கோவை: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு ஆதரவு தரப்போவதாக காந்திய மக்கள் இயக்கத்தின் நிறுவனர் தமிழருவி மணியன் கூறியுள்ளார். “கோட்சேவுக்கு சிலை வைக்கும் ஆட்களை சுற்றிலும் நிரப்பி வைத்துள்ள கட்சி பாஜக” என்றும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
கோவையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அமெரிக்காவுடன் மோடி அரசு செய்துள்ள அணுசக்தி ஒப்பந்தம் வரவேற்கத்தக்கது. இருந்தபோதும், அணு விபத்து மற்றும் பாதுகாப்பு தொடர்பான மக்களின் சந்தேகங்களுக்கு மோடி அரசு முதலில் விளக்கம் அளிக்க வேண்டும் என்றார். கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்த கையெழுத்தின் போது பாதுகாப்பு காரணங்களைக் கூறி பாஜக எதிர்த்துள்ளது. தற்போது, அவர்களே ஒப்பந்தத்தை ஆதரித்து தடைகளை நீக்கியுள்ளனர். எனவே, அது குறித்த காரணங்களை விளக்க வேண்டியது தார்மீகக் கடமை என்று கூறினார்.
பொது சிவில் சட்டம்
மத்திய அரசின் பொது சிவில் சட்டம் சமரசத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளதா எனவும் கேள்வி எழுகிறது. இது குறித்து மோடி அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறிய அவர், காப்பீட்டுத்துறையில் அன்னிய நேரடி முதலீடு, நிலம் கையகப்படுத்தும் விஷயம் ஆகியவற்றை நிறைவேற்றுவதற்கு அவசரச் சட்டம் பயன்படுத்தப்படுகிறது என்றார். நாடாளுமன்றத்தில் விவாதித்து செயல்படுத்த வேண்டிய சட்டத்திற்கு ஏன் இவ்வளவு வேகம் காட்ட வேண்டும். இந்த அவசரச் சட்டம் தேவையின்றி பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.
இலங்கை தமிழர்கள்
இலங்கை அகதிகளை திருப்பி அனுப்பும் விஷயத்தில் அவசரம் காட்டக் கூடாது. பொறுமையாக இந்த விஷயத்தை கையாள வேண்டும். இந்தியாவை இந்துக்கள் நாடாகவும், இந்திய அரசை இந்துக்கள் அரசாகவும் மாற்ற வேண்டும் என ஆர்.எஸ்.எஸ். துடித்துக் கொண்டிருக்கிறது.
தூக்கி எறியப்படுவார்கள்
ஆர்.எஸ்.எஸ்.அமைப்புடன் இணைந்து பாஜகவும் செயல்படுத்துவதற்கான முயற்சியை எடுத்தால், எவ்வளவு சீக்கிரத்தில் ஆட்சிக்கு வந்தார்களோ, அதே வேகத்தில் ஆட்சியில் இருந்து மக்களால் தூக்கி எறியப்பட்டு, வெளியேற நேரிடும்.
மதப்பிரசாரம்
ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருந்து கொண்டு, உமா சங்கர் மதப் பிரசாரத்தில் ஈடுபடுவது ஆரோக்கியமானது கிடையாது. மதப்பிரசாரத்தில் ஈடுபடுவதானால் ஓய்வு பெற்ற பின் ஈடுபடலாம். இல்லையெனில், வேலையை விட்டுவிட்டுச் சென்று ஈடுபடலாம்.
ஜெயலலிதாவின் படம்
தமிழகத்தில் நடைபெற்ற குடியரசு விழாவில் முன்னாள் முதல்வர் புகைப்படத்தை வைத்தது தவறு. தற்போதைய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சுதந்திரமாக செயல்பட வேண்டும். மின்பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாணவர்களுக்கு மது
மது விலக்கை கொண்டு வருவதற்கான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். குறிப்பாக, கரூரில் பள்ளி மாணவர்களுக்கு மது விற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மார்க்சிஸ்ட் கட்சிக்கு
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஆதரவு தர முடிவு செய்துள்ளோம். ஆனால், பிரசாரத்தில் ஈடுபடப்போவது இல்லை. அதிமுக பொதுச் செயலாளர், ஊழல் குற்றத்துக்காக தண்டிக்கப்பட்டவர். திமுக, ஊழல் நிறைந்த கட்சி. பாஜக, கோட்சேவுக்கு சிலை வைக்கும் ஆட்களை சுற்றிலும் நிரப்பி வைத்துள்ள கட்சி. ஆகையால், மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஆதரவு அளிக்க முடிவெடுத்துள்ளோம் என்றும் அவர் கூறினார்.
Source : Thatstamil