திருப்பூர்: இளம் தலைமுறையை சீரழிக்கும் மதுவை அரசாங்கமே விற்பது சமூகச் சீரழிவிற்கு வழிவகுக்கும் என்று காந்தீய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.
சுவாமி விவேகானந்தரின் 150 வது பிறந்நாள் விழா திருப்பூரில் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழருவி மணியன் பங்கேற்றுப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் இன்றைக்கு விவேகானந்தரின் 150 வது ஆண்டு விழா கொண்டாடப்படுகிறது. ஆனால் விவேகானந்தரின் அறிவுரைகளை எத்தனைபேர் பின்பற்றுகிறார்கள் என்பது தெரியவில்லை. அவர் அன்பையும், பொறுமையையும் போதித்தார். உலக உயிரிகளிடத்து அன்பு கொள்ளவேண்டும் என்றார்.
துறவு பற்றி அவர் கூறியது இன்பங்களை துறப்பது பற்றித்தானே தவிர இல்லற வாழ்க்கையை துறப்பது பற்றி அல்ல. ராமனைப் போல சீதாவைப் போல வாழவேண்டும் என்று விவேகானந்தர் வலியுறுத்தினார். ஆனால் இன்றைக்கு காம இச்சையால் பல ஆண்கள் பெண்களை பாலியல் வன்முறைக்கு ஆளாக்குகின்றனர்.
ஒரு ஆண் தன்னை விட ஒருவயது மூத்த பெண்ணை தாயாகவும், ஒரு வயது இளைய பெண்ணை தமக்கையாகவும் கருதவேண்டும். அப்படி கருதியிருந்தால் தலைநகர் டெல்லியில் நடந்ததைப் போல பாலியல் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றிருக்காது என்றார்.
பெண்களுக்கு கல்வி கற்பித்தால் அவர்கள் எல்லா விதத்திலும் முன்னேறுவார்கள். அவர்களின் வாழ்க்கைத்தரம் உயரும். அதுபோன்ற கல்வி கற்பதற்காக சென்ற ஏழைச் சிறுமியை மது போதையில் சீரழித்து கொலை செய்த சம்பவமும் நம் தமிழ்நாட்டில் தூத்துக்குடியில் நடைபெற்றுள்ளது.
இன்றைக்கு மது விற்பனையில் சாதனை புரிந்து விட்டதாக தமிழக அரசு புள்ளி விபரம் தெரிவிக்கிறது. புத்தாண்டை விட பொங்கலுக்கு அதிக அளவில் மது விற்பனை செய்து விட்டதாக தெரிவிக்கின்றன. இதனால் அரசின் வருமானம் உயர்ந்துவிட்டதாக மார் தட்டிக்கொள்கின்றனர். அந்த மதுவை குடித்து விட்டு இளம் சிறார்களும் கூட பாலியல் வன்முறையில் ஈடு படுகின்றனர். பாலியல் வன்முறையை தடுக்க வீதி தோறும் விலைமாதர் விடுதிகளை அரசாங்கம் திறக்குமா? அப்புறம் பாலியல் வன்முறை நடைபெறாதே. அரசுக்கு வருமானம் கிடைக்கும்.
ஒரு பெண் பாலியல் வன்முறை செய்யப்பட்டால் என்பதற்காக நாடு முழுவதும் கொதித்தனர். அதே ஈழத்தில் ஆயிரக்கணக்கான தமிழ் பெண்கள் பாலியல் வன்முறை செய்யப்பட்டனர். அப்போது எங்கே போனது அன்பு, மனித நேயம் எல்லாம்.
விவேகானந்தர் பணத்தை ஒருபோதும் விரும்பியதில்லை. அவரை நேசித்த தேசத்தலைவர்கள் மகாத்மா காந்தி, பாரதியார் போன்றோர் யாருமே பணத்தை ஒரு பொருட்டாக மதித்ததில்லை. ஆனால் இன்றைக்கு பணம் சம்பாதிப்பதற்காக பல அரசியல்வாதிகள் சுயநலத்தோடு செயல்படுகின்றனர். பணத்தை விரும்பாத காந்தியின் படத்தை ரூபாய் நோட்டில் போட்டிருக்கின்றனர். அதை மதுக்கடைக்கு எடுத்துப்போய் குடிக்கின்றனர். காந்தியை ஒருமுறைதான் கோட்ஷே சுட்டுக்கொன்றான். ஆனால் நம் நாட்டு ‘குடி மகன்கள்’ தினம் தினம் காந்தியை கொலை செய்கின்றனர்.
மதுதான் இன்றைக்கு பல பிரச்சினைகளுக்கு காரணமாக இருக்கிறது. எனவே மது விற்பனையை அரசு தடை செய்யுமா?. விவேகானந்தரின் 150 வது பிறந்தநாளை கொண்டாடும் இந்த நாளில் வருங்கால சமுதாயத்தினருக்கு விவேகானந்தின் கதைகள், அறிவுரைகளை கற்பிக்க வேண்டும் என்றும் காந்திய மக்கள் இயக்கத்தலைவர் தமிழருவி மணியன் கேட்டுக்கொண்டார்.