நீதியரசர்களும், வழக்குரைஞர்களும் நல்ல தீர்வினை எட்டிட வேண்டும் – காந்திய மக்கள் இயக்கம் வலியுறுத்தல்.
இன்று (15 08 16) காட்சி & அச்சு ஊடகங்களுக்கு அனுப்பப்பட்ட அறிக்கை
நீதிமன்ற வளாகங்களில் நடைபெறும்சிலசெயல்கள், வழக்குரைஞர்கள்மாண்பையும், நீதிமன்றத்தின் பெருமையை குலைத்துவிடும் அளவுக்கு இருப்பது கவலை அளிக்கிறது. அவ்வாறு வரம்பு மீறும் வழக்கறிஞர்கள் மீது பார் கௌன்சில் உரிய நடவடிக்கைள் எடுக்காததால், அவற்றை மேன்மை தங்கிய நீதியரசர்கள் தங்கள் கையில் எடுத்தனர் என்று கூறப்படுகிறது. இது பழி வாங்கும் நடவடிக்கைக்கு வித்திடும் என்று கூறி வழக்குரைஞர்கள் போராடி வருகின்றனர். இந்தப் போராட்டத்தினால், கடந்த 65 தினங்களாக நீதிமன்ற அலுவல்கள் முடங்கிக் கிடக்கின்றன. கால தாமதமாகவே கிடைத்து வரும் நீதி, மேலும் தாமதப்படுவது கண்டு மக்கள் செய்வதறியாது திகைத்து நிற்கிறார்கள்.
இந்நிலையில் டெல்லியில் நடந்த பேச்சு வார்த்தைகளுக்கு பின்னர் வழக்குரைஞர்கள் நாள்தோறும் நடத்தி வந்த போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறதென்றும், நீதிமன்றப் புறக்கணிப்பு தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்தப் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு எட்டப்படும் என்று காந்திய மக்கள் இயக்கம் நம்புகிறது.
போராடும் வழக்குரைஞர்களின் பிரதிநிதிகளுடன் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்திட நீதியரசர்களை கேட்டுக் கொள்ளும் அதே வேளையில், வழக்குரைஞர்களும் போராட்டப் பாதையை விட்டு விலகி, ஒரு நல்ல தீர்வினை எட்டிட உறுதுணையாக இருக்க வேண்டுமென காந்திய மக்கள் இயக்கம் கேட்டுக் கொள்கிறது.