“பூரண மதுவிலக்கு அமல்படுத்த முதியவர் சைக்கிள் பிரச்சார பயணம்
“பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும், லஞ்ச, ஊழலற்ற ஆட்சி அமையவேண்டும், தேசிய நதிகளை இணைக்க வேண்டும்’ என்பது உள்பட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி, முதியவர் ஒருவர், ஆத்தூரில், சைக்…கிள் விழிப்புணர்வு பிரச்சாரத்தை துவக்கினார்.
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே, பழனியாபுரி கிராமத்தை சேர்ந்தவர் பழனிமுத்து, 57. சமூக ஆர்வலரான இவர், திருமணம் செய்து கொள்ளாமல், பல்வேறு சேவைப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி, அரசு, உடனடியாக மதுவை தடை செய்து, பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும். இயற்கை விவசாயத்தை ஊக்குவித்து, இடைத்தரகர்கள் இல்லாமல், விவசாயிகளே, விளை பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்யும் உரிமை அளிக்க வேண்டும்.
இந்திய நதிகளான, கங்கை, காவிரியை இணைக்க வேண்டும். விவசாயத்தை மேம்படுத்த, மத்திய மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று காலை, 11 மணியளவில், ஆத்தூர் காந்தி சிலையில் இருந்து, பெரம்பலூர் வரை, சைக்கிளில், விழிப்புணர்வு பிரச்சார பயணத்தை துவக்கினார்.
தொடர்ந்து, ஆத்தூர், நரசிங்கபுரம், வாழப்பாடி, சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், பெரம்பலூர் வழியாக, வரும், 24ம் தேதி, ஆத்தூரில் பயணத்தை முடித்துக் கொள்கிறார்.
விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்ட பழனிமுத்து கூறியதாவது:
நதிநீர் இணைக்க வேண்டும், விளை பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்தல், பூரண மதுவிலக்கு அமல்படுத்தல் போன்ற அத்தியாவசிய கோரிக்கைகளை வலியுறுத்தி, சைக்கிளில் பிரச்சாரம் துவக்கியுள்ளேன். தினமும், 50 கி.மீ., தூரம் சென்று, 100 பேரிடம் விழிப்புணர்வு நோட்டீஸ்கள் வழங்கியபடி, 750 கி.மீ., தூரம் கடந்து சென்று, 5,000 மக்களிடம், நோட்டீஸ் வழங்க உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.