காந்திய மக்கள் இயக்கம் கடந்த 4 ஆண்டுகளுக்கு மேல் இரண்டு திராவிடக் கட்சிகளின் ஆட்சிகளில் நடந்தேறிய ஊழல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், காலம் காலமாக வளர்த்தெடுக்கப்பட்ட தமிழ் இனத்தின் பண்பாட்டுப் பாரம்பரிய விழுமியங்களை மீட்டெடுக்கவும் அரசியல் களத்தில் புனிதம் செறிந்த ஒரு வேள்வியை நடத்திக்கொண்டிருக்கிறது.
மத்தியில் பல்வேறு ஊழல்களுக்கு உற்சவம் நடத்திய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை ஆட்சிப் பீடத்தில் இருந்து அகற்றவும், தமிழகத்தில் இரண்டு திராவிட கட்சிகளின் பிடியிலிருந்தும் மக்களை விடுவிக்கவும், மாற்று அரசியலை இந்த மண்ணில் வளர்த்தெடுக்கவும் காந்திய மக்கள் இயக்கம் தேசிய ஜனநாயக கூட்டணி அமைவதில் தன்னுடைய பங்களிப்பைத் தந்தது.
சிறுபான்மை மக்களின் அவநம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும் வகையில் ராமர் கோயில் விவகாரம், பொது சிவில் சட்டம் , காஷ்மீர் மாநிலத்திற்குரிய விஷேச அந்தஸ்து ஆகியவற்றில் முரண்பட்ட கருத்துக்களை விவாதப் பொருளாக வைக்கலாகாது என்றும் ஈழத்தமிழர்களுக்கான அரசியல் தீர்வைப் பெற்றுத் தருவதில் இலங்கை அரசின் மீது கடுமையான நிர்பந்தங்களை விதிக்க வேண்டும் என்றும் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு நிரந்தரமான தீர்வு காண வேண்டும் என்றும் மத்திய பா.ஜ.க., தலைவர்களிடமும் மாநில பா.ஜ.க., தலைவர்களிடமும் நிபந்தனைகளை முன்வைத்து, அவற்றின் அடிப்படையில் தான் தமிழகத்தில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி உருவாக்கப்பட்டது. ஆனால் மோடியின் அரசு பொறுப்பேற்று 100 நாட்கள் நடந்து முடிந்த நிலையில் இந்த நிபந்தனைகள் அனைத்தும் காற்றில் பறக்க விடப்பட்டன . தமிழகத்து மீனவர்கள் இலங்கை அரசின் கொடுமைகளுக்கு உள்ளாவது முற்றுப் பெறாத தொடர்கதை ஆகிவிட்டது.
ஈழத்தமிழர்களுக்கு 13வது அரசியல் சட்ட திருத்தத்தின்படி மிகக் குறைந்த உரிமைகளைக் கூட இலங்கை அரசிடமிருந்து பெற்று தரும் முயற்சியில் மோடியின் அரசு ஒரு அங்குலம்கூட முன்னேறவில்லை. சுப்பிரமணியன் சாமி தமிழர் நலனுக்கு எதிராகவும் தமிழக மீனவர் நலனுக்கு எதிராகவும் தொடர்ந்து செயற்படுவதை மோடியின் அரசு மௌனப் பார்வையாளராகப் பார்த்துக் கொண்டிருக்கிறது.
சமூக நல்லிணக்கத்தையும் சமயங்களுக்கிடையே ஒற்றுமையையும் பேணிப் பாதுகாப்பதில் பா.ஜ.க.,விற்கு உண்மையான ஈடுபாடு இருப்பதாகத் தெரியவில்லை. தமிழ் இன நலனுக்கு எதிராக காங்கிரசை விட மிக மோசமான அணுகுமுறையையே பா.ஜ. க., அரசு பின்பற்றுகிறது. தமிழ் மண்ணின் ஓர் அங்கமான கச்சத்தீவை மீட்டெடுப்பதற்கு மாறாக காங்கிரஸ் வழியிலேயே நீதி மன்றத்தில் வாக்குமூலம் வழங்குகிறது. எந்த வகையிலும் தமிழ் இனத்தின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப செயற்படாத தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் காந்திய மக்கள் இயக்கத்திற்கும் ஒரு தொடர்பும் இல்லை என்று தமிழக மக்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மதத்தை மையமாக வைத்து அரசியல் ஆதாயம் தேடக்கூடிய கட்சிகளையும் , ஜாதி உணர்வை வெறியாக மாற்றி அரசியல் நடத்தும் கட்சிகளையும் தமிழகத்தில் பொதுவாழ்வை ஊழல் மலிந்த சுயநலவாதிகளின் வேட்டைக் காடாக மாற்றிச் சீரழித்து விட்ட இரண்டு திராவிடக் கட்சிகளையும் விட்டு விலகி நிற்பவர்களோடு மட்டுமே காந்திய மக்கள் இயக்கம் இனி வரும் காலங்களில் இணைந்து செயற்படும். அப்படி ஒரு சூழ்நிலை அமையவில்லை எனில் காந்திய மக்கள் இயக்கம் வெற்றி தோல்விகளைப் பற்றி எள்ளளவும் கவலைப்படாமல் மக்கள் நலன் சார்ந்து புனிதம் செறிந்த அரசியல் வேள்வியைத் தன்னந்தனியாக நடத்தவும் தயாராக இருக்கிறது. அதற்கான முதல் முயற்சி தான் கோவை மாநகராட்சி மேயர் தேர்தலிலும் திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி பேரூராட்சி தலைவர் தேர்தலிலும் காந்திய மக்கள் இயக்கம் தனியாகக் களம் காண்கின்றது.
நேர்மையும் நல்லொழுக்கமும் ஊழலற்ற அரசியல் தூய்மையும் மதுவின் வாசனையற்ற சூழலும் பல்கிப் பெருக வேண்டும் என்று நினைக்கும் வாக்காளர்களின் ஆதரவை மட்டும் காந்திய மக்கள் இயக்கம் எதிர்ப்பார்க்கிறது.
One Comment
R.Boopathy
AIADMK is comparatively better than DMK. Karunanithi is a dangerous person. Jeyalalitha is less corruptive when compared with Karunanithi. VAIKO and is opportunist and Ramadoss is selfish. If they aligns with DMK, it is very dangerous to Tamilnadu. Jeyalalitha is fighting for Tamil’s issues like Katchath theevu, Mullaip periyar , Karnataka water etc. At any situation , she never compromise with central parties like Congress and BJP. In 2016 election, the proposed DMK’s Mega Alliance efforts should be defeated at any cost and a alliance of ADMK, GK Vasan, Left parties, Viduthalai Siruththaikal is to be formed to save Tamilnadu from Karunanidhi and BJP.