தடதடக்கும் தமிழருவி மணியன்
ஜூனியர் விகடன் – 05 08 2015
‘அடுத்த முதல்வராக கலைஞர் கருணாநிதி வந்தாலும் அன்புமணி ராமதாஸ் முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்தாலும் ‘பூரண மதுவிலக்கு படிப்படியாக நடைமுறைப் படுத்தப்படும்’ என்றுதான் முதல் கையெழுத்தைப் போடுவார்களே தவிர, ‘இன்று முதல் பூரண மதுவிலக்கு தமிழகத்தில் நடைமுறைக்கு வருகிறது’ என்று கையெழுத்திட மாட்டார்கள். காரணம், பூரண மதுவிலக்கு உடனடி சாத்தியம் கிடையாது என்பது அவர்களுக்கும் தெரியும்’ என்று அதிரடியாக ஆரம்பிக்கிறார் காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன்.
‘டாஸ்மாக் கடைகளை மூடினால் ஏற்படும் இழப்பை ஈடுகட்ட மாற்றுத் திட்டம் வைத்திருப்பதாகச் சொல்கிறீர்கள். அந்த மாற்றுத் திட்டம் என்ன?’ என்று ஒரே கேள்விதான் கேட்டோம்.
இதோ தமிழருவி மணியன் சொல்லும் அந்த மாற்றுத்திட்டம்…
‘அரசுக்கு ஏற்படும் வருவாய் பாதிப்புக்கு என்னால் வழி சொல்ல முடியும். ஆனால், தனி நபருக்கு ஏற்படும் வருவாய் பாதிப்பை சரி செய்ய எனக்கு வழி தெரியாது. தமிழ்நாட்டில் மதுவிலக்கை படிப்படியாகத்தான் கொண்டுவர வேண்டும்.
ஒரு கெட்ட பழக்கத்துக்கு உடனே ஆட்படுவது எளிது. ஆனால், அதில் இருந்து விடுபடுவது அரிது. தமிழகத்தில் மதுக்கடைகளைத் திறந்து, சுமார் ஒரு கோடிக்கும் அதிகமானோரை குடியில் மூழ்க வைத்திருக்கிறார்கள். இவர்களை படிப்படியாகத்தான் மீட்க முடியும். கேரளாவில் உம்மன் சாண்டி சொல்லி இருப்பது யதார்த்தமானது. ‘கேரள மக்கள் குடிக்கு அடிமையாகிவிட்டார்கள். மக்கள் நலன்தான் எங்களுக்கு முக்கியம். இதனால், மதுக் கடைகளை படிப்படியாக மூடுகிறோம். 10 ஆண்டுகால இடைவெளியில் இந்த இலக்கை அடைவோம்’ என்று சொல்லியிருக்கிறார். இதுதான் நடைமுறை சாத்தியமானது. தமிழகத்தில் 5 ஆண்டுகளுக்குள் அனைத்துக் கடைகளையும் படிப்படியாக மூடலாம். ஆண்டுக்கு ரூ.30,000 கோடி இழப்பு என்பது மிகவும் பிரமிப்பாகத்தான் இருக்கும். பெரிய நிதிச் சுமையை மெள்ள மெள்ளத் தான் சரி செய்ய முடியும்.
இந்தியாவில் அதிகமாக நகரமயம் ஆக்கப்பட்ட மாநிலங்களில் தமிழ்நாடுதான் முதன்மையானது. தமிழக நகரங்களில் நில மதிப்பு அதிகம். கறுப்புப் பணத்தின் ஊற்றுக் கண்ணாக ரியல் எஸ்டேட் தொழில் உள்ளது. இதில் வழிகாட்டு மதிப்பு, சந்தை மதிப்பு என இரு மதிப்புகள் உள்ளன. வழிகாட்டு மதிப்பை அரசுதான் நிர்ணயிக்கிறது. இதில் சந்தை மதிப்பும் வழிகாட்டு மதிப்பும் நூல் பிடித்தால்போல் ஒரே கோட்டில் இருந்தால் கறுப்புப் பணம் குறையும். முத்திரைத் தாள் வருவாய் மூலம் நிதி நிலைமை அதிகரிக்கும். வருவாயும் கூடும். இதில் எந்தவித ஊழலும் லஞ்சமும் இல்லாமல் வசூலித்தால் அரசுக்கு நிச்சயமாக வருவாய் கிடைக்கும்.
தமிழகத்தில் நாளுக்குநாள் வாகனங்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் பெருகி வருகிறது. அவற்றின் மீதான வரியை வசூலிப்பதில் அரசு ஒழுங்காக கவனம் செலுத்தினால் வருவாய் பெருகும். மது இல்லாத குஜராத்தில் நிதி நிலைமையைக் கட்டுக்குள் வைத்திருக்கிறார்கள் என்றால், அவர்கள் இதுபோல வரி வசூலில் அதிக கவனம் செலுத்துகிறார்கள். அதே கவனம் நம்முடைய அரசுக்கும் தேவை. தேங்கி இருக்கும் இத்தகைய வரி வசூலை சரி செய்தாலே அரசு கஜானா நிரம்பி வழியும். முத்திரைத் தாள் வரி, வாகன வரி, கலால் வரியை முறையாக வசூலித்தால் வருவாய் பெருகும்.
தமிழ்நாட்டில் அரசியல்வாதிகள் நடத்தும் மது லாபியில் இருந்து மீண்டால்தான் பாதிப் பிரச்னை குறையும். மதுபானத்தை வாங்குவதற்கு இன்டர்நேஷனல் டெண்டர்விட வேண்டும். இதில் குறைந்த விலைக்கு யார் டெண்டர் எடுக்கிறார்களோ, அவர்களுக்குக் கொடுக்க வேண்டும். இதில் இரண்டு நன்மைகள் உள்ளன. குறைந்த விலை, அதிக தரம். இந்த மது லாபியில் இருந்தும் வெளிவரலாம். மதுக்கடைகளை மெள்ள மெள்ள மூடுவதற்கு இந்த இன்டர்நேஷனல் டெண்டர்கள்தான் உதவும்.
முக்கியமாக, 25 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்குத்தான் மது வழங்கப்படும் என்று அரசு அறிவிக்க வேண்டும். அதில் அரசு உறுதியாக இருக்க வேண்டும். அதற்கான அனுமதியை ஆன்லைனிலேயே பதிவுசெய்து லைசென்ஸ் பெற வைக்கலாம். இதன் மூலமாக, ஒரு நபர் எவ்வளவு குடிக்கிறார் என்பதும் தெரியவரும். அதிகமாகக் குடிக்கும் நபர்களைப் பிரித்து எடுத்து, மருத்துவ உதவிகள் வழங்கி மதுவின் பிடியில் இருந்து அவர்களை மீட்கவும் இது உதவும். 25 வயதுக்கு உட்பட்டவர்களை குடியில் இருந்து தடுக்கவும் முடியும்.
தமிழகத்தில் உள்ள பார்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும். பார்களை மூடினாலே பாதிப் பிரச்னை முடிவுக்கு வந்துவிடும். பார்கள் இருப்பதால்தான் பலர் வெளியே வந்து குடிக்கிறார்கள். இனி வீட்டில் மட்டுமே குடிக்க முடியும் என்ற நிலை வந்துவிட்டால், மது அருந்துபவர்களின் எண்ணிக்கை குறையும். மதுக்கடைகள் முன்பாக ஒரு காவலரை நியமிக்க வேண்டும். யாராவது மது வாங்கி டாஸ்மாக் வாசலிலேயே குடித்தால் காவல் துறை அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒவ்வொரு கிராமத்துக்கும் கிராம சபை உள்ளது. ஒவ்வோர் உள்ளாட்சி அமைப்பும் கிராம சபையைக் கூட்டி, எந்த இடத்தில் மதுக் கடையை வைக்கலாம்? எத்தனை மதுக் கடைகளை வைக்கலாம்? என்று மக்களிடம் நேரடியாகக் கேட்க வேண்டும். இந்த டாஸ்மாக் கடைகளை நிர்ணயிப்பது மக்களாக இருக்க வேண்டும். இதனால், மதுக் கடைகளின் எண்ணிக்கையை குறைக்க முடியும்.
தற்போது, விலையில்லா அரிசியை மக்களுக்கு அரசாங்கம் வழங்கி வருகிறது. இது அரசுக்கு பெரிய நிதிச்சுமைதான். மதுக்கடைகள் மூடப்பட்டால் விலையில்லா அரிசி கொடுப்பதற்கான அவசியமே அரசுக்கு எழாது. காரணம், வருவாய் முழுவதும் மதுவுக்கு செலவு செய்வதால்தான் குடும்பத்துக்கு அரிசி வாங்குவதற்குக்கூட காசு இல்லாமல் தமிழன் வாழ்கிறான். நீங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மதுக் கடைகளை மூடும்போது, அவனுடைய தேவைகளை சுயமரியாதையோடு அவனே பார்த்துக்கொள்வான். இது, மதுவிலக்கு அமல்படுத்தப்படுவதால் கிடைக்கும் முதல் நன்மை. அதனால், விலையில்லா அரிசி வழங்கும் திட்டத்தை மாற்றி வருமானம் பெறலாம்.
தமிழகத்தில் மணல் குவாரி, கிரானைட், கார்னெட் மூலமாகத்தான் பணம் கொட்டுகிறது . இந்த மூன்றிலும் அடிக்கப்படும் கொள்ளைகளை நிறுத்தினாலே, டாஸ்மாக் மூடுவதால் ஏற்படும் இழப்பை எளிதாக ஈடுகட்டிவிடலாம். ஒரு பக்கம் வருவாயைப் பெருக்கிக்கொண்டே, மறுபக்கம் டாஸ்மாக் விஷச் சூழலில் சிக்கி இருப்பவர்களை மீட்க முடியும். இழப்பையும் மெள்ள மெள்ள சரி செய்துகொள்ள முடியும். இப்படித்தான் பூரண மதுவிலக்கை வெற்றிகரமாக அமல்படுத்த முடியும். ஒரே நாளில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தினால் அதன் நோக்கமே சிதைந்துவிடும்.
மதுவுக்கு அடிமையான ஒருவரை உடனே குடியை நிறுத்தச் சொன்னால், அவர் உடம்பில் எதிர் விளைவுகள்தான் ஏற்படும் என்று மருத்துவத் துறை சொல்கிறது. அவர் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் மாற்றி களம் அமைப்பதற்குப் படிப்படியாகச் செல்வதுதான் சரியானது. தற்போது காலை 10 மணியில் இருந்து இரவு 10 மணி வரை டாஸ்மாக் இயங்குகிறது. இதை மதியம் 2 மணியில் இருந்து மாலை 6 மணி வரைதான் செயல்படுத்த வேண்டும். ஒவ்வொரு மாதமும் பீர், பிராந்தி என்ற மது வகைகளை கணக்கு வைத்துக்கொண்டு, மாதா மாதம் இதன் எண்ணிக்கையை படிப்படியாகக் குறைக்க வேண்டும். இந்த மாதம் 20 லட்சம் விஸ்கி பாட்டில் வாங்கி இருந்தால், அடுத்த மாதம் 15 லட்சம்தான் வாங்க வேண்டும். அதற்கு அடுத்த மாதம் 10 லட்சம், 5 லட்சம் என குறைக்க வேண்டும். இப்படிச் செய்தால் மதுவின் பிடியில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டுவிடலாம்.
தமிழகத்தில் 6,800 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதில், விரும்பியோ விரும்பாமலோ டாஸ்மாக்கில் 30,000 பேர் வேலை செய்கிறார்கள். உடனே மூடினால் இவர்களுக்கு வேலை இழப்பு ஏற்படும். பார்களில் வேலை செய்பவர்கள், மது பார்களுக்கு உபபொருட்களை சப்ளை செய்பவர்கள் என்று பார்த்தால், கிட்டத்தட்ட மதுக் கடைகளை மூடுவதன் மூலம் ஒரு லட்சம் பேர் வாழ்வாதாரத்தை இழப்பார்கள். அதனால், டாஸ்மாக் கொஞ்ச கொஞ்சமாக மூடும்போது, இதில் வேலை இழப்பவர்களை அரசுத் துறைகளில் உள்ள காலி இடங்களில் நிரப்பிக்கொள்ளலாம்.
பூவில் வண்டு உட்கார்ந்து தேன் அருந்தும்போது, வண்டும் பசியாற வேண்டும். பூவுக்கும் நோகக் கூடாது. வண்டுக்கும் தேன் தேவை. பூவுக்கும் மகரந்தச் சேர்க்கை நடைபெற வேண்டும். இரண்டுக்குமே பயன் ஏற்பட வேண்டும். இதே மாதிரிதான், டாஸ்மாக் விஷயத்திலும் நடந்துகொள்ள வேண்டும். இதில், முரட்டுத்தனமாக முடிவெடுக்கக் கூடாது. வேண்டுமென்றால், பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து மக்களை ஏமாற்றி பதவிக்கு வரலாம். அதன் பிறகு, மதுவிலக்கை எப்படி அமல்படுத்துவது என்று தெரியாமல் ஆப்பசைத்த குரங்குபோலத்தான் அந்த ஆட்சியாளர்கள் இருப்பார்கள்’ என்று முடித்தார்.
– நா.சிபிச்சக்கரவர்த்தி
One Comment
sankar
அருமையான விளக்கம்.