மதுவற்ற மாநிலமாக, தமிழகம் மலர்ந்திட தொடர் நடவடிக்கைகள் – மகாத்மா காந்தி பிறந்த நாள் – கர்ம வீரர் காமராஜர் நினவு நாள் (02 10 2014) – தமிழகம் முழுவதும் மதுவிலக்கு வேண்டி 1000 கிமீ பாதயாத்திரை செல்ல உள்ளோம். ஆதரவு தருக:
கடந்த ஆகஸ்ட் 16 அன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து காந்திய மக்கள் இயக்கத் தொண்டர்கள் பல்லாயிரக்கணக்கில் திரண்டு வந்து மதுவுக்கு எதிரான முதற்கட்டப் போராட்டத்தை சென்னையில் நடத்தியிருக்கிறார்கள். காந்திய மக்கள் இயக்கத்தின் முதல் லட்சியமான மதுவற்ற மாநிலம் என்ற இலக்கை அடையும் வரையில், இடைவிடாமல் பொது மக்களைத் திரட்டி, களத்தில் இறங்கிப் போராடுவோம். இனி மாவட்டம்தோறும், மது விலக்கில் நாட்டமுள்ள அரசியல் இயக்கங்களுடன் இணைந்து கூட்டுப் போராட்டங்கள் நடத்திட வியூகம் அமைக்கப்படும்; மது விலக்குப் போராட்டம் வெகு மக்கள் இயக்கமாக வளர்த்தெடுக்கப்படும்
பாரம்பரியப் பண்பாட்டு விழுமியங்கள் பாழ்பட்டுப் போவதைப் பொருட்படுத்தாமல், மது வருவாயைப் பெருக்கும் வழிமுறைகளில் ஈடுபடுவதைக் கைவிட்டு, மது விலக்கில் இனிமேலாவது, தாயாகப் போற்றப்படும் தமிழக முதல்வர் ஜெயலலிதா தீவிர கவனம் செலுத்த வேண்டும். 2016 சட்ட மன்றத் தேர்தலில், மது விலக்கையே மையப் பிரச்சினையாக மாற்ற அனைத்து முயற்சிகளிலும் காந்திய மக்கள் இயக்கம் ஈடுபடும்.