ஏன் போராட்டம் நடத்த வேண்டும்? முறையான அனுமதி பெற்று , வழக்கம் போல வள்ளுவர் கோட்டம் போன்ற இடங்களில் நடத்தாமல் மெரினாவில் நடத்திய முயல்வது உள் நோக்கம் கொண்டது.
இவர் போன்ற மனிதர்களின்வெ றுப்பு பிரசாரங்களின் நோக்கமே , ஒரு மற்ற மாநிலதவரிடம் இருந்து வினையை தூண்டி , அதை வைத்து பரப்புரை செய்து, தாய்த் திரு நாட்டில் இருந்து தமிழகத்தை தனிமைப் படுத்துவது தான். இவர்கள் மீது எடுக்கும் நடவடிக்கையை எதிர்ப்பது என்பது, நாம் ஆராதிக்கும் மகாகவி பாரதி, பெருந்தலைவர் போன்றோரின் கனவை சிதைக்கும் .
.இது போன்ற சக்திகள் தமிழ் மக்கள் உணர்ச்சியை 60களில் தூண்டியதின் விளைவு தான் நமது மாநிலத்தின் 50 ஆண்டு கால அவல நிலைக்கும் காரணம். , நீங்கள் இதற்கு வக்காலத்து வாங்கக் கூடாது என்பது என் தாழ்மையான வேண்டுகோள்
gmiyouthwing@gmail.com
இந்திய இறையாண்மைக்குள் இருந்து கொண்டே மாநில நலன்களில் விட்டுக் கொடுக்காமல் இருப்பதே நம் நிலைப்பாடு, தடையை மீறி செயல்பட்டார்
என்றாலும், திருமுருகன் காந்தியைக் குண்டர் சட்டத்தில் கைது செய்தது அவருக்கு எதிரான அடக்குமுறையாக மட்டும் நாம் நினைக்கவில்லை. வீதிக்கு வெளியே வந்து அறநெறியில் போராடுபவர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாகவே நாம் பார்க்கிறோம். திருமுருகன் காந்தியை குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், அவரது அணுகுமுறைகள் அத்தனைக்கும் நாம் ஆதரவு அளித்ததாகக் கருத வேண்டியதில்லை.