திருப்பூர்
தமிழக அரசு பூரண மது விலக்கை அமல்படுத்தா விட்டால் அனைத்து மக்களும் வீதிக்கு வந்து போராடும் சூழ்நிலை ஏற்படும் என்று காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்தார்.
காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் திருப்பூரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தமிழகம் இதுவரை கண்டிராத வகையில் தஞ்சை டெல்டா பகுதியில் 11 விவசாயிகள் தற்கொலை செய்து உள்ளனர். இந்த அவலமான முடிவுக்கு காவிரியில் இருந்து தண்ணீர் தராத கர்நாடகா அரசும், நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிடாத மத்திய அரசும் தான் காரணம்.
நிவாரண நிதி
எனவே தற்போது கண்ணீ ரோடு நிற்கும் விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு பாதுகாப்பு அளிக்கும் பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது. தமிழக அரசு நிதி அமைச்சர் தலைமையில் ஒரு குழு அமைத்துள்ளது. இந்த குழு டெல்டா விவசாயிகளின் பாதிப்பை நேரில் அறிந்து நிவாரணம் வழங்க உள்ளது. அந்த நிவாரணத்தை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 1 ஏக்கருக்கு ரூ.25 ஆயிரமாக வழங்க வேண்டும் என்று காந்திய மக்கள் இயக்கம் கேட்டுக்கொள்கிறது.
தமிழகத்தில் நிலவி வரும் கடும் மின் பற்றாக்குறையை போக்க மத்திய அரசு முன் வரவேண்டும். நெய்வேலியில் உற்பத்தியாகும் 2700 மெகா வாட் மின்சாரம் முழுவதையும், மின் பற்றாக்குறை தீரும் வரை தமிழ்நாடே பயன்படுத்திக் கொள்ள மத்திய அரசு வழிவகுக்க வேண்டும். மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தி.மு.க. இதற்காக மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.
ரெயில் கட்டணம் உயர்வு
பெட்ரோல், டீசல் விலை உயர்வு, கியாஸ் சிலிண்டர் எண்ணிக்கையை 6 ஆக குறைத்தது போன்ற செயல் களால் மத்திய அரசு ஏழை மக்களுக்கு எந்த உதவியும் செய்வதில்லை என்று முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் ரெயில் கட் டணத்தையும் உயர்த்தி விட் டது. எனவே ஏறிக்கொண்டே போகும் பெட்ரோல், டீசல் விலை தடுக்கப்பட வேண்டும். ஆண்டுக்கு 9 கியாஸ் சிலிண் டர் வழங்க வேண்டும். ரெயில் கட்டண உயர்வு வாபஸ் பெற வேண்டும் என்று மத்திய அரசை காந்திய மக்கள் இயக்கம் கேட்டுக்கொள் கிறது.
பூரண மதுவிலக்கு
அன்றாடம் தமிழகத்தில் பாலியல் வன்முறைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கு முழு காரணம் மதுபானம் தான். தமிழ்நாட்டில் தான் வாகன விபத்துகள் அதிக அளவில் நடக்கின்றன. அதற்கு காரணம் மதுதான். எனவே முக்கிய சாலைகளின் அருகில் உள்ள மதுபானக் கடைகளை மூடுவது என்று முடிவு எடுத்துள்ள முதல் அமைச்சர் பூரண மதுவிலக்கை கொண்டு வந்து தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை காக்க வேண்டும்.
பூரண மதுவிலக்கு கோரி வைகோ நடைபயணம் மேற் கொண்டு வருகிறார். பாட்டாளி மக்கள் கட்சி மதுக்கடை களுக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்தி வருகிறது. மனித நேய மக்கள் கட்சி ஒரு கோடி மக்களை சந்தித்து மதுவை ஒழிக்க வேண்டும் என்று பிரசாரம் செய்து வருகிறது. காந்திய மக்கள் இயக்கம் 20 லட்சம் கையெழுத்து பட்டியலை பிப்ரவரி மாதம் முதல்அமைச்சரிடம் அளிக்க உள்ளது.
மதுவிலக்கை விரைவாக மாநில அரசு கொண்டு வர தவறினால் மதுவிலக்குக்காக போராடும் தனித்தனி இயக்கங்கள் ஒன்றிணைந்து லட்சக்கணக்கான மக்களை மாநிலம் முழுவதும் திரட்டி, வீதியில் நிறுத்தி போராடும்.
இவ்வாறு தமிழருவி மணியன் கூறினார்.
தினத்தந்தி 13-01-2013