மக்கள் கூட்டணியில் காந்திய மக்கள் இயக்கம் தொடர்ந்து அங்கம் வகிக்க விரும்பவில்லை
இடதுசாரி இயக்கம் முன்னின்று உருவாக்கிய மக்கள் நலன் சார்ந்து போராடுவதற்காக அமைக்கபட்ட கூட்டணியில் காந்திய மக்கள் இயக்கம் தொடர்ந்து அங்கம் வகிக்க விரும்பவில்லை.
சட்டப்பேரவைத் தேர்தல் வருவதற்கு இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில் ஆட்சியாளர்களின் தவறுகளைக் கண்டித்துப் போராடுவதற்கு உருவாக்கப்பட்ட இந்த மக்கள் கூட்டணி தேர்தல் கூட்டணியாக மற்றம் அடைவதுதான் இயல்பானது. ஆனால், மக்கள் கூட்டணிக்கும் தேர்தல் கூட்டணிக்கும் சம்மந்தமில்லை என்று சொல்வது சில சந்தேகங்களுக்கு இடமளிக்கிறது.
மக்கள் கூட்டணியில் இன்று இடம் பெற்றுள்ள கட்சிகள் நாளை தி.மு.க.வோடு சேர்ந்து நின்று தேர்தலைச் சந்திப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. இரண்டு திராவிடக் கட்சிகளின் பிடியிலிருந்து தமிழகம் விடுபடவேண்டும் என்பதே காந்திய மக்கள் இயக்கத்தின் விருப்பமாகும். தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., ஆகியவற்றுடன் எந்த நிலையிலும் வரவிருக்கும் தேர்தலில் சேர்ந்து நிற்க மாட்டோம் என்று மக்கள் கூட்டணியில் இடம் பெற்றிருப்பவர்கள் வெளிப்படையாக வாக்குமூலம் வழங்கினால் மட்டுமே அவர்கள் நடத்தவிருக்கும் போராட்டங்களில் காந்திய மக்கள் இயக்கம் பங்கேற்கும்.
தேர்தல் வரும்வரை இரண்டு திராவிடக் கட்சிகளை எதிர்ப்பதும், தேர்தல் நேரத்தில் இரண்டில் ஒன்றுடன் அணி சேர்வதும் தமிழகத்தில் உள்ள கட்சிகளின் வழக்கமாக ஆகிவிட்டது. காந்திய மக்கள் இயக்கம் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் தனியாகவே களம் காணவிருப்பதால் எக்கட்சிகளுடனும் கைகோர்த்து நிற்கும் நிலையில் இல்லை.
காந்திய மக்கள் இயக்கம் வேட்ப்பாளர்களை நிறுத்தாத தொகுதிகளில் மட்டும் இடதுசாரிகளையும் மற்றும் தகுதி மிக்க வேட்பாளர்களையும் ஆதரிக்கும். மதுவிலக்கு முதல் அனைத்து போராட்டங்களையும் இந்த அரசுக்கு எதிராக சட்டதிற்குட்பட்டு காந்திய மக்கள் இயக்கம் தனியாகவே நடத்தும்.