வாக்குறுதிகளை வழங்குவதும், பின்பு அவற்றிற்கு நேர்மாறாக நடப்பதும் கருணாநிதியின் கடந்த காலச் சரித்திரம் என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள் என்று காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”திமுக வரவிருக்கும் சட்டப் பேரவை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கு நடைமுறைப்படுத்தபடும் என்று கருணாநிதி அறிவித்திருக்கிறார்.
ஆட்சி நாற்காலியைக் கைப்பற்றுவதற்கு அனைத்து வழிகளிலும் முயற்சியை மேற்கொண்டிருக்கும் கருணாநிதி, மக்களை ஏமாற்றும் தேர்தல் உத்திகளுள் ஒன்றாகவே இந்த அறிவிப்பும் இருக்கக்கூடும்.
கொட்டும் மழையில் இராஜாஜி கோபாலாபுரத்து வீடு தேடி வந்து கண்கள் கலங்கியபடி, மதுவிலக்கை ரத்து செய்து ஒரு சமுதாயத்தையே சாராயத்தின் மூலம் சீரழித்துவிட வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தபோது செவி சாய்க்காதவருக்கு இன்று திடீர் ஞனோதயம் எப்படி வந்தது?
பூரண மதுவிலக்கை கருணாநிதி உண்மையில் நடைமுறைப்படுத்த விரும்பினால் நாட்டு மக்களுக்கு ஒரு விளக்கத்தைத் தர வேண்டும். தமிழக அரசின் ஆண்டு வருவாய் ஒரு லட்சத்து நாற்பத்தாராயிரம் கோடி ரூபாய். இதில் மானியம், இலவசம், அரசு ஊழியர் ஊதியம், ஓய்வூதியம், வாங்கிய 2 லட்சம் கோடிக்கும் மேற்பட்ட கடனுக்கு வட்டி ஆகிய செலவினங்களுக்கு ஒதுக்கப்படுவது 1.36 ஆயிரம் கோடி. வளர்ச்சித் திட்டங்களுக்கு எஞ்சுவது 6000 கோடி ரூபாய்க்கும் குறைவு.
இந்த நிலையில் டாஸ்மாக் வருவாய் 26000 கோடி ரூபாய் இழப்புக்குப் பின்பு அதை எந்த வகையில் ஈடு செய்து அரசின் நிதி நிலையை மேம்படுத்துவார் என்பதை அவர் முதலில் விரிவாக விளக்க வேண்டும்.
தன் ஆட்சிக் காலத்தில் மதுவிலக்குக் கொள்கையில் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டவர் இல்லை கருணாநிதி. இன்று பூரண மதுவிலக்கைக் கொண்டுவருவதாகச் சொல்லி ஆட்சியில் அமர்ந்த பின்பு கள்ளச் சாராயச் சாவுகளையும் நிதி நிலை நெருக்கடிகளையும் காரணங்களாகக் காட்டி மீண்டும் மதுக்கடைகளை திறக்க மாட்டார் என்பதற்கு என்ன உத்திரவாதம் ?
வாக்குறுதிகளை வழங்குவதும், பின்பு அவற்றிற்கு நேர்மாறாக நடப்பதும் கருணாநிதியின் கடந்த காலச் சரித்திரம் என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்” என்று தமிழருவி மணியன் கூறியுள்ளார்.
Soruce: http://tamil.thehindu.com/