நெல்லை: டாஸ்மாக் கடைகளில் பீ்ர் விலை ரூ.5 முதல் ரூ.10 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்நது பிராந்தி, விஸ்கி விலையும் 5 சதவீதம் வரை உயர்த்தப்பட உள்ளது.
தமிழகத்தில் தற்போது 6,804 டாஸ்மாக் கடைகள் உள்ளன. அதில் 4,056 கடைகளில் பார்கள் உள்ளன. கடந்த நிதியாண்டில் டாஸ்மாக் நிறுவனம் ரூ.18,000 கோடி வருவாய் ஈட்டியது. இந்த நிதியாண்டில் டாஸ்மாக் மூலம் கிடைக்கும் வருவாயை மேலும் அதிகரிக்க டாஸ்மாக் நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் டாஸ்மாக் நிறுவனம் நேற்று பீர் பாட்டில்களுக்கு ரூ.5 முதல் ரூ.10 வரை விலையை உயர்த்தியது.
இந்த நிதியாண்டில் சுமார் 384 லட்சம் பீர் கேஸ்கள் விற்கப்படும் என்றும் இதன் மூலம் சுமார் ரூ.300 கோடிக்கு வருவாய் கூடுதலாக கிடைக்கும் என்றும் டாஸ்மாக் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் பீர் விலை உயர்வை தொடர்ந்து பிராந்தி, விஸ்கி விலையையும் 5 சதவீதம் உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு பாட்டிலுக்கும் ரூ.5 முதல் 10 வரை உயர்த்தி விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் மேலும் பல கோடி ரூபாய் வருவாய் ஈட்ட அரசு திட்டமிட்டுள்ளது. பீர் விலை உயர்வால் புலம்பி வரும் குடிமகன்கள் பிராந்தி, விஸ்கி விலை உயரும் தகவல் அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Nandri : thatstamil.com