சென்னை:
மதுக்கடைகளை மூடாவிட்டால் அரசுக்கு வரி செலுத்தாத போராட்டம் நடத்தப்படும் என்று காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் அறிவித்துள்ளார். தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி காந்திய மக்கள் இயக்கம் சார்பில் இன்று காலை பிராட்வே பஸ் நிலையத்தில் கையெழுத்து இயக்கம் நடந்தது. தலைமை நிலைய செயலாளர் இனியன் ஜான், மாநில செயலாளர் பா.குமரய்யா ஆகியோர் தலைமை தாங்கினர். கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்து நிறுவன தலைவர் தமிழருவி மணியன் பேசியதாவது: தமிழகத்தில் மதுக்கடைகளை மூட வேண்டும். பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் 1 கோடி பேரிடம் கையெழுத்து பெறும் பணி வேகமாக நடந்து வருகிறது. இதுவரை 50 லட்சம் பேரிடம் கையெழுத்து பெறப்பட்டுள்ளது. அக்டோபர் 2ம் தேதிக்குள் தமிழகத்தில் மதுக்கடைகளை அரசு மூடும் என்று எதிர்பார்க்கிறோம். இல்லாத பட்சத்தில் மக்களை திரட்டி மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும். மேலும் அரசுக்கு சொத்து வரி, குடிநீர் வரி உள்ளிட்ட எந்த வரியும் கட்டக் கூடாது என்பதை வலியுறுத்தி மக்களிடம் பிரசாரத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில் நடிகர் ஞானமணி, மாவட்ட செயலாளர் சின்னமலை செல்வமணி, தாமஸ், சதீஷ், மகேந்திரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.