பார்வையற்றவர்களின் வாழ்க்கைப் போராட்டம் பாமரருக்கும் எளிதில் புரிந்துவிடும். ஆனால் தமிழக அரசுக்கு எப்போது புரியப்போகிறது ?.
– தமிழருவி மணியன் அறிக்கை
பார்வையற்றவர்களின் கோரிக்கைகளை மனித நேயத்துடன் தமிழக அரசு தாமதமின்றி நிறைவேற்றிட முன்வரவேண்டும். சாதாரண மனிதர்களின் போராட்டங்களைப் போன்று காவல்துறை, பார்வையற்றவர்களின் போராட்டத்தை ஒடுக்குவதற்கு கடுமையான அணுகுமுறையை மேற்கொள்ளக் கூடாது. ஆயிரம் தடைகளைக் கடந்து தங்கள் உயரிய அறிவுத் திறனால் கல்வித்துறையில் பட்டங்களைப் பெற்றிருக்கும் அவர்களுடைய ஆற்றலை அங்கீகரித்து, தமிழக அரசு அவர்களுக்குரிய வேலை வாய்ப்புகளை உடனடியாக உருவாக்கிப் பணியில் அமர்த்த வேண்டும்.
“நாங்கள் பார்வையற்றவர்கள் என்ற நிலையைப் பயன்படுத்திப் பிச்சை கேட்கவில்லை. உழைப்பதற்குத் தான் அரசிடம் உரிய வாய்ப்பு கேட்கிறோம்”, என்ற விழியற்றவர்களின் சோகம் செறிந்த குரல் அரசின் செவிகளில் இன்று வரை சென்று சேராமல் இருப்பது கடும் கண்டனத்திற்குரியது. முதல்வர் பன்னீர்செல்வம் பார்வையற்றவர்களைப் பரிவுடன் அழைத்துப் பேசி, அவர்களது கோரிக்கைகளை அன்புடன் நிறைவேற்றிப் போராட்டத்திற்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
“ஐந்து நிமிடங்கள் விழிகளை மூடியபடி வீதியில் நம்மால் தனியாக நடக்கக் கூடுமா?” என்று யோசிக்கும் வேளையில் பார்வையற்றவர்களின் வாழ்க்கைப் போராட்டம் பாமரருக்கும் எளிதில் புரிந்துவிடும். ஆனால் தமிழக அரசுக்கு எப்போது புரியப்போகிறது ?. ‘செவிட்டு அரசு தான் ஜனநாயகத்திற்கு எதிரான சக்தி’ என்ற மூதறிஞர் இராஜாஜியின் கூற்றுக்குச் சாட்சியாக இந்த அரசு இருக்கப் போகிறதா ?